Published : 14 Dec 2019 11:30 AM
Last Updated : 14 Dec 2019 11:30 AM

புதிய பறவை 15: திரும்பி வந்த நீலப்பறவை

வி. விக்ரம்குமார்

கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்ஹோளே தேசியப் பூங்காவை அதிகாலையில் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அந்தப் பகுதிக்குச் சென்றடைந்திருந்தேன். ஏதோ ஒரு காரணத்தால் ‘இன்று மட்டும் காலை சஃபாரி இல்லை’ என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஏமாற்றம் மேலோங்கியிருந்த மனத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக அருகிலிருந்த வாசனைமிக்க காட்டுப் பாதைக்குள் நுழைந்தேன்.

அடர்ந்த காடு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, நிறைய மரங்கள் ஒன்றோடொன்று கைகோத்திருந்தன; மே மாதக் காடு என்பதால் சில பகுதிகள் பசுமையாகவும், சில பகுதிகள் வறண்ட மரங்களையும் கொண்டு காட்சியளித்தன. பசுமையான இலைகள் காற்றின் தீண்டலுக்குத் தலையசைக்க, வறண்டிருந்த இலைச் சருகுகள் அசைவுக்குப் பதமாக ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன.

துறுதுறு பறவை

இலைகளின் நடனத்தையும் பாடலையும் ரசித்துக் கொண்டிருந்தபோது, வறண்ட மரக்கிளை ஒன்றில் அழகான சிறிய பறவை ஒன்று வந்தமர்ந்தது. என்ன பறவை என்று சரியாகப் பார்ப்பதற்கு முன்பாகவே துறுதுறுவெனப் பறந்து மறைந்தது. குரலொலி ஏதும் எழுப்பாமல் இலை மறைவுக்குள் உட்புகும் சலன ஓசையை மட்டும் ஏற்படுத்திவிட்டு அது ஒளிந்துகொண்டது.

என்னை விட்டு அகன்ற பறவை, நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் மனது வறண்டிருந்தது. வறட்சிக்கு நீரூற்றும் விதமாக மீண்டும் வந்த அப்பறவை, வறண்ட சூழலையே அமர்வதற்குத் தேர்ந்தெடுத்தது. வறட்சியாகக் காட்சியளித்த ஒரு மரத்தையே அந்தப் பறவை அதிகமாக விரும்பியது. ஏறக்குறைய மர நிறத்தில் இருந்ததோடு, அந்தப் பறவை துடிப்புடன் செயல்பட்டதால், அதைப் பார்ப்பதற்கும் ஒளிப்படம் எடுப்பதற்கும் மிகவும் கடினமாக இருந்தது.

திரும்ப வந்தது

என்ன நினைத்ததோ தெரியவில்லை… ஒளிப்படம் எடுக்க எவ்வித இடையூறுமில்லாத ஒற்றைக் மரக்கொப்பில் சட்டென வந்து கம்பீரமாக அமர்ந்து, அக்கம் பக்கம் நோட்டமிட்டது. வயிற்றுப் பகுதியில் இலவம் பஞ்சு போன்ற வெள்ளை நிறம்; துருப்பிடித்த இரும்புப் பட்டைபோல் வால் பகுதி; முதுகுப் பகுதியில் ஏறக்குறைய செம்பு நிறம்; வெள்ளைப் பட்டையில் அழுத்தமான கருவிழி; கூர்மையான அலகு; பிடரி, தலைப் பகுதியில் சாம்பல் நிறம்; அழகிய சிறு உருவம். பசுமையான புதருக்குள் சென்று மறைந்தது அந்த வெண்வயிற்று நீல ஈப்பிடிப்பான் (White-bellied blue flycatcher).

பறவையின் உடல் நிறத்துக்கும் உலர்ந்த பகுதிக்கும் அதிகமாகவே நிற ஒற்றுமை இருந்தது. எதிரிகளிடமிருந்து தப்பிக்க உருமறைத் தோற்றம் எனும் இயற்கை உபாயத்தை அது பயன்படுத்தியது. உயிர்ச்சூழல் மிகுந்த காட்டில், இரைக்கொல்லிப் பறவைகளிடமிருந்து தப்பிக்கவும் எதிர்பாராமல் நுழைந்த என்னைப் போன்றவர்களிடமிருந்து தப்பிக்கவும் அது உருமறைத் தோற்றத்தை பயன்படுத்தித்தானே ஆகவேண்டும்!

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x