Published : 30 Nov 2019 10:35 AM
Last Updated : 30 Nov 2019 10:35 AM
தாவர சாயங்களில் மிகவும் பழமையானது அவுரி. இண்டிகோ என்று அழைக்கப்படும் இந்த நீல நிறச் சாயம், இண்டிகோ ஃபெராடிங்க்டோரியா என்ற தாவரச் சிற்றினத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இந்தச் சாய மூலப்பொருள், 1815 வாக்கில் உலகின் ஒட்டுமொத்தத் தேவையில் 80 சதவீதம்வரை பூர்த்திசெய்தது.
இந்தியாவில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த இந்தத் தாவரம், 1783-க்குப் பிறகே உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. இந்தியாவிடம் இருந்த இந்தப் பயிரும் அதன் சாய வியாபாரமும் ஐரோப்பியர்களிடம் சென்றது. இந்தியாவிலும் கிழக்கிந்திய கம்பெனி மூலம் இதன் பயிராக்கத்தை பிரிட்டிஷார் தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்.
பிரிட்டிஷாரால் பயிராக்கத்தை மேற்பார்வையிட முடியவில்லை. எனவே, இந்திய உழவர்கள் மூலம் அவுரியைப் பயிரிடத் தொடங்கினார்கள். இது பலனளிக்கவே, அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதில் முழுமூச்சாக இறங்கினார்கள். உழவர்களை ஒடுக்கி லாபம் முழுவதையும் அவர்களே சுருட்டிக்கொள்ள முயன்றார்கள்.
தீன் கத்தியா போராட்டம்
ஒவ்வொரு 20 பிகாவுக்கு (ஒரு ஏக்கரைவிட சற்றுக் குறைவான நிலப்பரப்பு), 3 பிகா என்ற அளவில் (இது ‘தீன்’ என்ற இந்திச் சொல்லால் சுட்டப்பட்டது) உழவர்கள் கட்டாயமாக இண்டிகோவைப் பயிரிட வேண்டும். இது ‘தீன் கத்தியா திட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மேலும், வங்க நில வாடகைச் சட்டமும் இதர சட்டங்களும் இடப்பட்டன.
விளைந்த பயிர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களே விலையை நிர்ணயித்தார்கள். உழவர்களுக்கு அதில் உரிமை இல்லை; மாறாக நிலத்துக்கு அவர்களே வரிகட்ட வேண்டியிருந்தது. உழவர்கள் பெற்ற கூலியும் சொற்பமாக இருந்தது. இதனால் உழவர்கள் அடிக்கடி சிறுசிறு போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
40 லட்சம் இண்டிகோ உழவர்களின் இன்னல்களைச் சொல்லும் ‘நீர் நர்பான்’ என்ற மேடை நாடகத்தை வங்கத்தைச் சேர்ந்த தீனபந்து மித்ரா 1860-ல் எழுதி பல இடங்களில் அரங்கேற்றினார். இது பொதுமக்களிடமும் உழவர்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, உழவர்களிடையே போராட்டத்தை வலுவடையச்செய்தது.
தீவிரமடைந்த நெருக்கடி
வேதிய முறையில் இண்டிகோ சாயமும் அதற்கு மாற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இயற்கை இண்டிகோவின் சந்தை சரிந்தது. இதனால் நிரந்தர, நீண்ட காலக் குத்தகை நிலங்களை வைத்திருந்த பிரிட்டிஷார், தீன் கத்தியா திட்டத்தைத் திரும்பப்பெற முன்வந்தார்கள். ஆனால், இண்டிகோவால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட உழவர்கள் அதிக வாடகை கொடுக்க வேண்டும்.
இதன்மூலம் வாடகை நிரந்தரமாக அதிகரிக்கப்பட்டது, இதைக் கொடுக்க உழவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்; சிலர் சிறையில்கூட அடைக்கப்பட்டார்கள்; அவர்களுடைய கால்நடைகள் பறிக்கப்பட்டன; வீடுகள் சூறையாடப்பட்டன; சொந்த வீடுகளுக்குள் நுழையவும் வெளியேறவும் தடைசெய்யப்பட்டார்கள். அவர்களுடைய திருமணங்களுக்கு முறையற்ற வரிகள் விதிக்கப்பட்டன. இந்த நிலைமை 1916-ம் ஆண்டுவரை தொடர்ந்தது.
காந்தி வந்தார்
இந்தக் கொடுமைகள் தாளாமல், பிஹாரின் சம்பாரணைச் சேர்ந்த ராஜ்குமார் சுக்லா என்ற உழவர், 1916 டிசம்பரில் காந்தியைச் சந்தித்து, லக்னோவில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் இதைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவர வேண்டினார். நிலைமையின் உண்மைத் தன்மையையும் வீரியத்தையும் காந்தி நேரடியாக உணர விரும்பி, 1917 ஏப்ரலில் சுக்லாவுடன் கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு சம்பாரண் சென்றார்.
காந்தி 2,841 கிராமங்களை ஆய்வுசெய்ய விரும்பினார். இது தொடர்பாகப் பயிரிடுவோர் சங்கத்தின் செயலாளரான வில்சன் என்பரை ஏப்ரல் 11 அன்று சந்தித்தபோது, இந்த விஷயத்தில் வெளி ஆளான காந்தி தலையிடக் கூடாது என்று அவர் கூறினார். தான் ஒரு இந்தியன், எனவே இதில் தலையிடத் தனக்கு முழு உரிமை உண்டு என்று கூறி காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
முதல் போராட்டம்
சட்டத்தை மீறியதற்காக ஏப்ரல் 18 அன்று துணைப்பிரிவு அதிகாரிமுன் காந்தி ஆஜராக உத்தரவிடப்பட்டது; ஜாமீனுக்கு அணுகுமாறும் அவருக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது. காந்தி இதை மறுத்துவிட்டார். இந்த வழக்கு நீக்கிக் கொள்ளப்பட்டாலும், காந்தி தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. ஜூன் 12 அன்று காந்தியும் அவருடைய கூட்டாளிகளும் 8,000 கிராமங்களில் ஏறத்தாழ 30,00 உழவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் உழவர்களுக்கு ஆதரவாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றைத் தயாரித்தார்கள்.
காந்தியை உள்ளடக்கிய, பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு விசாரணைக் குழு 1917 அக்டோபர் 3 அன்று இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன்மூலம் தீன் கத்தியா திட்டமும் அதன் காரணமாக நிலச் சொந்தக்காரர்கள் ஏற்படுத்திய பிரச்சினைகளும் சட்டங்களுக்குப் புறம்பானவை என்று பிரிட்டிஷ் அரசு பிரகடனப்படுத்தியது. இதுதான் இந்தியாவில் காந்தி மேற்கொண்ட முதல் சத்தியாகிரகப் போராட்டம்.
- கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT