Published : 23 Nov 2019 11:57 AM
Last Updated : 23 Nov 2019 11:57 AM
சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
ஜெர்மானியப் பொருளாதார அறிஞரும் வேளாண் பண்ணைத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவரும் இயற்கை வேளாண்மை (Soil Association) அமைப்பின் தலைவருமான இ.எப்.ஷிமாஸா, பண்ணைத் தொழிலின் முறைகளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
வேளாண்மை என்பது வாழும் இயற்கையின் மென்மையான பாகமான மனிதனை, மனித வாழ்வை அதன் தொடா்பிலேயே வைத்திருப்பது, அதை மனிதத் தன்மை நிறைந்ததாக ஆக்குவது, உணவுப் பொருட்களையும் இன்ன பிறவற்றையும் வாழ்க்கை என்ற ஒன்றாக மாற்றுவது ஆகும். இதற்குத்தான் வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும்.
மேற்கண்ட மூன்று குறிக்கோள்களில் மூன்றாவது குறிக்கோளை மட்டும் வைத்துக்கொண்டு, முன்னா் கூறிய இரண்டு குறிக்கோளையும் கடுமையான முறையில் சமாளித்துச் செல்லும் நாகரிகம் நீண்ட காலம் நிலைத்திருக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கிராமப்புற அமைப்பை மறுகட்டமைக்கும் கொள்கைகளை நாம் உருவாக்க வேண்டும். விவசாய நிலங்களில் பலனளிக்கும் வகையில் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பணிபுாியும் விதமாக வேளாண்மை மாற வேண்டும். ஆரோக்கியம், அழகு, நிரந்தரம் என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் நிலத்துடனான நமது அனைத்துச் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அதன் பிறகே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கரிம வேளாண்மையில் சாத்தியம்
அவா் குறிப்பிடும் இந்த வேளாண் முறை ஒருங்கிணைந்த பண்ணையம் அல்லது கூட்டுப்பண்ணையம் முறையிலேயே சாத்தியமாகிறது. அதுவும் கூட்டுப்பண்ணைய முறையில் காிம வேளாண்மை மேற்கொள்வது மேற்குறிப்பிட்ட மூன்று குறிக்கோள்களையும் அடைய ஒரு வழி. இது எவ்வாறு சாத்தியமென்றால் கூட்டுப்பண்ணைய முறையில் ஆண்டுதோறும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ பண்ணையில் வேலை என்பது நிரந்தரமானது.
பயிர் சாகுபடி காலத்தில் கால்நடைகளைப் பராமாிப்பதும் பயிர் சாகுபடி அல்லாத காலத்தில் கால்நடைகள் வளா்ப்பது போன்ற வேளாண்மை சார்ந்த சிறுதொழில்கள் மூலம் வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட முறைகளின் வழியாகக் காிம வேளாண்மையை மேற்கொள்ளும் ஒருவா் தனது விளைச்சலைச் சந்தைப்படுத்துவதில் போதிய கவனம் எடுத்தால் மட்டுமே லாபத்தை ஈட்ட முடியும்.
சிறிய அளவிலான காிமச் சாகுபடியில் விளைவித்த விளைபொருளைக் கிராமப்புறச் சந்தைககளிலே விற்றுக் காசாக்க வாய்ப்புண்டு. விளைபொருள் விற்பனைக்கு வரும்போது அது இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை நுகர்வோருக்கு உறுதிபடத் தொிவிக்க வேண்டும். அவ்வாறு தொிவிக்க மூன்றாம் நபா் சான்றளிப்பு அவசியமாகிறது. இந்த மூன்றாம் நபா் சான்றளிப்பானது உற்பத்தியாளருக்கும் நுகா்வோருக்கும் இடைப்பட்ட இடைவெளியைக் குறைக்கிறது, சந்தேகத்தைத் தெளிவுபடுத்துகிறது.
தமிழகத்தில் சான்று
இயற்கைச் சாகுபடி சான்றளிப்பில் அமொிக்க வேளாண்மைத் துறையில் அங்கீகாரம் பெற்ற தனியாா் சான்றளிப்பு நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் உள்ளன. தமிழ்நாடு அரசால் 2007-ம் ஆண்டு முதல் அங்ககச் சான்றளிப்புத் துறையின்கீழ் காிமச் சாகுபடி விளைச்சலுக்கு அங்ககச் சான்றளிப்பு தரப்படுகிறது. தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை குறைந்த கட்டணத்தில் உழவர்களுக்கு அங்ககச் சான்றளிப்பை வழங்குகிறது.
இந்த வகை சான்றளிப்பின்போது சான்றளிப்புத் துறை குறிப்பிடும் வழிமுறைகளை வயல் அளவிலும், விளைவித்த பொருளைப் பாதுகாக்கும்போதும் சிப்பமிடும்போதும் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி இயற்கையாக விளைவித்த விளைச்சலுக்கு அங்ககச் சான்று செய்யப்படுகிறது.
நிலத்தை அல்லது பண்ணையை இந்தச் சான்றளிப்புக்கு உட்படுத்தும்போது முதல் மூன்று ஆண்டு இடைப்பட்ட காலமாகக் கருதி மூன்றாண்டுகளுக்கு எவ்வித வேதியியல் உரங்களோ வேதியியல் சார்ந்த வளா்ச்சி ஊக்கிகளோ பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். அதற்குப் பின்னா் இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சாகுபடிசெய்து விளைச்சலைப் பெற வேண்டும். இந்த விளைச்சலுக்குச் சான்று பெற முடியும்.
தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையில் சிறு உழவர்கள், பொிய உழவர்கள், பெரு நிறுவனங்கள் ஆகியோர் சான்றைப் பெற முடியும். இந்தச் சான்றைப் பெற சிறு உழவர்களுக்கு ஒரு பண்ணைக்கு ரூ.500/-ம் பொிய உழவரகளுக்கு ரூ.1000/-ம் பெரு நிறுவனங்களுக்குப் பண்ணையின் பரப்பளவுக்கு ஏற்ப மாறுபட்ட கட்டணங்களும் வசூலிக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் முதல் ஆண்டில் செலுத்திய தொகையில் 25 சதவீதத் தொகையை செலுத்திப் புதுப்பித்துக்கொள்வது அவசியம்.
இந்தக் கட்டணம் தவிர அங்ககச் சான்று அலுவலா்கள் நிலங்களை ஆய்வு செய்யும்போதும் விளைபொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போதும் பகுப்பாய்வுக் கட்டணங்களும் சான்றளிப்புத் துறையின் மேற்பாா்வையில் சிப்பங்கள் இடுவதற்கும் தனித்தனியாகக் கட்டணங்கள் உண்டு.
இந்தத் துறையின் சான்று பெறுவது தேசிய அங்ககச் சான்றிதழ் வழங்கும் தர நிா்ணயத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இந்த அங்ககச் சான்று உள்நாட்டிலும் ஐரோப்பிய, சுவிட்சா்லாந்து அங்ககச் சான்றளிப்பு தரநிா்ணய சான்றுக்கு இணையான ஒன்று.
கட்டுரையாளர்கள் தொடர்புக்கு:
palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT