Published : 23 Nov 2019 11:28 AM
Last Updated : 23 Nov 2019 11:28 AM
அக்ஷயா
அதிகரித்துக்கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதல் கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது; இத்துடன் நிலத்தடி நீரின் கணக்கற்ற பயன்பாடும் புகழ்பெற்ற வெனிஸ் நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. ‘கால்வாய்களின் நகரம்' என்று அறியப்பட்ட வெனிஸ், தற்போது முழுமையாக மிதக்கும் நகரமாகிவிட்டது.
2019 நவம்பர் 17 அன்று இத்தாலியின் வெனிஸ் நகரில், அதீதப் புயல் அலையின் காரணமாக ஒரே வாரத்தில் மூன்றாம் முறையாக வெள்ளம் ஏற்பட்டது. சில பத்தாண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. மனிதச் செயல்பாடுகளால் வலுவடைந்துகொண்டிருக்கும் புவி வெப்பமயமாதல் உண்மைதான் என்பதை இவை உணர்த்துகின்றன.
புயலின்போது எழுந்த அலையின் உயரம் 1.4 மீட்டரைக் கடந்ததாக இத்தாலிய வானிலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்; இது இயல்பைவிட மிக அதிகம். இதுபோன்ற தீவிர நிகழ்வுகள், கடல்மட்ட உயர்வைத் துரிதப்படுத்தி, வெனிஸ் நகரின் 50 சதவீதத்தை மூழ்கடித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
அதிகரித்துவரும் ஆபத்து
அலைகளின் போக்கைப் பதிவுசெய்யத் தொடங்கியற்குப் பிந்தைய 147 ஆண்டுகளில் இதுபோன்று 22 நிகழ்வுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. அவற்றில் 1872-ல் இருந்து 1950 வரை ஒருமுறை மட்டுமே ஏற்பட்டுள்ள அதீதப் புயல் அலை, 1951 முதல் 2000 வரை ஒன்பது முறை; 2001-ல் இருந்து 2017 வரை ஏழு முறை; கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை ஆகிய அளவுகளில் ஏற்பட்டுள்ளது. கடைசி மூன்று நிகழ்வுகள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்திருக்கின்றன.
உலக வானிலை ஆய்வு அமைப்பின் தரவுகளைப் பார்க்கும்போது, நவம்பர் 10 வாக்கில் இதுபோன்ற புயல்கள் இத்தாலியின் கடற்பகுதியை ஒட்டி உருவாவது இயல்புதான். ஆனால், இத்தாலியின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 36 பேர் பலியானார்கள். தற்போதைய புயலின் தீவிரத்தால் உருவான மழைப்பொழிவு, இத்தாலியின் மற்ற பகுதிகளிலும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின்போது அட்ரியாடிக் கடலில் இருந்து நகருக்குள் கடல்நீரை காற்று தள்ளியதுதான் வெள்ளம் ஏற்பட்டதுக்கு முதன்மைக் காரணம். இதுபோன்ற நிகழ்வுக்கு ‘அக்வா ஆல்டா’ என்று பெயர்.
என்ன காரணம்?
மனிதச் செயல்பாடுகளாலும், அதோடு இணைந்த மற்ற வளர்ச்சித் திட்டங்களாலும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம் பருவநிலை மாற்றம் தீவிர புயல்களை அடிக்கடி உருவாக்கி, கடல்மட்டத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கட்டிடப் பணிகள், நிலத்தடி நீர் அளவுக்கு மீறி உறிஞ்சப்படுவது, கடல் அரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும்.
பருவநிலை மாற்றம் கடல், பனிப்படலத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதை விளக்கும் சிறப்பு அறிக்கையைக் கடந்த செப்டம்பர் மாதம் ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) வெளியிட்டது. உயர் அலை, தீவிரப் புயல் போன்ற கடல் சார்ந்த அதிதீவிர நிகழ்வுகள் வரும் காலத்தில் அடிக்கடி நிகழ இருப்பதற்குக் கடல் மட்ட உயர்வு காரணமாக இருக்கப் போகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உடனடி கவனம் தேவை
வெப்பநிலையில் கூடுதல் உயர்வு ஏற்படும்போது, கடந்த காலத்தில் நூற்றாண்டுக்கு ஒருமுறை என்ற அளவில் ஏற்பட்ட இதுபோன்ற நிகழ்வுகள், 2050-க்குள்ளாகவே ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். கடலை ஒட்டி தாழ்வாக அமைந்திருக்கும் நகரங்கள், சிறிய தீவுகள் ஆகியவற்றுக்கு இது அதிகரித்துவரும் ஆபத்து என்றும் அந்த அறிக்கை விளக்குகிறது.
புயல், வெள்ளம் ஆகியவற்றுக்கு மேம்பட்ட தாங்குதிறனைக் கொண்டிருக்காத வெனிஸ் நகரம், அவற்றை எதிர்கொள்வதற்கு 1996-ல் இருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த வாரம் ஏற்பட்டிருக்கும் இந்த அதிதீவிர நிகழ்வுகள், காலநிலைத் தகவமைப்பு என்பதை எதிர்காலத் திட்டமாக அல்லாமல், உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய அவரசத்தைத் தெளிவுபடுத்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT