Published : 05 Oct 2019 11:22 AM
Last Updated : 05 Oct 2019 11:22 AM

விதை முதல் விளைச்சல் வரை 03: உழவில் கவனிக்க வேண்டியவை

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

நொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப்படும்.

உழவின் பெருமையை திருவள்ளுவரைத் தவிர வேறு யாராலும் தெளிவுபடக் கூற முடியாது. வள்ளுவரின் கூற்றுப்படி வேளாண்மையில் ஈடுபடும் உழவர், ஒரு பலம் அளவிலான புழுதியைக் கால் பலம் ஆகும்படி உழுது காய விட்டால், ஒரு பிடி எருகூட இட வேண்டிய அவசியமில்லை என எடுத்துரைத்திருக்கிறார். இதன் உள் அர்த்தம் குறிப்பிட்ட இடைவெளியில் நிலத்தை ஆழமாக உழுவதன் பயனாக நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள், பயன்தரும் மண்புழுக்களின் செயல்பாடு அதிகரிக்கும், அதன் அடிப்படையில் மண்ணின் அங்ககத்தன்மையும் காற்றோட்டமும் அதிகரிக்கும், இதன் காரணமாக வெளியிலிருந்து அந்நிலத்துக்கு இட வேண்டிய உரங்களின் தேவை குறையும் என்பதே.

வழக்கமாக, கோடை காலத்தில் பெய்யும் மழை தரும் ஈரப்பதத்தில் உழவர்கள் கோடை உழவு செய்வது கண்கூடு. நவீன காலத்தில் அவசரஅவசரமாகப் பல பயிர்களை அடுத்தடுத்து சாகுபடி செய்வதாலும், முன்கூட்டியே திட்டமிட்டு உழவுப் பணிக்கு ஏற்பாடு செய்யாமல் போவதாலும், வேலையாட்கள் கிடைக்காமலும் உரிய உழவுக்கருவிகள் கிடைக்காததன் காரணமாகவும் பயிருக்கேற்றபடி நிலத்தின் உழவு அமையாமல் போவதும் தவிர்க்க இயலாதது.

இந்நிலையில் உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேற்கொள்ளப்படும் விதைப்பு, பயிர் விளைச்சலில் முழுப் பயன் தராது. உழவின் தன்மை பயிருக்குப் பயிர் மாறுபடும். பெரிய விதைகளைக் கொண்ட பயிருக்கு உழவின் அளவு குறைவானதாக இருந்தாலும், பயிர் முளைத்து வெளிவரும். ஆனால், மிகச் சிறிய அளவே கொண்ட விதைகளான எள், சிறுதானியங்கள், கம்பு, குதிரைவாலி, வரகு, சாமை போன்ற பயிர்களுக்கு மண்ணின் பொலபொலப்பு தன்மை கூடுதலாகவும், கட்டிகள் சிறிதளவும் இல்லாமல் இருப்பதே சிறந்த உழவு.

சமீப காலமாக காளை மாட்டு இணை, ஏர்க் கலப்பைகளின் பயன்பாடு உழவுப் பணியில் பேரளவு குறைந்து, தற்போது டிராக்டர், இயந்திரக் கலப்பைகளைத் தேவைக்கேற்ப இணைத்து நிலத்தை உழுவது வழக்கமாகிவிட்டது.
அவ்வாறு பயன்படுத்தும்போது, மண்ணுக்கேற்ப உழவுக் கலப்பைகளைப் பயன்படுத்துவது அவசியம். நஞ்சை நிலங்களில் ஒரு பயிர் அறுவடைக்குப் பின் நீர் பாய்ச்சி அந்த நிலத்தில், அந்தப் பகுதிக்குத் தகுந்த கொழுக் கலப்பைகளைக் கொண்டு உழவு செய்து, பின் நீரின் அளவை அதிகரித்து, தொழி உழவு இயந்திரத்தால் வயலைச் சமன்செய்து நடவுக்குத் தயார் செய்ய வேண்டும்.

இதேபோல் புஞ்சை நிலங்களில் ஒரு பருவத்துக்கும் மறு சாகுபடி பருவத்துக்கும் இடையே உள்ள கால இடைவெளி அதிகமாகி மண் இறுகித் தட்டையாகி, அதிகளவு களை வளர்ந்த நிலங்களில் சட்டிக்கலப்பையைக் கொண்டு ஆழமாக உழவு செய்வதால் மேல் மண் கீழும், கீழ் மண் மேலும் வரும்படியாக அமைந்தால் களைகள் பேரளவு கட்டுப்படுத்தப்படும். மண்ணின் அடியில் தங்கியிருக்கும் புழு, பூச்சிகளின் முட்டைகள் கூண்டுப் புழுக்கள் மேல்புறத்தில் வந்து வெயிலில் காய்ந்தும், அவற்றின் முட்டைகளையும் கூண்டுப்புழுக்களையும் பறவைகள் கொத்தித் தின்ன வழிவகுக்கிறது.

இதனால் சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி, பூஞ்சான சேதம் குறைய வாய்ப்புண்டு. சட்டிக்கலப்பையயைக் கொண்டு உழவு செய்தபின் நிலத்தைக் காயவிடுவதே சிறந்தது. ஓரிரு வாரத்துக்கு நிலம் நன்கு காய்ந்த பின்பு, கொழுக்கலப்பையைக் கொண்டு குறைந்தபட்சம் மூன்று முறை நிலச்சரிவுக்கு குறுக்கே உழவுசெய்து புன்செய் நிலங்களில் விதைப்பது நல்ல விளைச்சலைத் தரும்.

பல்லாண்டு பயிர்களான மரவகைப் பயிர்களைப் புதிதாக ஒரு தோட்டத்தில் நடுவதற்கு முன் எளிதாக உழவை முடித்துவிடலாம். நிலத்தைத் தோ்ந்தெடுத்தர்பின், அந்த நிலத்தில் சட்டிக்கலப்பையைக் கொண்டு ஆழ உழது, அந்த நிலத்தை ஓரிரு வாரங்கள் அல்லது ஒரு மாதம்வரை காய விடலாம். பின் மர நடவுக்குமுன் காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தி, நடவிருக்கும் பல்லாண்டு மரப் பயிருக்குத் தகுந்தாற்போல் இடைவெளி விட்டு, வரிசைக்கு வரிசை குழியெடுத்து, குழியெடுத்த பகுதியில் மட்டும் களைகளை அகற்றி, பின் மரப்பயிர்களுக்கு வட்டப் பாத்தி கட்டி, அதன் அடிப்படையில் மரங்களை வளர்க்கலாம்.

மரக்கன்றுகளுக்கு இடையே சட்டிக்கலப்பையைக் கொண்டு உழவுசெய்த நிலையில் அப்படியே விட்டுவிடலாம். பின்பு தேவைக்கேற்ப மரப்பயிர்களின் ஊடே, ஊடுபயிராகக் குறைந்த உயரம், வயது கொண்ட பயறு வகைப் பயிர், காய்கறிப் பயிர், நிலத்தை வளமாக்க பசுந்தாள் உரப்பயிர் வளர்க்க விரும்பும்போது கொழுக்கலப்பையைக் கொண்டு உழுதால் போதும். கடந்த வாரம் கூறியபடி, மண் பரிசோதனை முடிவறிக்கையின்படி, இயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிப்பதோ இயற்கை உரப் பயன்பாட்டுடன் வேதி உரங்களை பயன்படுத்துவதோ விவசாயிகளின் விருப்பத்தைப் பொறுத்தது. எனினும், இயற்கை வேளாண் முறைகள் குறித்துப் பின்னர் பார்ப்போம்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x