Published : 28 Sep 2019 11:11 AM
Last Updated : 28 Sep 2019 11:11 AM
டான்யா ஆபிரஹாம்
கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமமான கஞ்சிக்குழிக்கு நான் சென்றிருந்தபோது, உப்பு, மணல் ஆகியவற்றின் வாசம் கலந்த மெல்லிய தென்றல் வீசியது. அந்தக் கிராமத்துக்குள் நுழைந்தபோது திடீரெனப் புத்துணர்வு அளிக்கும் வகையில் ஒரு வாசனை காற்றில் கலந்து வந்தது. அது அங்குள்ள தோட்டத்தில் இருந்து வரும் காய்கறிகளின் வாசனை. இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து கஞ்சிக்குழி கிராமத்தின் தோற்றம் வித்தியாசமானது.
பக்கத்துக் கிராமங்களில்கூடக் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட வேளையிலும் கஞ்சிக்குழியில் இயற்கை வேளாண்மையில் அபரிமிதமான விளைச்சல் கிடைத்தது. கேரளத்தில் காய்கறிகள் விளையும் பகுதிகளுக்குக் கஞ்சிக்குழி முன்மாதிரியாக விளங்குகிறது. இந்தியாவில் இயற்கை வேளாண் முறை கண்டுகொள்ளப்படாத காலகட்டத்திலேயே கஞ்சிக்குழியில் இந்த முறையைத் தொடங்கிவிட்டனர். இங்கு 1994-ம் ஆண்டிலிருந்து இயற்கை வேளாண் முறை பின்பற்றப்பட்டுவருகிறது.
முன்பு கஞ்சிக்குழியின் மண் வளம் வேளாண்மைக்குத் தகுதியற்றதாகக் கருதப்பட்டது. அதனால் கேரளத்தின் மற்ற பகுதிகளில் கிடைக்கும் காய்கறிகளை நம்பியே கஞ்சிக்குழிக் கிராமத்தினர் இருந்தனர். அதனால் காய்கறிகளின் விலையும் அதிமாக இருந்து. மேலும், இந்தக் கிராம மக்களுக்கு உள்ளூர் நிறுவனங்களின் மூலம் குறைந்த வருமானம் கிடைத்துவந்தது. அதற்குப் பின் அந்தக் கிராம மக்கள் அனைவரையும் ஒரு புதிய செயலுக்காகப் பஞ்சாயத்துத் தலைமை அழைத்தது. இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலமும் இயற்கை வேளாண்மையின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என முடிவுசெய்தனர்.
“தொடக்க காலத்தில் இந்த வேளாண்மைக்கான வேலைகளைச் செய்வது பெரும் சவாலாக இருந்தது. ஏனென்றால், இங்கே விளைச்சலுக்கு ஏற்ற தரமான மண் கிடையாது. எனினும், இங்குள்ளவர்களுக்கு இயற்கை வேளாண்மையைக் கற்றுக்கொடுக்க வேண்டியதிருந்தது. இதைத் தொடர்ந்து செய்வதற்குச் சரியான திட்டமும் கடின உழைப்பும் தேவைப்பட்டன” என்கிறார் கஞ்சிக்குழி பஞ்சாயத் தலைவர் எம்.ஜி.ராஜு.
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றின் மூலம் இயற்கை முறையில் பாகற்காய், சிவப்புத் தண்டுக்கீரை, காலிஃபிளவர், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கும் இந்தத் திட்டத்துக்குப் பஞ்சாயத்துக் குழு 8,600 குடும்பங்களை அழைத்தது. ஊரில் காலியாக இருக்கும் அனைத்து இடங்களையும் வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. ஊர் பஞ்சாயத்து மூலமாகக் கிடைத்த தொகையைக் கொண்டு இயற்கை வேளாண்மையைத் தொடங்கினர்.
“இந்த வேளாண்மைப் பயிற்சிக்காக, உழவர்களை மேற்பார்வையிடவும் ஊக்கப்படுத்தவும் கர்ஷிக கர்மசேனா எனும் சிறிய குழு ஒன்றை அமைத்தோம். அதன் செயல்முறை கடினமாக இருந்தபோதும், PH எனப்படும் அமில-கார சமநிலையும் ஊட்டச் சத்துகளின் அளவும் மண் வளத்தை மீட்டுள்ளன. இயற்கை வேளாண்மைக்கு உதவும் வகையிலான பூச்சிக்கொல்லி தடுப்பு முறை செயல்படுத்தப்பட்டது” என்கிறார் ராஜூ. இயற்கை வேளாண் திட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அதற்கான பொறுப்புகள் கிராம மக்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
தற்போது அங்குள்ள குடும்பத்தினர் அனைவரும் இயற்கை உரம் தயாரிக்கிறார்கள்; பூச்சிக்கொல்லி தடுப்பு முறைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். “தங்களுக்கான சிறந்த வேலை எது என்பது உழவர்களுக்குத் தெரிகிறது. அவர்கள் தற்போது அனுபவத்தின் அடிப்படையிலேயே கற்றறிந்து கொள்கிறார்கள்” என்றார் ராஜூ. விளைச்சலுக்கு வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்பதில் கிராமத்தினர் தீர்க்கமாக இருக்கிறார்கள்.
பெண்களுக்காகச் செயல்படும் மகளிர் சுய-உதவிக் குழுவான ‘குடும்பம்’ அமைப்பைச் சார்ந்த தோட்டத்திலிருந்து கிடைக்கும் இலவச விதைகளும் மரக்கன்றுகளும் ஊர் பஞ்சாயத்து சார்பில் உழவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
“கடந்த ஆண்டு 50 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் கொடுத்தோம். மேலும், குறைந்த கட்டணத்தில் இயற்கை முறையில் உரம் தயாரிப்பதற்கான வசதியையும் செய்து கொடுத்திருக்கிறோம்” என்றார் ராஜூ.
கஞ்சிக்குழி கிராமத்தினர் நீண்ட நாட்களாக வேறெங்கிருந்தும் காய்கறிகளை வாங்குவதில்லை. “முன்பு அருகில் இருக்கும் நகரங்களில் காய்கறிகளை வாங்கிவந்தோம். இப்போது இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உள்ளூர் சந்தையில் நாங்களே விற்றுவருகிறோம்” என்றார் ராஜூ. உபரியான காய்கறிகளை நெடுஞ்சாலையில் கூரைக் கடைகள் மூலம், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்றுவருகிறார்கள். இயற்கை வேளாண்மைத் தொழிலால் ஒரு செழிப்பான வாழ்க்கை இந்தக் கிராமத்தினருக்குக் கிடைத்துள்ளது.
இந்தக் கிராம மக்களில் சிலர் ஆண்டு முழுவதும் இயற்கை வேளாண்மை செய்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு மாதம் ரூ.50,000 வரை வருமானம் கிடைக்கிறது. இயற்கை வேளாண்மைப் பயிற்சியையும் அவர்களே அளிக்கின்றனர். மேலும் சிலர் கலப்பினக் காய்கறி வகைகளையும் உற்பத்தி செய்கின்றனர். சுபகேசன் (48) என்பவர், உள்ளூரில் உருவாக்கிய கஞ்சிக்குழி பீன்ஸ் விதைகளை விற்று வருகிறார். “வேளாண்மைதான் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. தொடக்கத்தில் நான் 2 சதவீத நிலத்தில் அறுவடை செய்தேன். தற்போது அது 25 சதவீதமாக விரிவடைந்துள்ளது,” என்கிறார் அவர். மற்றொரு உழவரான ஆனந்தன் (71) ஆண்டு முழுவதும் அறுவடை செய்து வருவதாகச் சொல்கிறார்.
அடுத்த தலைமுறைக்கு வேளாண்மையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் பள்ளிகளில் கட்டாயப் பாடம் வைக்கப்பட்டுள்ளது. “தற்போது மண் வளமாகவும், சத்துக்கள் நிறைந்தும் உள்ளது. அதனால் வேதிப் பொருட்கள் கலக்காத உணவைச் சாப்பிடுவதன் மூலம் எங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கின்றனர்” என்கிறார் ராஜூ.
கடந்த வாரம் உயர்ந்திருந்த வெங்காயத்தின் விலை இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. வெங்கயம் கொள்முதல் செய்யும் கர்நாடகத்தில் பெய்த கன மழையால் வரத்து குறைந்திருந்தால்தான் இதன் விலை 2 மடங்காக உயர்ந்தது. இப்போது வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. அதுபோல் தக்காளியின் விலையும் குறைந்துள்ளது. |
தமிழில்: ச.ச.சிவசங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT