Published : 07 Sep 2019 11:05 AM
Last Updated : 07 Sep 2019 11:05 AM

உலகைக் காக்க அழைக்கும் இளங்குரல்!

ஆகஸ்ட் 20, 2018. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஸ்வீடன் தயாராகிக் கொண்டிருந்தது. பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த அந்நாட்டு நாடாளுமன்ற வளாகமான ரிஸ்க்தாக்கில் வாக்களிக்கும் வயதைக்கூட எட்டியிருக்காத சிறுமி ஒருத்தி கையில் ஒரு பதாகையுடன் உட்கார்ந்திருக்கிறார்; ‘பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்று அதில் எழுதியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டிய சின்னப் பெண், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று வியப்பும் குழப்பமுமாக மக்கள் அந்த இளம்பெண்ணைக் கடந்துச் சென்றார்கள்.

பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய ‘எங்கள் வாழ்க்கைக்கான பேரணி’யில் இருந்து கிரெட்டா உத்வேகம் பெற்றிருந்தார்.

‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ (#FridaysForFuture) என்று பெயரிடப்பட்டு கிரெட்டா தொடங்கிய இந்தப் போராட்டம், குறுகிய காலத்தில் உலகம் முழுக்கப் பரவியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பருவநிலை மாற்றத்துக்கான போராட்டங்கள் உலகம் முழுக்க மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. போலந்தில் நடைபெற்ற ‘ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாடு’, தாவோஸில் நடைபெற்ற ‘உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம்’, ஐ.நா. சபை, பிரிட்டன் நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியம் என முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எல்லாம் கிரெட்டா பேச அழைக்கப்பட்டார்.

தன்னுடைய செயல்பாடுகளால் உலகம் முழுக்க பேராதரவையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றிருக்கும் கிரெட்டா இந்த ஆண்டு நோபல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

யார் இந்த கிரெட்டா?

கிரெட்டா துன்பர்க் ஜனவரி 3, 2003-ல் ஸ்வீடனில் பிறந்தார். கிரெட்டாவின் தாய் மலினா எர்ன்மான் ஒரு ஓபரா பாடகி; தந்தை ஸ்வாந்தே துன்பெர்க் ஒரு நடிகர், எழுத்தாளர்.

ஆட்டிசத்தின் ஒரு வகையான ‘அஸ்பெர்கர் குறைபாட்டால்’ பாதிக்கப்பட்டிருந்த கிரெட்டா, நினைத்தவற்றை சரியாக பேசமுடியாமலும் சமூகவயப்படாமல் ஒதுங்கியும் இருந்தார். தன்னுடைய எட்டு வயதில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து அறிந்த கிரெட்டா, தொடர்ந்து அது குறித்து யோசித்துகொண்டே இருந்திருக்கிறார். அவருடைய 11 வயதில் இது கடுமையான மன உளைச்சலுக்கு இட்டுச் சென்றது; பள்ளிக்குச் செல்வதையும் சாப்பிடுவதையும்கூட நிறுத்தினார்.

“நான் அதிக நேரம் யோசிப்பேன். சிலரைப் போல் என்னால் எல்லா விஷயங்களையும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. அவை என்னைக் கவலையிலும் சோகத்திலும் ஆழ்த்தும். என்னுடைய சிறு வயதில் ஞெகிழியால் கடல் மாசுபடும் படங்கள், பனிக் கரடிகள் உணவில்லாமல் பசியால் வாடுவது போன்றவற்றை என் ஆசிரியர்கள் காண்பித்தார்கள். அவற்றையெல்லாம் பார்த்து நான் அழுதேன். அப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கவலை கொண்ட என் வகுப்புத் தோழர்கள், அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மற்ற விஷயங்களைக் குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அவை என் மனதை விட்டு அகலவில்லை” என்கிறார் கிரெட்டா.

கிரெட்டாவைப் புரிந்துகொண்ட பெற்றோர் பருவநிலை மாற்றத்தைத் தூண்டும் செயல்பாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இசை நிகழ்ச்சிக்காக உலகம் முழுக்கப் பயணிக்க வேண்டியிருந்த கிரெட்டாவின் தாய் விமானப் பயணங்களை முற்றிலும் நிறுத்திவிட்டார்; முழுக்க சைவ உணவை மட்டுமே கிரெட்டாவின் குடும்பத்தினர் உட்கொள்ளத் தொடங்கினார்கள். கிரெட்டாவும் மெதுவாக இயல்புநிலைக்குத் திரும்பினார். தனிமனித நுகர்வுப் பழக்கங்கள் வலிமையானவை என்று நம்பும் கிரெட்டா, தானும் இயற்கைக்கு இணக்கமாக வாழத் தொடங்கியுள்ளார்.

கடல் தாண்டி

பருவநிலை மாற்றத்துக்கு முதன்மைக் காரணமாக உள்ள கரியமில வாயு வெளியேற்றத்தில் விமானப் போக்குவரத்து 2 சதவீதம்வரை பங்களிக்கிறது. ‘விமானம்-அவமானம்’ என்ற பெயரில் விமானப் பயணத்தைத் தவிர்த்து, கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் உலகம் முழுக்க வலுப்பெற்று வருகிறது. செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடக்க இருக்கும் ‘ஐ.நா.வின் பருவநிலை அவசர மாநாட்டில்’ கலந்துகொள்ள ஸ்வீடனில் இருக்கும் கிரெட்டாவுக்கு அழைப்பு வந்தது.

கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற ‘காப் 24’ பருவநிலை மாநாட்டுக்கு ரயிலில் சென்ற கிரெட்டா, இந்த முறை அட்லாண்டிக் பெருங்கடலை படகில் கடப்பதற்கு முடிவெடுத்தார். வேகமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சூழலியலுக்கு உகந்த ‘மலீஸியா 2’ என்ற படகில் தன் தந்தை உட்பட மூவருடன் பிரிட்டனின் பிளைமவுத்தில் இருந்து ஆகஸ்ட் 14 அன்று கிரெட்டா பயணத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 28 அன்று நியூயார்க்கை அடைந்த பிறகு, அங்குள்ள குழந்தைகள், மாணவர்களுடன் தன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

பதற்றமடையுங்கள்

“நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பதற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் உணருகின்ற அச்சத்தை நீங்களும் உணர வேண்டும். ஆகவே, நீங்கள் செயல்பட வேண்டும்” என்று பருவநிலைப் பேரழிவு சார்ந்து அரசியல்வாதிகளிடம் கிரெட்டா வேண்டுகோள் விடுக்கிறார்.

‘குழந்தைகள் வகுப்புகளைப் புறக்கணிக்கக் கூடாது’; ‘அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆசிரியர்களால் போராடத் தூண்டிவிடப்படுகின்றனர்’; ‘இத்தகைய விஷயங்களில் என்ன செய்ய வேண்டுமென்று சொல்ல குழந்தைகளுக்கு உரிமை இல்லை’ என்பது போன்ற விமர்சனங்கள் கிரெட்டாவையும் ‘பருவநிலை காக்க பள்ளி வேலை நிறுத்த’ போராட்டத்தையும் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தீவிர வலதுசாரிகள், பழமைவாதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகின் அதிதீவிரப் பிரச்சினையாக பருவநிலைப் பேரழிவைப் பார்க்க அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள் என்று கருதும் கிரெட்டா, அது பற்றிய எந்த விழிப்புணர்வும் அற்ற மக்களும் அதற்கு பங்களித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கவலைகொள்கிறார். மக்களிடம் விழிப்புணர்வைப் பரவலாக்கி, அதன்மூலம் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே கிரெட்டாவின் நோக்கம்.

உலகம் பிழைத்திருக்க வேண்டுமானால், மாறியாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வயது ஒரு தடையல்ல என்பதை தன் செயல்பாடுகளாலும் தொலைநோக்காலும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் கிரெட்டா.

- சு. அருண் பிரசாத்
தொடர்புக்கு:arunprasath.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x