Published : 07 Sep 2019 10:56 AM
Last Updated : 07 Sep 2019 10:56 AM
இயற்கை வேளாண்மைக்கு (ஏன் பொதுவாக வேளாண்மைக்கே) உழவர் கையில்/நிலத்தில் இடுபொருள் இருப்பது மிக முக்கியம். அதுவே தற்சார்பின் முதல் படி.
ஒரு உழவர் தம்மிடம் இருக்கும் பொருட்களையும் கால்நடைகளையும் நம்பியே பேரளவு இடுபொருட்களை உருவாக்க முடியும். அந்த வகையில் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்கள் (மாட்டு சாணம், கோமியம், பால், நெய் அல்லது வெல்லம், கடலை மாவு ) அரிய கண்டுபிடிப்புகளான. இவை மட்டுமல்லாமல் மூடாக்கு, பல காலமாகப் பழக்கத்திலுள்ள எரு, முன்னோடி உழவர்களின் முயற்சி/ஆராய்ச்சியிலிருந்து புதிதாக உருவாகும் பல முறைகள் முக்கியமானவை.
இவை எல்லாவற்றுக்கும் ஆதாரம் நுண்ணுயிரிகள்- அவை பெரிதும் கிடைப்பது, எளிய சாணத்திலிருந்து. அதனாலேயே மாடுகள் மிக அவசியமாகின்றன. அதற்காக, இயற்கை வேளாண்மை என்றதும் லாரி லாரியாக சாணி மட்டுமே போடுவதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். மேற்கூறிய பலவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் இடுபொருள்கள்- வீரியம்/தாக்கம் அதிகமுள்ளவை.
மாடு மட்டுமே உதவுமா? மாடு, அதிலும் நாட்டு மாடாக இருந்தால் மிக நல்லது. அதன் சாணத்தில் அதிகப்படியான நுண்ணுயிர்களும் சத்துக்களும் இருக்கின்றன என ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. அதனால் எருமைகளும் ஜெர்சி மாடுகளும் தேவையே இல்லை என்றோ இருந்தால் அவற்றை மாற்ற வேண்டும் என்றோ அர்த்தமில்லை. அவற்றையும் பயன்படுத்தலாம். காலப்போக்கில் அவையும் மேன்மையே தரும்.
இயற்கையில் முதல் விதி- எல்லாவற்றையும் மேம்படுத்துவதுதான். காற்று, நிலம், நீர், மண் என எல்லாமுமே மேம்படும்- மனிதனின் தலையீடு இல்லையென்றால்! நாட்டு மாடோ, அந்த இடத்தின் மண்புழுவோ மிகச் சிறப்பு. மற்றவை வீரியம் /ஆற்றல் குறைவாக இருந்தாலும் உதவக்கூடியவையே. ஆனால், இடுபொருள் உழவர் கையில் இருப்பது முக்கியம். வேதி வேளாண்மைபோல் இதிலும் வெளியிலிருந்து விதை, ஊக்கிகள், உரங்கள், பூச்சி மேலாண்மைக்கரைசல்கள் போன்றவற்றைக் கொண்டுவந்தால் தற்சார்பும் இருக்காது. நீடித்து நிலைக்கவும் முடியாது.
மாடு வைத்திருக்காத சிறு உழவர்கள், அந்தந்த ஊரில், அருகில் உள்ள மகளிர் குழுக்கள், வேறு உழவர்கள், கூட்டுறவுக் குழுக்கள் உற்பத்தி செய்ததை வாங்கிப் பயன்படுத்தலாம். அது இரண்டு வழிகளில் நன்மை தரும்: அண்மைப் பொருளாதாரத்தை வளர்க்கும்; பெரும் கம்பெனிகளை நம்பாமல் இருப்பதால் இடுபொருள் செலவும் குறைவாகவே இருக்கும்.
ஜீரோ பட்ஜெட் வேளாண்மை என்றால் என்ன?
தம்முடைய இடுபொருளைக் கொண்டு, வேதிப்பொருளின்றி, இயற்கையாக, உற்பத்திச் செலவின்றி (அல்லது மிகக் குறைவாய், தன்னிறைவாக) பயிர்களை விளைவிப்பது. சுபாஷ் பாலேக்கர் முன்வைத்த முறை இது. விதை முதல் சந்தைவரை எல்லாம் உழவர்கள் கையிலிருக்கும். இடுபொருள்கள், எல்லா சத்துகள், உரம், பூச்சி மேலாண்மை போன்ற அனைத்தும் இயற்கையாக, இயற்கை விதிகளின் அடிப்படையில் கிடைக்கும்!
மூடாக்கு முதல் நீர் மேலாண்மை, நாட்டு மாட்டின் சாணம், கோமியத்திலிருந்து ஜீவாமிர்தம் எனச் சிறப்பான தற்சார்பான இடுபொருள்கள், பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பல முன்னோடி உழவர்களின் அனுபவம், வெற்றியுடன் உலா வருகின்றன.
நாடு தழுவிப் பல இடங்களிலும் உழவர்களுக்கு இது தந்துவரும் அங்கீகாரமும் தன்னம்பிக்கையும் அதிகம். பல இடங்களில் வேதி வேளாண்மையில் கிடைக்கும் மகசூலைவிட, இந்த வேளாண் முறையில் அதிக மகசூல் கிடைக்கிறது.
இதில் குறைகளே கிடையாதா?
உண்டு! நாட்டு மாடுகள் தவிர மற்றவை எல்லாம் கூடாது என்னும் நிலை; அதேபோல் மண்புழுக்கள், ஜெர்சி மாடுகளை வலிந்து ஒதுக்குவது; தனிநபரை மட்டுமே முன்னிறுத்துதல்; எந்த விதையாக இருந்தாலும் விதை நேர்த்தியால் சரி செய்துவிட முடியும் என்று கூறும் போக்கு (அதனால் மரபணு மாற்றப்பட்ட விதைகள்கூட, சில இடங்களில் கையாளப்படுவது) போன்றவை சில.
இப்படி எதிர்மறையான அம்சங்களை மீறி, பல மாநில அரசுகளாலும், மத்திய அரசாலும் இது எடுத்தாளப்படுகிறது. இந்தக் குறைகளை நீக்கினால், இது ஒரு சிறந்த மாதிரியாகும்.
காடு வளர்ப்பு, மியாவாகி உணவுக் காடுகள், உயிர்ம வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம் (integrated farming), நிரந்தர வேளாண்மை (permaculture), இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முறைகள் எனப் பல இயற்கை வேளாண் முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றே செலவில்லா இயற்கை வேளாண்மை (ஜீரோ பட்ஜெட்). இதில் எந்த முறையையும் தனியாகவோ கலந்தோ விவசாயிகள் கையிலெடுப்பதை இன்று பரவலாகக் காண்கிறோம். நாடெங்கிலும் நல்ல பலன் கிடைப்பது தெரிகிறது.
- அனந்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT