Published : 31 Aug 2019 10:50 AM
Last Updated : 31 Aug 2019 10:50 AM

ஞெகிழி பூதம் 30: நாமே ஞெகிழியை ஒழிக்க வேண்டும்!

கிருஷ்ணன் சுப்ரமணியன்

அனைத்து உயிரினங்களையும் கொண்டாடும் பக்குவமடைந்த மனிதச் சமூகம் நாம். உயிர்களை மதிக்கும் பண்பும் சூழலியல் காக்கும் அறமும் நம்மிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்துவந்திருக்கின்றன. அப்படியிருக்க உலகமயமாக்கத்துக்குப் பிந்தைய பெரும் பொருள் மோகத்தால், நாம் வாழும் பூமியை நாமே சிதைக்கலாமா?

எங்கெங்கும் நுண்ஞெகிழி

நாம் கண்டும் காணாமலும் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியும் ஏதோ ஒரு ஞெகிழிக் குப்பைதான், எங்கோ ஒரு மாட்டின் வயிற்றுக்குள் சிக்கவிருக்கிறது. நம் குப்பைத் தொட்டியில் நிரம்பி வழிந்து தொங்கும் ஞெகிழிக் குப்பைதான் கடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு உயிரினத்துக்கு எமனாகப் போகிறது. நம் பகுதியில் இருப்பவர்கள் கொட்டிய ஞெகிழி கலந்த குப்பையை எரிக்கும்போதுதான், கொடிய நோய்களை உருவாக்கும் நச்சுவாயு காற்றுடன் கலக்கிறது.

நம் கண்ணைவிட்டு அகன்றால் போதும் என்று குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு மறந்துவிடுகிறோம். ஆம், நம் கண்ணுக்குத் தெரியாமல்தான் அது போகிறது. நம் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிதைந்து, நுண்ஞெகிழியாக அது மாறுகிறது. நுண்ஞெகிழி உலகமெல்லாம் பரவியுள்ளது. மனித இனத்திடமிருந்து விலகியிருக்கும் ஆர்க்டிக் பெருங்கடல் பனிக்கட்டியிலும்கூட, அது கலந்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் ஆர்க்டிக் பனிக்கட்டிகளை ஆராய்ந்ததில் 950 கிராம் பனிக்கட்டியில் 12,000 நுண்ஞெகிழித் துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நுண்ஞெகிழி கடல்வழியாக மட்டுமல்லாமல் காற்றுச் சுழற்சியில் ஆர்க்டிக்வரை சென்று சேர்ந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

எங்கோ ஆர்க்டிக் காற்றில் கலந்திருக்கும் நுண்ஞெகிழித் துகள்கள் நாம் வாழும் நகரத்திலும் நமது நுரையீரலிலும் குடிகொண்டிருக்கும் என்பதை நிச்சயம் மறுக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். நீர்நிலைகளை மாசுபடுத்துபவர் கொடும்பாவம் செய்தவர் என்று நம்பும் பண்பாடு நம்முடையது. தொடர்ந்து ஞெகிழியைப் பயன்படுத்தினால், நம் குழந்தைகள் அந்தப் பாவத்தை நம் மீதுதான் சுமத்துவார்கள்.

நாமே காரணம்

நம்மை அண்டி வாழாத தெருநாய், தெருப்பூனைகளைக்கூட நம்மில் பலர் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. ஆனால், நம்முடைய நுகர்வெனும் பெரும் வெறி கடலில் வாழும் உயிரினங்களின்மீது நாம் எறியும் பீரங்கிக் குண்டாக, அவற்றின் வாழும் சூழலை அடித்து நொறுக்குகிறது. இதை நேரடியாக உணர்கிறோம், செய்தித்தாள்களில் படிக்கிறோம், பொதுவெளியில் விவாதிக்கிறோம் ஆனால், மாற்றத்தை உருவாக்கச் செயல்படுகிறோமா? ஞெகிழித் தடையை நீர்த்துபோகச் செய்ய இன்னமும் பல சக்திகள் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. பூமியைக் காக்க ஞெகிழித் தடை அவசியம் என்பதற்கு ஆதரவாக எத்தனை சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன?

நாமே நிவாரணம்

அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டுவரப் பல கோணங்களில் சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கும். மக்களின் குரல் அரசிடமும், பொருளீட்டும் நிறுவனங்களிடமும் வலுவாகச் சென்றுசேர வேண்டும். வியாபார வியூகம் எப்படி நம்மைப் பெரும் நுகர்வுக்கு அடிமையாக மாற்றுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். விளம்பரங்களும் பொருட்களின் வடிவமைப்பும் எப்படி ஞெகிழியை இன்றியமையாததாக மாற்றுகின்றன என்பதைப் புரியவைக்க வேண்டும்.

அகிம்சை, அன்பு, அறம் ஆகியவற்றின் மூலம் நம் நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர முடியும் என்ற வரலாற்றைக் கொண்டிருக்கிறோம். அதே ஆயுதங்களுடன் சூழலியல் விடுதலையையும் நாம் எட்ட வேண்டும். ஞெகிழிப் பைகளிடம் இருந்து விடுதலை, ஞெகிழி உறை கொண்ட பொருட்களிடம் இருந்து விடுதலை, நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் சூழலியலைச் சீர்கெடுக்கும் நுகர்வு பழக்கத்திடம் இருந்து விடுதலை பெற வேண்டும்.

என்ன செய்யப் போகிறோம்?

பத்து லட்சம் உயிரினங்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அழிந்துபோகும் கொடூரம் நடக்கவிருக்கிறது. மற்றொருபுறம், ஒரு சதவீதத்துக்கும் குறைவான பணக்காரர்களிடம் உலகின் 45% சொத்து குவிந்திருக்கிறது. நம் சமூகத்தில் அன்பும் அறமும் குறைந்தால் என்ன நடக்கும் என்பதற்கான மிகச் சரியான குறியீடுகள் இவை. மேலோட்டமான முடிக்கங்களும் சட்டங்களும் இவற்றைச் சீரமைத்துவிட முடியாது.

அடிப்படை மாற்றங்கள் தேவை. நாம் அன்றாடம் மேற்கொள்ளும் செயல்பாடுகளில், தினசரி எடுக்கும் முடிவுகளில் அறம் மேலோங்க வேண்டும். குடும்பங்களும் சமூக அமைப்புகளும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இதையே முன்னிலைப்படுத்த வேண்டும். ஏனென்றால், கடந்த நூறு ஆண்டுகளில்தான் உலகின் அனைத்து உயிராதாரங்களும் தீவிரமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதை மீட்டெடுக்க இன்னும் நூறு ஆண்டுகள் காத்திருக்க முடியாது. சூழலியல் அடைந்துள்ள நெருக்கடி நிலையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

துணிப்பையில் இருந்து தொடங்குவோம்

முதல் முடிவாகச் சில முறை மட்டுமே பயன்படக்கூடிய எந்த ஒரு பையையும் தவிர்ப்போம். அது ஞெகிழியாகவும் இருக்கலாம், மக்கக்கூடியது என்ற போர்வையில் வரும் போலிப் பொருட்களாகவும் இருக்கலாம், ஏன் துணியாகவும் இருக்கலாம். நாம் பயன்படுத்தும் பொருட்களைப் பூமி மீது தூக்கி எறிந்துகொண்டே இருக்க முடியாது. ஒருமுறை வாங்கிய பொருள், பல ஆண்டுகளுக்கு உழைக்க வேண்டும் என்றே நாம் விரும்புவோம். அந்த வகையில் நலிந்தவர்களுக்கான வாழ்வாதாரமாகவும், சூழலியல் பாதுகாப்புக்கான புரிதலை ஏற்படுத்தும் கருவியாகவும் பாவித்து துணிப் பைகளைத் தூக்கத் துணிவோம். தமிழகத்தில் வர்த்தக நோக்கமற்றுத் துணிப்பை தயாரிக்கும்

நிறுவனங்களில் சில:

தமிழ்க்காடு துணிப்பை
(கடலூர் மாவட்டம்) - 8526019993
பாலகுட்டபல்லி துணிப்பை (சென்னை) – 9381598081
துளசி தையல் சமூகம்
(தென் மாவட்டங்கள்) – 7339252770
இந்திய நிர்மாண சங்கம் (கொடைக்கானல்) - 9443041929
துணி பை தயாரிப்பதைச் சமூக நிறுவனமாகத் (Social Enterprise) தொடங்க vanakkam@theyellowbag.org, இணையம் மூலம் துணிப்பை வாங்க www.makerscart.in
பள்ளி, கல்லூரிகளில் ஞெகிழி, சூழலியல் கருத்தரங்குகள் நடத்துவதற்கு 'கிரீன் பேஜஸ்' அமைப்பு - 9500802803.
மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவோம்!

(நிறைவடைந்தது) கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x