Published : 24 Aug 2019 11:00 AM
Last Updated : 24 Aug 2019 11:00 AM
சு. அருண் பிரசாத்
சென்னை திருவான்மியூர் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆகஸ்ட் 18 அன்று இரவு கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. இந்தப் புதுமையான நிகழ்வைக் கண்ட மக்கள் ஒளிப்படங்கள், காணொலிகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இப்படி உருவாவதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டன. பருவநிலை மாற்றம் இதற்குப் பங்களித்திருக்குமோ என்ற சந்தேகமும் பரவலாக எழுந்தது.
இதற்கான அறிவியல் காரணத்தை விளக்குகிறார் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் பேராசிரியர் பா. ஜவஹர்.
“வங்கக் கடலில் அரிதாக ஏற்படும் இந்த நிகழ்வுக்கு கடல் ஒளிர்வி அல்லது நாக்டிலுகா புளூம் (Noctiluca scintillans) என்ற ஒருசெல் உயிரி காரணமாக இருக்கிறது. இது இப்போது சென்னையில் ஏற்பட்டிருப்பதற்கு சமீபத்திய மழைப் பொழிவு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், உயிர் ஒளிர்வை (Bioluminescence) ஏற்படுத்தும் நாக்டிலுகா உயிரிக்குக் கடலில் கலக்கும் நீரில் உள்ள உயிர்ச்சத்துகள் உணவாக அமைகின்றன. பொதுவாகக் கடலில் கலந்த வேகத்தில் கரைந்துவிடும் இந்தச் சத்துகள், மிக அதிகமாகச் சேரும்போது கரைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன.
அந்த நேரத்தில் இவற்றை உணவாகக் கொள்ளும் உயிரிகள் பெருகுகின்றன. பகலில் பச்சை நிறத்தில் இருக்கும் இவை, லூசிஃபெரின் என்ற வேதிப்பொருளின் உதவியால் இரவில் நீல நிறத்தில் ஒளிர்கின்றன” என்று இந்த நிகழ்வுக்கான அறிவியல் காரணங்களை ஜவஹர் பட்டியலிடுகிறார்.
இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டபோது, “இந்த உயிரிகளால் மீன்களுக்கு நேரடியாகப் பிரச்சினையில்லை என்றாலும், தண்ணீரில் இருக்கும் ஆக்ஸிஜனை நாக்டிலுகா எடுத்துக்கொள்வதால், அதிக எண்ணிக்கையில் அவை உருவாகும்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்துபோக சாத்தியம் உண்டு” என்று சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நிகழ்வின்போது மனிதர்கள் தண்ணீரைத் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்குமே தவிர, அவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. இந்நிகழ்வுக்குப் பருவநிலை மாற்றம் நிச்சயமாகக் காரணமல்ல என்று, அந்தக் காரணத்தை மறுக்கிறார் ஜவஹர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT