Published : 17 Aug 2019 11:45 AM
Last Updated : 17 Aug 2019 11:45 AM
அனந்து
‘இயற்கை உணவு’ இன்னமும் மேல்தட்டு மக்கள் மட்டுமே வாங்கும் விலையில் உள்ளதே, அதை ஏழைகளுக்குக் கொண்டு செல்ல முடியுமா, அதற்கு என்ன வழி?
ஆர்கானிக் என்னும் இயற்கை உணவு, பல கேடுகளை விளைவிக்ககூடிய வேதிப்பொருட்கள் இல்லாமல் இயற்கை இடுபொருட்களின் உதவியுடன் சீரிய வழிமுறைகளில் விளைவிக்கப்படுகிறது. அப்படி நஞ்சின்றி விளைவிக்கப்படும் இந்த நல்ல உணவுக்கான விலை சற்று உயர்ந்தே காணப்படுகிறது. அதனால் இன்றைக்கு மேல்தட்டு மக்கள் மட்டுமே இதை அதிகம் வாங்க முடிகிறது!
இதற்குப் பல காரணங்கள் உண்டு. உழவர்களுக்கு நியாய விலை கொடுக்கப்படுவது, இன்னமும் மிகச் சிறிய அளவிலேயே இதற்கான சந்தை இருப்பது, இந்தப் பொருட்களுக்கான போக்குவரத்துச் செலவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் விலை சற்றே அதிகமாக உள்ளது. (சிலரது பேராசையால் விலை அதிகமாக வைக்கப்படலாம். ஆனால், அதைச் சரியாகக் கண்டறிந்து ஒதுங்கி நியாய விலைக் கடையைக் கண்டுபிடிக்க வேண்டும்). உற்பத்தியைவிடத் தேவை அதிகமிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
உணவே மருந்தாக இருக்கும் நமக்கு, இயற்கை வேளாண் உற்பத்தி அதிகமாக இல்லை. அத்துடன் இதை ஒரு மருத்துவக் காப்பீடுபோல் பாவிக்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் குறைந்த விலையில் தருவது சாத்தியமல்ல. உணவுக்கு நாம் செலவழிக்கும் பணம் உழவர்களுக்கு நியாயமாகக் கொடுக்கப்பட்டால், சிறிதளவு விலை கூடுதலாக இருப்பதைப் பார்க்காமல் இயற்கை பொருட்களை ஆதரிக்க முன்வர வேண்டும்.
இயற்கை உணவு அவசியம் ஏழைகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், இன்றைய நிலையில்/விலையில் இது சாத்தியப்படுவதாக இல்லை. இன்றைக்கு அது அரசின் பொறுப்பாகவே இருக்கிறது. ஏழைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டங்கள், மதிய உணவு திட்டம் போன்றவற்றில் நஞ்சில்லா உணவை வழங்க அரசு முன்வர வேண்டும். அத்துடன் கூட்டுறவு மையங்கள், பொது விநியோக முறை போன்றவற்றிலும் இயற்கை வேளாண் விளைபொருளை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஏழைகளுக்கு நஞ்சில்லா நல்லுணவைக் கொண்டு செல்லும் திட்டங்கள் நமது நாட்டில் எங்காவது நடைமுறையில் உள்ளதா?
சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் Community Managed Sustainable Agriculture (CMSA) என்னும் சிறந்த திட்டம் ஊரக வளர்ச்சித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் குழுக்கள் மூலம் இயற்கை வேளாண்மை வழி வாழ்வாதாரத்தை முன்னேற்ற இதில் வழிவகுக்கப்பட்டது. நச்சு வேளாண்மையில் வேதி இடுபொருளுக்கு ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருப்பதையும் நிகர லாபம் மிகக்குறைவாக இருப்பதையும் உணர்ந்து NPM எனப்படும் பூச்சிக்கொல்லி இல்லா மேலாண்மை முறையை மகளிர் குழுக்கள் கையாண்டன. இதன் மூலம், வேதிப்பொருட்களுக்கான செலவு பெரிதும் குறைந்து, 33 லட்சம் ஏக்கரில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் உழவர் களப் பயிற்சி பள்ளிகள், சமூக வளப் பயிற்றுநர்கள் (சி.ஆர்.பி.) ஆகியோருக்குப் பயிற்சிஅளிக்கப்பட்டு சீராகச் செயல்பட்டனர். பயிற்சியும் இயற்கை வேளாண் தொழில்நுட்பமுமே இதன் அடிப்படை. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களே இதன் பங்குதாரர்கள். நாட்டிலேயே ஏழைகளை இயற்கை வேளாண்மைக்குள் கொண்டுவந்த முதல் திட்டம் இது. உணவுப் பாதுகாப்புக் கடன் முறை ( Food Security Credit Line) மூலம் ஏழைகளுக்கான சிறந்த இயற்கை நல்லுணவு கிடைக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மகளிர் குழுக்கள் விளைவிக்கும் இயற்கைப் பொருட்கள் ஏழை உழவர்களுக்கும் வேளாண் கூலிகளிக்கும் விநியோகிக்கப்பட்டு, முதல் முறையாக ஏழைகளுக்கு நஞ்சில்லா உணவு சென்றடையும் நிலை ஏற்படுத்தப்பட்டது!
சிறந்த ஆளுமைகள் வழிகாட்டிய பயிற்சி வழிமுறைகளால் இந்தத் திட்டத்தில் எங்குமே மகசூல் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.
ஆக, நமக்கெல்லாம் இதிலிருந்து கிடைக்கும் பாடம்- இயற்கை வேளாண்மையால் உணவுப் பாதுகாப்பும் பாதுகாப்பான நல்லுணவும் கிட்டும், அதை ஏழைகளுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதே.இதற்கான முதலீடும் மிக மிக குறைவு. எனவே அரசின் விருப்பம் இருக்கும் இடத்தில், இயற்கை வேளாண்மை அனைவரையும் சென்றடைய வழியும் இருக்கிறது.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT