Published : 17 Aug 2019 11:35 AM
Last Updated : 17 Aug 2019 11:35 AM
சு. அருண் பிரசாத்
நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் அடுத்தடுத்த நான்கு நாட்களில் பெய்த மழை தமிழகத்திலேயே அதிக அளவை
(250 செ.மீ) எட்டியிருக்கிறது. கட்டுமீறிய மழை, வெள்ளம் ஒருபுறம், சூழலியல் சீர்குலைவால் அதிகரிக்கும் நிலச்சரிவு மறுபுறம் என ஆபத்தான பின்னணியில் நீலகிரி மலைப் பகுதி தற்போது திணறிக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் ஏற்பட்டுள்ள அழிவுடன் ஒப்பிடும்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு தீவிரமற்றதாகத் தோன்றலாம். ஆனால், நிலைமை மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் நீலகிரி சூழலியலை நீண்டகாலமாகக் கவனித்து வரும் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
சு. பாரதிதாசன் சூழலியலாளர்
ஆறு மாதங்கள் தொடர்ந்து பெய்யும் மழையைப் பார்த்த பழங்குடிகள், இப்போதைய மழையைச் சாதாரணமாகவே பார்க்கிறார்கள். தண்ணீர் இல்லையென்றால் வேளாண்மை நடக்காது, கால்நடைகளைப் பராமரிக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களால் பழங்குடிகள் எப்போதும் மழையை எதிர்நோக்கி இருப்பதே வழக்கம். சமவெளிப் பகுதியில் பொழியும் நீரைத் தேக்கி வைக்கும் சதுப்பு நிலங்களைப் போன்று, மலைப் பகுதிகளில் மழைநீர் இயற்கையாகச் சேகரமாகும் அமைப்பு ‘வயல்’ என்றழைக்கப்படுகிறது. ஊட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் இருப்பது அப்படிப்பட்ட ஒரு வயல்தான்.
எந்த அளவு தண்ணீரையும் உள்வாங்கும் திறன் இந்த வயல்களுக்கு உண்டு. முழுவதும் புல் போர்த்தப்பட்ட பகுதியான அவலாஞ்சியில் பல்லாண்டுகளாகப் பொழியும் மழைநீர் இந்த வயல்களில்தாம் சேகரமாகிக்கொண்டிருந்தது. மலைப் பகுதிகளில் தண்ணீர் ஓடுவதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முக்கியக் காரணம், தண்ணீர் செல்லும் பாதை முழுவதுமாகத் தடுக்கப்பட்டுள்ளதுதான்.
தண்ணீரைத் திசைத் திருப்புவது, தோட்டங்களில் தேக்கி வைப்பது, ஆக்கிரமிப்பு ஆகிய செயல்பாடுகளின் மூலம் சாலைகள் உருவாக்கப்படுவது; வாய்க்கால்கள் குறுக்கப்படுவது; சுற்றுலா விடுதிகள் கட்டப்படுவது போன்றவையே தற்போதைய பிரச்சினைகளுக்கு முதன்மைக் காரணம். மலைப் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அடுத்த மழையின் போதும் இதுபோன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.
காட்வின் வசந்த் போஸ்கோ
ஆய்வாளர், சூழலியல் எழுத்தாளர்
தீவிர தட்பவெப்ப மாறுபாட்டால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீலகிரியில் மழை பொழிந்திருக்கிறது. இதற்கு முதன்மைக் காரணம் பருவநிலை மாற்றம். மற்ற பகுதிகளில் அதிகரிக்கும் தொழிற்சாலைகளின் தொடர் விளைவாக, நீலகிரி போன்ற இயற்கை செழித்திருக்கும் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. நகரங்களில் வாழ்பவர்கள் காடுகளில் நிகழும் மாற்றங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கரியமில வாயுவை உறிஞ்சும் திறனைக் காடுகள் தற்போது இழந்துவருகின்றன.
மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அல்லாமல் இயற்கையாகவே மரங்கள் இறந்துகொண்டிருப்பதை என்னுடைய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளேன். சிறிய தாவரங்களும் நீர் வளமும் பருவநிலை மாற்றத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்துவருகின்றன. இவற்றின் அழிவு ஒட்டுமொத்த சூழலியல் தொகுப்பையும் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. நீலகிரி வெள்ளத்துக்கு மனிதச் செயல்பாடுகளும் குறிப்பிட்ட அளவு காரணமாக அமைந்தாலும் இத்தகைய அதிதீவிர மழை, வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தையே நமக்கு உணர்த்துகின்றன.
இது போன்ற தீவிர மழையில் உறுதியான காடுகள்கூடப் பலவீனமடைந்து, அடுத்த மழையில் கடுமையாகப்
பாதிக்கப்படும். கூர்க், வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போன்று இங்கும் ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது என்று கடந்த ஆண்டே கூறியிருந்தேன். தொடர்ந்து வறட்சியும் ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. இந்த விவகாரத்தில் உள்ளூர் ஆக்கிரமிப்புகள், ஞெகிழிப் பயன்பாடு, சுற்றுலா ஆகியவற்றுடன் தீவிரப் பிரச்சினையான பருவநிலை மாற்றத்தையும் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொ. மணிவண்ணன், பேராசிரியர்
பழங்குடிகளின் தாய்நிலம் உதகை. பல நூற்றாண்டுகளாக இயற்கையோடு இயைந்து அவர்கள் அங்கு வாழ்ந்துவருகிறார்கள். இந்தப் பழங்குடிகளைப் புலம்பெயரவைத்து புதுக்குடிகளைக் குடியேற அனுமதிப்பது இயற்கையை உயிரோடு புதைப்பதற்குச் சமம். தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டியாக விளங்கும் நீலகிரியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பள்ளத்தாக்குகளும் சரிவுகளும் பெரும் மலைச்சிகரங்களும் மிகுந்திருக்கும் நீலகிரியில், பெய்த மழை வடியாமல் இருப்பது ஒரு புவியியல் ஆச்சரியம்.
நதி வழித்தடங்கள் முற்றிலும் கான்கிரீட் காடுகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. காட்டுக்குள் விடுதிகள், விலங்குகளின் காட்டு வழித்தட மாற்றம், காட்டுக் கொள்ளை, சதுப்புநிலக் கொலை, புல்வெளிகள் நாசம், ஆழ்துளைக் கிணறுகள், பொக்லைன் நிலப்பிளப்பு, ரியல் எஸ்டேட் நில பேரம், பணப்பயிர் வேளாண்மை, காட்டு வாழ்க்கை அழிவு என ஒரு குளிர்நிலம் வெப்ப மண்டலமாக வலிந்து மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தூண்டப்பட்டு பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இயல்பான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
வெளியூர் உழவர்கள் தங்களின் சுயநல பணத்தாசைக்காக நீலகிரியின் நிலங்களை ஒத்திக்கு வாங்கி நீர்வழித்தடங்களை மாற்றியமைப்பது, நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கொள்வது, தங்கும் விடுதி நடத்தும் பெருமுதலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் பொது குடிநீர் ஆதாரங்களை தன்வயப்படுத்திக்கொள்வது, புல்வெளிகளாக இருந்த மேய்ச்சல் நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்றியமைக்கப்பட்டது போன்றவற்றால் ஈரப்பதத்தை நீலகிரி கணிசமாக இழந்துள்ளது. நகரமயமாக்கும் திட்டங்கள் நேரடியாகக் கிராமங்களையும் மறைமுகமாக இயற்கையையும் பதம் பார்த்துள்ளன.
அரசு இனியும் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், கடுமையான நிலச்சரிவையும் மண் வெடிப்பையும் நீலகிரி சந்திக்கும். பாதிக்கப்பட்ட பிறகு மனிதர்களுக்குக் கருணை காட்டுவதைவிட எப்போதும் இயற்கையிடம் நேசத்துடன் இருப்பதுதான் இதுபோன்ற பேரிடர்களில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம். சுற்றுலாப் பயணிகள் இந்த மண்ணை உல்லாச சொர்க்கபுரியாக மட்டுமே பார்க்கும் பார்வை ஆபத்தானது.
ஆசியாவின் முக்கியச் சூழலியல் மண்டலமாக நீலகிரியைப் பார்க்கும் அறிவுப்பார்வை அனைவருக்கும் அவசியம். இப்போது இருக்கும் சூழலியலை ஆராய்ந்து தொலைநோக்குடன் பார்க்கும்போது நீலகிரிக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா தலத் தகுதியை அரசு நீக்கினால் மட்டுமே இயற்கையின் இந்தத் தாய்மடி பிழைக்கும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு:
arunprasath.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT