Last Updated : 11 Jul, 2015 01:55 PM

 

Published : 11 Jul 2015 01:55 PM
Last Updated : 11 Jul 2015 01:55 PM

ராஜபாளையம் விஞ்ஞானியின் சாதனை: சர்வதேச பரிசு வென்ற விவசாயக் கருவி

ராஜபாளையத்தைச் சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இளைஞர் அவர். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகு, ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசுவதற்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டவர். இரண்டாவது ஆண்டில் கல்விக் கட்டணம் கட்டமுடியாத நிலையில் படிப்பை விட்டுவிடலாமா என்றெல்லாம் யோசித்தவர். எல்லாவற்றையும் தாண்டி நானோ தொழில்நுட்பம் படித்த அவர், தற்போது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தில் (CERN - European Organization for Nuclear Research) விஞ்ஞானியாக இருக்கும் அவர் விஜயராகவன்.

ஸ்மார்ட் அக்ரி

இந்திய விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர் கண்டுபிடித்துள்ள 'ஸ்மார்ட் அக்ரி' என்ற தனித்துவமான கருவிக்கு ஜப்பானில் ஆசியத் தொழில்முனைவு விருது கிடைத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் கிளைமேட் கிக் அமைப்பு, விவசாயம் சார்ந்த புதுமையான கண்டுபிடிப்புகள் என்று மூன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் முதன்மையான கண்டுபிடிப்பாக ஸ்மார்ட் அக்ரி கருவியைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஐ.நா. சபையின் இன்டர்நேஷனல் டெலிகாம் யூனிட் சார்பாக 150 தொழில்நுட்ப விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் முதல் 15 விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விஜயராகவனின் ஸ்மார்ட் அக்ரி கருவி தேர்ந்தெடுக்கப்பட்டது.

அட்வான்ஸ்டு ரேடியேஷன் டிடெக்ஷன் தொடர்பான ஆய்வை அணு ஆராய்ச்சிக் கழகத்தில் மேற்கொண்டபோது, தான் கற்ற கல்வி சார்ந்து சமூகத்துக்குப் பயன்படுமாறு ஒரு கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்பதை விஜய் உணர்ந்தார்.

மண் தந்த விழிப்பு

ஒரு விவசாயியின் மகனான விஜயராகவனுக்கு, விவசாயம் சார்ந்து உழவர்கள் படும் சிரமங்கள் அத்தனையும் தெரியும். "அணு ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிக்கொண்டு பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றபோது, ஒரு எண்ணம் மட்டும் என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. எனது சமூகத்துக்கு எதை நான் திருப்பியளிக்கப் போகிறேன்?" என்பதுதான் அந்த எண்ணம் என்கிறார் விஜய்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து நான்கு ஆண்டுகள் கழித்து ராஜபாளையம் திரும்பினார் விஜயராகவன். இனிப்பான தண்ணீருக்குப் பெயர் பெற்ற ராஜபாளையம், தண்ணீர் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருப்பதை அப்போது பார்த்தார். "எல்லாவற்றையும் அளப்பதற்கு நம்மிடம் கருவிகள் உள்ளன. மண்ணில் உள்ள ஈரப்பதம், தாதுகள், அமிலக் காரத்தன்மை (பி.எச்.) ஆகியவற்றை அளப்பதற்கு ஒரு கருவி தேவை என்பதை உணர்ந்தேன்" என்கிறார்.

தண்ணீர் சேமிப்பு

கழிப்பறைகள் இல்லாத வீட்டில்கூடக் கைபேசிகள் பயன்படுத்தப்படும் இந்தியச் சூழ்நிலையில், விவசாயிகள் பயன் படுத்தும் கைபேசி வழியாக மண்ணின் ஈரம் மற்றும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் கருவியே ஸ்மார்ட் அக்ரி.

கையடக்கமான கருவி ஒன்றை மண்ணில் புதைத்துவிட்டால் போதும். அது மேகக் கணினி (கிளவுட் சர்வர்) வழியாக விவசாயியின் கைபேசிக்குத் தகவல்களை உடனுக்குடன் அளித்துவிடும். மண்ணில் ஈரப்பதம் முதல் அனைத்தும் சிறப்பாக இருந்தால் பச்சை வண்ணம் எரியும். தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருந்தால் சிவப்பு வண்ணத்தைக் காண்பிக்கும்.

இக்கருவியுடன் சொட்டுநீர் பீய்ச்சும் குழாயின் மேல் இருக்கும் வகையில், இன்னொரு கருவியையும் விஜயராகவன் உருவாக்கியுள்ளார். விவசாயி அளிக்கும் தகவல்களைக்கொண்டு தேவைப்படும் இடங்களுக்கு மட்டும் நீரைப் பீய்ச்சுவதற்கு இக்கருவி உதவும். "இந்தக் கருவி மூலம் 30 சதவீதம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். அத்துடன் தண்ணீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த இயலும்" என்கிறார் விஜயராகவன்.

மத்திய அரசு உதவவில்லை

விஜயராகவனின் கருவிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஐரோப்பிய கமிஷன் நிதியளிக்கும் கிளைமேட் கிக் அமைப்பு உதவியுள்ளது. இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் செயல்படும் முதல் மாதிரிக் கருவியைச் செய்வதற்கும் இந்த அமைப்பு நிதி அளித்துள்ளது. அணு ஆய்வுக் கழகத்திலிருந்து ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்த விஜயராகவன், இந்தியச் சூழலில் தனது கருவியின் பயன்பாடு குறித்துக் களஆய்வு மேற்கொண்டார்.

சர்வதேச அளவிலான அறிவியல் அமைப்புகளும், இந்திய அளவில் சில தனியார் கல்வி நிலையங்களும் இவருடைய ஸ்மார்ட் அக்ரி கருவிக்கு ஆதரவை வழங்கினாலும் இதுவரை இவருடைய முயற்சிகளுக்கு இந்திய அரசு எந்த ஆதரவையும் தரவில்லையென்பது, அவருக்கு வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

தேவை நிதி உதவி

"ஸ்மார்ட் அக்ரி கருவிக்காக என்னுடைய அணு ஆய்வுக் கழக வேலை நேரம் போக வாரஇறுதி நாட்களிலும், நள்ளிரவுகளிலும் உழைத்தேன். இதனால் ஒரு துளிகூட, அணு ஆய்வுக் கழக ஆய்வு பாதிக்கப்படாதவாறு நடந்துகொண்டேன். பூமிக்கு அடியில் இருந்து மண் தொடர்பான விவரங்களைக் கொடுக்கும் முதல் கருவி இது. தண்ணீர் மட்டுமல்லாமல், உரங்களையும் இதன் மூலம் மிச்சப்படுத்தமுடியும். தேவையான நேரத்தில் தாவரங்களுக்கு நீர் பாய்ச்சி அவை வாடாமல் காக்கவும் உதவும்.

தாங்கள் பயன்படுத்தும் கருவிகள் மூலம் உறுதியான பலன்கள் கிடைக்கும்போதுதான், அறிவியல் மற்றும் ஆய்வுகள் மீது எளிய மனிதர்களுக்கு மரியாதை வரும். இப்போதைக்கு ஆய்வக ரீதியில்தான் என்னுடைய கருவியை ஆராய்ந்துவருகிறேன். விரிவான கள ஆய்வுக்கு நிதி தேவை. அதைத்தான் எதிர்பார்க்கிறேன்." என்கிறார், இந்த 28 வயது இளைஞர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x