Published : 10 Aug 2019 11:20 AM
Last Updated : 10 Aug 2019 11:20 AM

செயலியிலும் வந்துவிட்டது இயற்கை விளைபொருள்

சிவா

இந்த டிஜிட்டல் யுகத்தில் உலகம் கைபேசிக்குள் அடங்கிவிட்டது. அதனால் டிஜிட்டல் சந்தை பரவலாகிவருகிறது. எதையும் இருந்த இடத்திலிருந்து வாங்க முடிகிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது. இதோ இயற்கை வேளாண் விளைபொருட்களும் டிஜிட்டல் சந்தைக்கு வந்துவிட்டன. ‘ஃபார்ம் லைப் ரீடெய்ல் நெட்வொர்க்’ என்ற புதிய செயலியை ஃபார்ம் லைஃப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இயற்கைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் அது வாடிக்கையாளர்களைச் சென்றடைவதில் சிக்கல் உள்ளது. அந்தச் சிக்கலைப் போக்கும் வகையில் இயற்கை விளைபொருட்களுக்கான இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 42 பொருட்கள்வரை இந்தச் செயலி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் தொடங்கி மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய் போன்ற பொருட்கள்வரை அனைத்தும் இயற்கை வேளாண் விளைபொருட்கள்.

இந்தச் செயலியை கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேநேரம் ஏற்கெனவே இந்தச் செயலியில் உறுப்பினராக இருக்கும் ஒருவரின் பரிந்துரை மூலம்தான் இணைய முடியும். இதைப் பற்றிய அறிமுகம் இல்லாத ஒருவர் நேரடியாகச் செயலியின் நிர்வாகியைத் தொடர்புகொண்டு இணைந்துகொள்ளலாம். “இதில் ரூ.6,500, ரூ.1,100, ரூ.500 ஆகிய மூன்று கட்டணங்களில் பொருட்களை வகைப்படுத்தியுள்ளோம். மேலும் ரூ.6,500-க்கு அனைத்துப் பொருட்களும் உள்ளடங்கிய ‘ஆல் இஸ் வெல்’ என்ற சிறப்புத் திட்டமும் இருக்கிறது” என்கிறார் இந்தச் செயலியின் நிர்வாகி பிரியதர்ஷன்.

பொருள் வந்துசேரும் இடம், கிடைக்கும் நேரம், பணப் பரிமாற்றம் ஆகிய அனைத்தையும் இந்தச் செயலி மூலமே தெரிந்துகொள்ள முடியும். இந்தச் செயலிக்கு உறுப்பினர்களாகும் நுகர்வோரின் எண்ணிக்கை அடிப்படையில் கிடைக்கும் பொருட்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என்கிறார் பிரியதர்ஷன்.

சீர்காழி நெல் திருவிழா

‘சீர்காழி நெல் திருவிழா’ இன்றும் நாளையும் (ஆகஸ்ட்-10, 11) நடைபெறுகிறது. சீர்காழி நெல் திருவிழாவை, அதன் முதல் ஆண்டில் தொடங்கி வைத்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி, விதை பரிமாற்றம், உழவர்களுக்கு மரபு நெல் வழங்குதல் போன்றவை நிகழவிருக்கின்றன.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறுதானியங்கள், மூலிகை பொருட்கள் பற்றிய கருத்துரைளும் மரபு உணவு, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, கால்நடைகள் குறித்த கருத்தரங்கமும் நடைபெறுகின்றன. இந்நிகழ்வை ‘நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை’ நடத்துகிறது.

தொடர்புக்கு: 9962555889, 9865126889

ஃபார்ம் லைப் தொடர்புக்கு: 044 4203 1800
இணைய முகவரி: www.farmliferetail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x