Published : 26 Jul 2019 06:18 PM
Last Updated : 26 Jul 2019 06:18 PM
த.சத்தியசீலன்
ஆக்கிரமிப்புகளால் குறுகிவரும் விளைநிலம், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் உழவுத் தொழில் சந்திக்கும் சவால்கள். இந்தச் சூழலில்தான் குறைந்த நிலப்பரப்பில் பசுங்குடில்களில் பயிர் சாகுபடி செய்வதில் உழவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமான சாகுபடியில் ஆண்டுக்கு இரு முறை அறுவடை செய்ய முடியும் என்றால், பசுங்குடிலில் 4-5 முறை அறுவடை செய்ய முடியும்.
ஏற்றுமதித் தரமிக்க அந்தூரியம், ஆர்கிட், காரனேசன், தாஜ்மகால், ரெட் ஜெயன்ட், கஞ்சன் ஜங்கா, சிவப்பு ரோஜா, கார்வென்ட், மிக்ரா ஆகிய கொய்மலர்களும், வெள்ளரிக்காய், குடை மிளகாய் போன்ற காய்கறி ரகங்களும் பசுங்குடிலில் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. பசுங்குடிலில் பயிர்களுக்குத் தேவையான காலநிலை கிடைக்கிறது. மேலும் நோய், பூச்சித் தாக்குதல் போன்ற பிரச்சினைகளும் இல்லை. இதனால் இம்முறையைப் பின்பற்ற உழவர்கள் விரும்புகின்றனர். இருந்தாலும் பசுங்குடில்களில் ஏற்படும் நூற்புழுப் (Nematodes) பாதிப்பு பயிர்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவருகிறது.
நூற்புழுத் தாக்குதல்
“பசுங்குடில்களில் உயர் மதிப்புகொண்ட பயிர்களையே உழவர்கள் பெரும்பாலும் சாகுபடி செய்கின்றனர். தேவைக்கேற்ப 600-2000 சதுர அடி பரப்பளவில் பசுங்குடில் அமைத்துக்கொள்ளலாம். இதற்கு அரசு மானியமும் உண்டு. இம்முறையில் முதல்முறை அதிக மகசூல் ஈட்டிய உழவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் குறைந்து நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். இதற்கு நூற்புழுத் தாக்குதல் முக்கியக் காரணம்” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் உதவிப் பேராசிரியர் ப.கலையரசன்.
25-30 நாட்கள்வரை வாழ்நாள் கொண்ட ஒரு நூற்புழு 300-600 முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்கிறது. வேர்ப்பகுதியில் ஊடுருவி ஏராளமான துளைகள் இட்டு, அவற்றின் வழியாக உள்ளே சென்று ஒருவகையான திரவத்தைச் சுரக்கும். அதன்மூலம் பயிரைத் தனக்கு ஏற்றதாக மாற்றிவிடும். பயிரில் உள்ள திசுக்களும் பெரிதாகிவிடும். இதனால் வேர்களில் முடிச்சுகள் ஏற்படும். பாதிப்பு அதிகமாக இருந்தால் வேர் முழுவதுமே முடிச்சாகக் காணப்படும். பின்னர் தனக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் வேர் மூலமாக நூற்புழு உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.
நூற்புழுக்கள் இட்ட துளைகள் மூலமாக பாக்டீரியா ஊடுருவி, நூற்புழுக் கூட்டு நோயை உண்டாக்கும். இதனால் பூக்கள் உதிர்தல், இலைகள் மஞ்சளாகுதல், நீர், உரம் ஆகியவற்றைப் பயிர்கள் கிரகிக்க முடியாத நிலை உருவாகும். இதனால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும். இதைத் தடுக்க உழவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் தேர்வுசெய்த நிலத்தில் 10-30 செ.மீ. ஆழத்துக்கு 0.5-1 கிலோ அளவுக்கு மண் மாதிரி எடுத்து, ஈரப்பதத்துடன் பாலித்தீன் பையில் சேகரித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறைக்கு அனுப்பிவைத்து இலவசமாகப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்கிறார் கலையரசன்.
நூற்புழு கட்டுப்படுத்தும் முறை
“ஒரு கிராம் மண்ணில் ஒரு நூற்புழு இருந்தால், அந்த நிலம் பயிர் சாகுபடிக்கு பரிந்துரைக்கப் படுவதில்லை. நூற்புழுப் பாதிப்பே இல்லாத நிலமே சாகுபடிக்கு ஏற்றது. இருந்தாலும் நூற்புழுவால் பாதிக்கப்பட்ட நிலம்தான் நம்மிடையே அதிகம். அதில் சாகுபடி செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், அதற்கும் தொழில்நுட்பங்கள் உள்ளன” எனக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கலையரசன் பகிர்ந்துகொள்கிறார்:
# முதலில் நிலத்தில் ஆழமாக உழவு ஓட்ட வேண்டும். பின்னர் 25 மைக்ரான் பாலித்தீன் தாளைக் கொண்டு மூடாக்கு போட வேண்டும். 5-7 நாட்களில் வெப்பம் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் மேலும் அதிகரிக்கும். 15 நாட்கள்வரை வைத்தால் வெப்பத்தால் நூற்புழுக்கள் அழியும்.
# மக்கிய தொழு உரத்தை, அடியுரமாக இட வேண்டும். இதேபோல் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
# உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து நூற்புழுவால் பாதிக்கப்பட்ட நாற்றுகளை அறியாமல் வாங்கி வந்து நடவு செய்தால், மீண்டும் பாதிப்பு ஏற்படுத்தி மண்ணை நாசமாக்கிவிடும். எனவே, நாற்றுகளை வாங்கும் இடத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நாற்றுகளைச் சேகரித்து மண்போகும்வரை, அதைத் தண்ணீரில் மூழ்கச் செய்து, வேர்ப்பகுதியில் ஏதேனும் முடிச்சுகள் தென்படுகின்றனவா என்று பார்த்து வாங்க வேண்டும்.
# கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ‘பர்பியூரோ சீலியம் லிலாசினம்', ‘பொக்கோனியா கிளைமைடோ ஸ்போரியா' ஆகிய இரு பூஞ்சாணங்களை 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட்டால், அவை மண்ணில் பல்கிப் பெருகி, நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும். இவ்வாறு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும்.
ஊடுபயிராக எதிரிப் பயிர்கள்
நூற்புழுக்கள் விரும்பாத எதிரிப் பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம் என்பது உள்ளிட்ட சில புதிய யோசனைகளை நூற்புழுவியல் துறைத்தலைவர் க.பூர்ணிமா முன்வைக்கிறார்:
# நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த அவற்றின் எதிரிப் பயிர்களான கடுகு, சாமந்தி, சின்ன வெங்காயம், பூண்டு, சணப்பை, கொத்தமல்லி, நொச்சி, இலுப்பை, புங்கம், மெக்சிகன் சூரியகாந்தி ஆகியவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். இவற்றின் வேர்ப்பகுதியில் இருந்து வெளிவரும் திரவம் நூற்புழுக்களைக் கொல்லும். பயிர்களின் அருகில் நூற்புழு வராமலும் தடுக்கும்.
# வீணாகும் முட்டைகோஸ், டர்னிப், முள்ளங்கி, காலிபிளவர் கழிவை மண்ணில் இட்டு உழவு ஓட்டினால், அதில் இருந்து வெளிவரும் மணம் பயிர்களில் நூற்புழுக்களை அண்ட விடாமல் விரட்டும்.
# வெண்டை, தட்டைப்பயிர் போன்றவை நூற்புழுக்களுக்கு மிகவும் பிடித்த பயிர்கள். இவற்றைச் சோதனை முறையில் பயிரிட்டு நிலத்தில் நூற்புழு பாதிப்பு உள்ளதா என்பதை அறியலாம். அப்படி இருந்தால் நிலம் முழுவதும் இவற்றைப் பயிரிட வேண்டும். நூற்புழுக்கள் முழுவதுமாக இப்பயிர்களைத் தாக்கியதும், 35-40 நாட்களில் அப்பயிர்களை வேருடன் பிடுங்கி எடுத்து, எரித்துவிட வேண்டும். கொய்யா, வாழை, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றின் வேர்களில் இதுபோன்ற முடிச்சுகள் இருப்பதைக் காண முடியும்.
# இடைத்தரகர்கள் மூலம் நாற்றுகள் வாங்குவதை உழவர்கள் தவிர்க்க வேண்டும். விவசாயிகளே நாற்றங்காலுக்கு நேரடியாகச் சென்று நாற்றுகளை வாங்குவதே சிறந்தது.
# வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நாற்றுகளால், நூற்புழுக்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் விவசாயிகள் நாற்றுகளைத் தேர்வு செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT