Published : 20 Jul 2019 12:27 PM
Last Updated : 20 Jul 2019 12:27 PM
கிருஷ்ணன் சுப்ரமணியன்
* 1980 முதல் இன்றுவரை நமது ஞெகிழிக் கழிவு பத்து மடங்கு உயர்ந்துள்ளது.
* 77 சதவீத நிலப்பரப்பின் இயற்கைச் சமநிலை மனிதர்களால் தீவிரமாகச் சிதைக்கப்பட்டுள்ளது
* 66% கடல்பரப்பின் இயற்கைச் சமநிலை மனிதர்களால் தீவிரமாகச் சிதைக்கப்பட்டுள்ளது
* எண்பது லட்சம் உயிரின வகைகள் (species) வாழும் இந்தப் புவியில், பத்து லட்சம் உயிரின வகைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அதில் பல உயிரின வகைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் முற்றிலும் அற்றுப்போய்விடும். இவை அனைத்தும் 50 நாடுகளை சேர்ந்த 465 ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுகூடிய சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா. அவை சார்பில் வெளியிட்ட ஆராய்ச்சித் தகவல்கள் (IPBES Global Assessment Report on Biodiversity and Ecosystem).
மதக் கடமையை ஆற்றுகிறோமா?
அனைத்து மதங்களும் உயிர்களிடத்து அன்பைச் செலுத்த சொல்கின்றன. இந்தப் புவியை மனித குலத்திடம் கடவுள் ஒப்படைத்தார் என்கின்றன. ஆனால், நாமோ புவியைக் காக்கத் தவறி ஒரு லட்சம் உயிரின வகைகளை அணு அணுவாகக் கொன்றுகொண்டிருக்கிறோம், பூமியின் இயற்கைச் சமநிலையை நிலைகுலைய வைத்துக்
கொண்டிருக்கிறோம். பாலுக்காக மாட்டை நம்பியிருக்கும் நாம், தெருவில் தூக்கியெறியும் ஞெகிழிக் குப்பை அதன் வயிற்றுக்குள் செல்வதைப் பற்றி இன்னமும்கூடக் கவலைப்படாமல்தான் இருக்கிறோம்.
ஆனால், மத போதனைகளோ வானில் பறக்கும் பறவை முதல் கடலில் வாழும் ஆமைவரை அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கக்கூடிய ஆற்றலும் கடமையும் படைத்தவர்களாக மனிதர்களான நம்மைத்தான் சொல்கின்றன. மனிதர்களின் இந்தக் கட்டுமீறிய அழிவு வெறியை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது? பூமியின் வளங்களைச் சுரண்டுவதும், காடுகளை அழிப்பதும், பூர்வகுடிகளை வேரறுப்பதும், சுற்றுச்சூழலை சிதைப்பதையும் எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது?
கடமையைச் செய்ய வேண்டிய காலம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அத்தியாவசியம் குறித்து மக்களிடையே மதத்தலைவர்கள் வலியுறுத்த வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வழிபாட்டுத் தலங்கள் உயிரினங்களைப் போற்றும் பல்லுயிர் மையங்களாக உருமாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தலமும் எந்தக் கழிவு, குப்பையை உருவாக்காத (Zero Waste) தலமாக மாற வேண்டிய நாட்களைக் கடந்துகொண்டிருக்கிறோம்.
மதத்தலைவர்கள் மட்டும் அல்ல, வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பவர்கள் முதல் வழிபடச் செல்லும் பக்தர்கள்வரை அனைவரும் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் சுற்றுச்சூழல் நலனைப் பேணுவதில், மற்ற தலங்களைவிட எங்கள் தலமே சிறந்தது என்ற பெருமையை எட்ட முயல வேண்டும்.
கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு:
krishnan@theyellowbag.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT