Published : 02 May 2015 03:01 PM
Last Updated : 02 May 2015 03:01 PM

நிலமும் வளமும் - நூலகம்: செங்குத்துத் தோட்டமும் தொங்கும் தோட்டமும்

நகரத்தில் வாழ்கிறோம். இட நெருக்கடி. ஆனால், செடி கொடி வளர்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கீழ்க்கண்ட யோசனைகளைப் பின்பற்றலாமே.

செங்குத்துத் தோட்டம்:

நகர்ப் புறங்களில் இடப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது. இதைத் தாண்டி வீட்டுத் தோட்டம் அமைத்து ஆனந்தம் அடைய முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

சற்று உயரமான பைகளை செங்குத்தாக நிறுத்தி வைத்து, பையின் பக்கவாட்டில் சிறிய துவாரங்கள் இட்டு, அதனுள் நாற்றுகளை வைத்து நீர் ஊற்றினால், சில நாட்களில் செடிகள் சிறப்பாக வளர ஆரம்பிக்கும். 3 அடி உயரப் பையில் சுமார் 25 செடிகளை வளர்க்கலாம். இன்னும் சற்று செலவு செய்தால் சுவற்றில்கூட செங்குத்தாக வளர்க்கலாம். சுவர் கறை படாமல், பிளாஸ்டிக் வலை அமைப்பை சுவரில் பதித்து, அலங்காரச் செடிகளையும் கீரை வகைகளையும் வளர்க்கலாம்! இதற்கு செங்குத்துத் தோட்டம் என்று பெயர்.

தொங்கும் தோட்டம்!

தொங்கும் தோட்டம் என்றால் ரொம்ப செலவு பிடிக்கும். அதெல்லாம் நமக்குச் சாத்தியமில்லை என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படி நினைக்காதீர்கள். அமெரிக்காவில் `தலைகீழ் வளர்ப்பு முறை’ தற்போது பிரபலமாக உள்ளது. அதற்கென வடிவமைக்கப்பட்ட பைகளில் நாற்றுகளைத் தலைகீழாக வேர்களை மேலாகவும் தண்டுப் பகுதி கீழ்நோக்கியும் இருக்குமாறு தொங்கவிட்டு அறுவடை செய்யலாம்.

பெயிண்ட் வாளியில் பக்கவாட்டில் துளையிட்டு நாற்றுகளை உட்செலுத்திப் பல காய்கறி, கீரை வகைகளை வளர்க்க முடியும். குறிப்பாகத் தக்காளி, கீரை, புதினா போன்றவற்றை இந்த முறையில் வளர்க்கலாம்.

தொங்கும் முறையில் வளர்ப்பதால் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து செடிகள் காப்பாற்றப்படும். பார்வைக்கு மேலிருப்பதால் இலைகளின் கீழ் முட்டையிடும் பூச்சிகளையும் எளிதாகக் கண்டுகொள்ள முடியும். அழகுத் தாவரங்களை இந்த முறையில் வளர்ப்பதால் இடப் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன் வீட்டின் தோற்றத்தையும் கலைநயத்துடன் மாற்றலாம்!

அமைக்கும் முறை:

துளையிட்ட தொட்டி வாளி அடியில் நீரை உறிஞ்சத் தென்னை மட்டைகளை இட்டு, மண்ணுக்கு மாற்றாகத் தென்னை நார்க் கழிவு, மண் புழு உரம், இலை மக்குக் கலவையை நிரப்பி வேர்ப் பகுதி துவாரங்களின் வழியே வாளிக்குள் இருக்குமாறு செய்து தொங்கவிட வேண்டும். சில மாதங்களில் அறுவடையை ஆரம்பிக்கலாம்.

நன்றி: ஹோம் கார்டன், பா. வின்சென்ட்,

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு,

மயிலாப்பூர், சென்னை - 4

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x