Published : 16 May 2015 11:58 AM
Last Updated : 16 May 2015 11:58 AM
பச்சை நிறத்தில் சற்றே பெரிய, வண்ணமயமான அந்த மீனை நான்கு ஐந்து பேர் சேர்ந்து சுமந்துவருகிறார்கள், காளி வேஷம் போட்டவர் கையில் பல்வேறு குடிநீர் புட்டிகள், துர்நாற்றம் பொறுக்க முடியாமல் முகமூடி அணிந்த கள்ளழகர் ஓவியம்... இப்படி வைகை நதியின் இன்றைய அவலமான நிலையைச் சொல்லும் அலங்கார அணிவகுப்பு, சமீபத்தில் மதுரைவாசிகளை சற்று நிறுத்தி யோசிக்க வைத்தது.
தமிழகத்தின் பண்டைய நதிகளில் ஒன்றான வைகை நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி வைகைக் கரையோரம் நடத்தப்பட்ட வைகை நதி மீட்டெடுப்பு அலங்கார அணிவகுப்பில்தான் இந்தக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
பிளாஸ்டிக் மாசு
வைகை மாசுபட்டுள்ளதற்கு அடையாளமாகச் சுமந்துவரப்பட்ட சுமார் 25 அடி நீளம் கொண்ட மீன் பொம்மையில் பதிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் புட்டிகள் மதுரை நகரத்துச் சாலைகளில் இருந்து திரட்டப்பட்டவை. வைகை நதியில் பிளாஸ்டிக் புட்டிகளை வீசி மாசுபடுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வை இது போன்ற மீன் பொம்மைகள் ஏற்படுத்தின.
அதேபோன்று வைகை நதிக் கரைகளில் செழித்த வாழ்க்கை, பண்பாட்டு கூறுகளின் படங்கள் ஒருபக்கம் எடுத்துவரப்பட்டன. மற்றொரு புறம் வைகை நதியும், மதுரை நகரும் மாசுபட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
பழம்பெருமை
சிலப்பதிகாரத்தில் ‘வையை என்னும் பொய்யா குலக்கொடி' என்று இளங்கோவடிகள் பாராட்டிய நதி வைகை. தென் மாவட்டங்களுக்குக் காலம்காலமாக உயிர்நாடியாக இருந்துவந்த வைகை, இப்பகுதி மக்களின் பண்பாட்டிலிருந்து பிரிக்க முடியாத முதன்மை அடையாளம். ஆனால், இன்றைக்கோ வைகையில் தண்ணீர் ஓடும் நாட்களை எண்ணிப் பார்த்துவிடும் நிலைதான் இருக்கிறது. அத்துடன் மோசமாக மாசுபட்டுள்ளது, நதியில் ஓடும் தண்ணீரில் நச்சு கலந்துள்ளது, பருவநிலை மாற்றம் காரணமாகத் தண்ணீர் பாய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வைகை நதியின் பழம்பெருமையை மீட்டெடுக்கும் வகையிலும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் இந்த அணிவகுப்பு உணர்த்தியது. வைகை நதி மீட்டெடுப்புத் திட்டம் என்ற பெயரில் மதுரை தானம் அறக்கட்டளையும், நியூயார்க்கைச் சேர்ந்த எர்த் செலிப்ரேஷன்ஸ் அமைப்பும் தலைமையேற்று இந்த அணிவகுப்பை ஒருங்கிணைத்திருந்தன.
பாதுகாக்கும் திட்டங்கள்
எர்த் செலிப்ரேஷன்ஸ் அமைப்பு, அமெரிக்காவில் உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் ஹட்சன் நதியை மீட்டெடுக்கும் திட்டத்தில் ஈடுபட்ட அனுபவத்தைப் பெற்றிருக்கிறது. அணிவகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் ஹட்சன் நதி மீட்டெடுப்பு அனுபவம் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெலிசியா யங் பகிர்ந்துகொண்டார்.
"வைகை நதியில் மாசுபட்ட கழிவுநீர் கலக்கப்படுவதையும், குப்பை கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வைகை நதியின் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் நீண்ட நாள் திட்டம் வகுக்கப்படும்" என்று தானம் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் வாசிமலை தெரிவித்தார். வைகையைப் பற்றிய பசுமை நினைவுகள் எதிர்காலத்திலும் சாத்தியப்படும் என்று நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT