Published : 18 Apr 2015 12:05 PM
Last Updated : 18 Apr 2015 12:05 PM
ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்தக் காலகட்டத்தின் வரலாற்று புத்தகங்களைப் படிப்பதைவிடவும், அப்போது வெளியான நாவல்களைப் படிப்பது அதிகப் புரிதல்களைத் தரும் என்று சொல்லப்படுவது உண்டு.
அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக உலகம் முழுவதும் பல நாவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதப்பட்ட சில ஆங்கில நாவல்கள், நமது புரிதலை மேம்படுத்துகின்றன. அவை:
The Hungry Tide, அமிதவ் கோஷ்:
பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் எழுதிய குறிப்பிடத்தக்க நாவல். ஓங்கில்கள் என்பது டால்ஃபினுக்கான தமிழ் பெயர். கடல் மட்டுமல்லாமல், நன்னீர் நிலைகளிலும் ஓங்கில்கள் வாழ்கின்றன. அப்படி அழிவின் விளிம்பில் உள்ள ஐராவதி ஓங்கில்கள் குறித்து ஆராய்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவனக் காட்டுக்குச் செல்கிறாள் பியா. அங்கே அவள் சந்திக்கும் சவால்களும் பிரச்சினைகளும்தான் கதை. நாவல் முழுக்கச் சுந்தரவனத்தின் கம்பீரமான வேங்கைப் புலிகளும், ஐராவதி ஓங்கில்களும் விரவிக் கிடக்கின்றன. நாவலைப் படித்து முடித்த கொஞ்ச நாளைக்குப் பிறகும், நமது மனம் மட்டும் சுந்தரவனக் காட்டுக்குள்ளே அலைந்து கொண்டிருப்பது இந்நூலின் சிறப்பு.
Scent of a Game, ராகவ் சந்திரா:
இந்தியாவில் வேங்கைப் புலிகளின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பது, மற்றொருபுறம் கொடூரமாகக் கொல்லப்படுவது, அத்துடன் மனித - விலங்கு எதிர்கொள்ளல் அதிகமாக நிகழ்ந்துவரும் இந்த நேரத்தில், வெளியாகியுள்ள முக்கியமான நாவல் இது. மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஹா புலிகள் காப்பகத்தில் இருந்து வங்கப் புலி ஒன்று காணாமல் போகிறது. அது கடத்தப்பட்டதா, கொல்லப்பட்டதா, இல்லை காப்பாற்றப்பட்டதா என்பதை ஒரு பெண் பத்திரிகையாளர் துப்பறிகிறார். புலிகள் ஏன் கொல்லப்படுகின்றன, புலிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கும் சீனாவின் செயல்பாடுகள், புலி கடத்தல் எனும் சர்வதேச மாஃபியா எனப் பல விஷயங்களை ஆழமாகத் தொடுகிறது இந்த நாவல். நாவலின் ஆசிரியர் மத்தியப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Gift in Green, சாரா ஜோசப்:
மலையாளத்தில் சாரா ஜோசப் எழுதிய இந்த நாவலை ஆங்கிலத்தில் வால்சன் தம்பு மொழி பெயர்த்து இருக்கிறார். கேரளத்தில் உள்ள ஆதி என்னும் கிராமத்துக்கு அங்கிருக்கும் ஒரு நீர்நிலைதான் வாழ்வாதாரம். ஆனால், அதை அழித்துவிட்டு அங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அரசியல்வாதி திட்டமிடுகிறார். மண் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்ட அந்தக் கிராமத்து மக்கள் எப்படி அதை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இந்த நாவலின் மையம்.
Impeachment, அஞ்சலி தேஷ்பாண்டே:
போபால் விஷ வாயுக் கசிவு நம் காலத்தின் மறக்க முடியாத கறுப்புப் பக்கம். அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த நாவல். போபால் சம்பவம் நடந்து பல பத்தாண்டுகள் ஆன பிறகு, அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தரப் பத்திரிகை யாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் திட்டமிடுகிறார்கள். அவர்களுடைய போராட்டம் ஒரு பெண் பத்திரிகையாளர் கதாபாத்திரம் வழியாக இந்த நாவலில் சொல்லப்பட்டி ருக்கிறது.
Nectar in a Sieve, கமலா மார்கண்டேயா:
இந்தியாவில் 'சூழலியல் பெண்ணியம்' என்கிற துறைக்கு வித்திட்ட முதல் நாவல் எனும் பெருமை இந்நாவலுக்கு உண்டு. இந்தியா சுதந்திரமடைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, மிக வேகமாக நகர்ப்புற வளர்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் இந்த நாவல் நடக்கிறது. தென் இந்தியாவின் ஒரு கிராமத்தில் விவசாயிகளான ருக்மணியும் நாதனும் வாழ்ந்து வருகிறார்கள். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில், அந்தக் கிராமத்துக்கு அருகில் வரும் தோல் பதனிடும் தொழிற்சாலை குறுக்கிடுகிறது. அது ஏற்படுத்தும் நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை, அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே நாவலின் மையம்.
The man from Chinnamasta, இந்திரா கோஸ்வாமி:
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி அசாமிய மொழியில் எழுதிய இந் நாவலை ஆங்கிலத்தில் பிரசந்தா கோஸ்வாமி மொழிபெயர்த்துள்ளார். அசாமில் காமாக்கியா கோயில் என்னும் வழிபாட்டு தலம் உண்டு. அங்கு விசேஷ நாட்களில் விலங்குகளைப் படையலிடும் வழக்கம் இருந்துவருகிறது. அதற்கு எதிராக அங்கு வசித்துவரும் ஒரு துறவி போராடுகிறார். அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் கதை. இந்த நாவல் வெளியானபோது, கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
The Last Wave, பங்கஜ் சேக்ஷரியா:
அந்தமான் தீவுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்கிறார் பத்திரிகையாளர் ஹரிஷ். அப்போது அந்தத் தீவின் பழங்குடிகளான ஜராவா மக்களைச் சந்திப்பதற்கு, அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஜராவா மக்கள் சுரண்டப்படுவது, அந்தமான் தீவில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்கள் போன்றவை குறித்து அவர் அறிந்துகொள்கிறார். அந்தத் தீவில் அவர் தங்கியிருக்கும் நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளே, இந்த நாவலின் கதை. இந்த நூலின் ஆசிரியர் பங்கஜ், அந்தத் தீவில் 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருபவர். அந்த அனுபவங்களின் அடிப்படையில் நாவலை எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT