Published : 25 Apr 2015 12:17 PM
Last Updated : 25 Apr 2015 12:17 PM
சமீபத்தில் வெளியான சில சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
பொருட்களின் கதை, ஆனி லியோனார்டு
பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பயங்கரமான பாதிப்புகள் என்ன, நாம் சந்தோஷமாக அணிந்துகொள்ளும் ஒரு டி ஷர்ட் அதன் உண்மையான அடக்க விலையை பிரதிபலிக்கிறதா - அதில் மறைந்துள்ள செலவுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன என்பது போன்ற முக்கிய கேள்விகளை எழுப்புகிறது இந்தப் புத்தகம். இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இந்தப் பூவுலகை எப்படி கடுமையாக பாதிக்கிறது என்பதை விளக்குகிறார் நூல் ஆசிரியர். அதற்கான மாற்று என்ன, அந்த மாற்று நமது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332-273444
காடுகளுக்காக ஒரு போராட்டம் - சிக்கோ மென்டிஸ்
பலரது உயிர்த் தியாகம்தான் இந்தப் பூவுலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காட்டை காக்கப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிர் துறந்தவர் சிக்கோ மென்டிஸ். அவருடைய போராட்டம் நிறைந்த வாழ்க்கையின் கதை.
தமிழில்: பேராசிரியர் ச. வின்சன்ட், எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 9865005084
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள், வழக்குரைஞர் சுந்தரராஜன்
தமிழகம் எங்கும் சிறியதும் பெரியதுமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருகிவருகின்றன. அதற்கு எதிராக பலர் போராடி வருகின்றனர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசின் கடமைகள் என்ன, மக்களிடம் இருந்து பறிக்கப்படும் சட்டரீதியிலான உரிமைகள் என்ன என்று விளக்குகிறது இந்தப் புத்தகம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்கள் மூலமாக எப்படி சட்ட ரீதியில் தீர்வு காண்பது என்று வழிகாட்டுகிறது இந்த நூல்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006
இறகுதிர் காலம், கோவை சதாசிவம்
பறவைகள், பவழத் திட்டுகள், நீர்நிலைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களின் அழிவை கவனப்படுத்துகிறது இந்த நூல். உணவுச் சங்கிலியில் முதன்மைப் பங்காற்றும் காட்டுயிர்கள், தாவரங்கள், நீர்நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே இயற்கையிடம் இருந்து விலகி வாழும் மனிதர்கள் உயிரோடு இருக்க முடியும் என்பதை இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
வெளிச்சம் வெளியீடு,
தொடர்புக்கு: 98947 77291
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
கடந்த 2013-ல் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு. இயற்கை வேளாண்மையை பரப்புவதற்காக தமிழகம் எங்கும் அவர் சுற்றித் திரிந்தபோது கிடைத்த அனுபவங்களையும், இயற்கை குறித்த புரிதலையும் இதில் பதிவு செய்துள்ளார். இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய புரிதலை இந்நூல் விரிவுபடுத்தும்.
விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283
மேக வெடிப்பு, சுப்ரபாரதிமணியன்
இயற்கையைச் சுரண்டும் மனி தனின் பேராசை, இயற்கைச் சீற்றங்கள், உயிர் துறந்த சுற்றுச்சூழல் செயல் பாட்டாளர்கள் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொள்ள இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் புத்தகம் முன்னெச்சரிக்கை செய்கிறது.
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 04259-226012
யாருக்கானது பூமி, பா. சதீஸ் முத்து கோபால்
பறவைகள், உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள தொடர்பு, அவை ஏன் அழிந்துவருகின்றன என பல்வேறு விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. காட்டுயிர் சார்ந்து நூல் ஆசிரியரின் அனுபவங்கள் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
அகநாழிகை பதிப்பகம், தொடர்புக்கு: 9994541010
ஆணி வேர் - ஆர்கானிக் ஏன்? என்ன? எது?
மருந்தே உணவு, உணவே மருந்து என்பதுதான் நம்முடைய பாரம் பரியம். அப்படிப் பார்த்தால், இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுதான் பல்வேறு நோய் களுக்கான காரணமாக இருக்கிறது. எது நமக்கு உகந்த உணவு, இயற்கை வாழ்வியல் என்றால் என்ன என்பது குறித்த எளிமையான அறிமுக நூல் இது.
ஓம் பதிப்பகம், தொடர்புக்கு: 9445775478
சிறு வெளியீடுகள்
ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது, எஸ். ராமகிருஷ்ணன்
ஜப்பான் நகரமான ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஏற்படுத்திய பாதிப்புகள் மோசமானவை. அதைவிடவும் மோசமான அணுகுண்டுகள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இன்றைக்கு உள்ளன. இந்தியா, பாகிஸ்தானிலும் உள்ளன. இன்னொரு அணுகுண்டு வீச்சு நடந்தால் என்ன ஆகும் என்பதை வரலாற்றுப் பின்புலத்தில் அலசுகிறது இப்புத்தகம்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 044-43809132
உயிரைக் குடிக்கும் புட்டிநீர், நக்கீரன்
நாட்டிலேயே பாட்டிலில் அடைக்கப் பட்ட நீர் அதிகம் விற்பனை ஆவது தமிழகத்தில்தான். தூய்மையானது என்று நம்பப்படும் இந்த புட்டிநீர் நம் உடலையும் உலகையும் எப்படி குப்பை ஆக்குகிறது என்று அதிர்ச்சிகரமான உண்மைகளை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT