Published : 28 Mar 2015 02:28 PM
Last Updated : 28 Mar 2015 02:28 PM
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62-வது தேசியத் திரைப்பட விருதுப் பட்டியலில் பலரும் கவனிக்க மறந்த தமிழ்ப் பெயர் - நல்லமுத்து. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் பெருமைகளைக் கூறும் வகையில் அவர் இயக்கிய Life Force - India's Western Ghats என்ற ஆவணப் படம், சிறந்த சாகசப் படப் பிரிவில் (Best Exploration/Adventure film) தேசிய விருது பெற்றுள்ளது. இந்தப் படம் டிஸ்கவரி அலைவரிசைக்காக எடுக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பி.பி.சி., நேஷனல் ஜியாகிரஃபிக், டிஸ்கவரி சேனல் உள்ளிட்ட உலகின் பிரபல இயற்கை அலைவரிசைகளுக்காகக் காட்டுயிர் ஆவணப் படங்களை அவர் இயக்கி வருகிறார். ஏற்கெனவே, பல்வேறு திட்டங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
அவரது கிரே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ‘லைஃப் போர்ஸ்’ ஆவணப் படத்தைத் தயாரித்தவரும் நல்லமுத்துதான். இதற்காக, ஒன்றரை வருடங்களுக்கு மேலாகத் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலக் காடுகளில் பயணித்திருக்கிறார். இந்த ஆவணப் படத்தில் அழிவின் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ள சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), இருவாச்சி, தேவாங்கு, கேழல்மூக்கன் தவளை போன்ற அரிய உயிரினங்களையும் புலி, யானை, கரடி போன்றவற்றையும் கவனப்படுத்தியுள்ளார்.
2012-ல் அவர் இயக்கிய Tiger Dynasty என்ற காட்டுயிர் ஆவணப் படம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும், சிறந்த சுற்றுச்சூழல் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சுவாரசியமான விஷயம், மங்கள்யான் விண்கலத்தின் திட்ட இயக்குநர் அருணனின் தம்பி இவர். இவர்கள் இருவருடைய தம்பி எஸ்.எஸ். குமரன் திரைப்பட இசையமைப்பாளர்-இயக்குநர். இவர்கள் மூவரும் நெல்லை மாவட்டம் கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் சுப்பையா-மாணிக்கம் அம்மாளின் புதல்வர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT