Published : 28 Mar 2015 02:31 PM
Last Updated : 28 Mar 2015 02:31 PM
பசி... உலகம் அனைத்துக்குமான பொதுமொழி. என்றாலும், ஒருவனுடைய பசியின் மொழியை இன்னொருவரால் புரிந்துகொள்ள முடியாது. அவரே பசியை உணரும்வரை!
காணாமல் போன பசி
“முன்பெல்லாம் பசித்துச் சாப்பிட்ட காலம் இருந்தது.இன்றைக்குப் பலரும் பசியே இல்லை என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள். ஆனாலும், சாப்பிட வேண்டுமே என்ற கடமைக்காக ஆரோக்கியமில்லாத உணவு வகைகளை அவ்வப்போது உள்ளே போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
தொடக்கத்தில் உணவுக்காகத் தொடங்கிய வேட்டை, இன்றைக்குப் பதுக்கல் என்ற பேராசையில் முடிந்திருக்கிறது. அதன் பயனே பசியின்மை. ஒரு சாண் வயிறுதான் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பது முதல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பதுவரை செல்கிறது.
காலச் சுழற்சியில் பசி, உணவு ஆகிய இரண்டின் தன்மையும் மாறிவிட்டது. உணவின் தன்மை மாறியதாலேயே பசி மறக்கடிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் எஃப் 5 கிரீன் அமைப்பின் நிறுவனரும் ஒளிப்படக் கலைஞருமான வி.பி. ராஜ்.
பசிக் காட்சிகள்
சென்னையில் சமீபத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்' ஏற்பாடு செய்திருந்த ‘பொழுதுகள் ஆறு' விழாவில் பசி குறித்த ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருந்தது எஃப் 5 கிரீன்.
இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் பகலவன், கலைவாணன், தாமரைக் கண்ணன். இணையம் வழியாக இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்வதுடன், கிரீன் கஃபே என்ற இயற்கை விவசாய உணவகத்தையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
நல்ல பசிக்கு நல்ல உணவே எரிபொருள். அதனால் ரசாயன உரம் பயன்படுத்தப்படாத, நச்சுத்தன்மை இல்லாத உணவைத் தேடி உண்போம். அதற்குப் பசியை உணர வேண்டும். பசியை மதிக்க வேண்டும் என்கிறார் வி.பி. ராஜ்.
மண்ணின் மகத்துவம்
எல்லோருக்கும் நல்ல உணவு தேவை. அந்த நல்ல உணவைத் தரும் மண்ணை மறந்துவிட முடியுமா?
‘சர்வதேச மண் வள ஆண்டு' என 2015-ம் ஆண்டை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதையொட்டி மேற்கண்ட விழாவில், மண்புழு உர நிபுணர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் பேசியபோது, "பூமியில் 75 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 25 சதவீதத்தில் 15 சதவீதம் மனிதர்கள் மட்டுமே வாழ்வதற்கு ஏற்றது. அதில் விவசாயம் செய்ய முடியாது.
எஞ்சிய 10 சதவீத நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து, அவற்றின் மூலமே மனிதர்கள் வாழ முடியும். அந்த நிலத்தையும் மண்வளத்தையும் பாதுகாத்து, அடுத்த சந்ததிகளுக்கு ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ரசாயன உரங்களைத் தெளிக்காமல், இயற்கை முறையில் மண்ணைப் பக்குவப்படுத்தும் விவசாயிதான் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார். இந்த மண்ணும் மக்களும் நிலைத்திருப்பார்கள்" என்றார்.
விழாவின் ஒரு பகுதியாக விதைத் திருவிழாவும், பாரம்பரியத் திணை உணவுத் திருவிழாவும் நடைபெற்றன. செவிக்கும் ஈன்று, வயிற்றுக்கும் ஈன்ற அந்த 'பொழுதுகள் ஆறு' நல்ல பொழுதாகவே அன்றைக்கு அமைந்தது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT