Last Updated : 31 Jan, 2015 03:19 PM

 

Published : 31 Jan 2015 03:19 PM
Last Updated : 31 Jan 2015 03:19 PM

புதிய தரிசனம்

காட்டில் உள்ள மரங்களை வெட்டி, வணிகத் தேவைகளுக்காக விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறான் காடோடி நாவலின் நாயகன். மலேசியாவில் உள்ள அந்த நிறுவனம், போர்னியோ காடுகளுக்கு அவனை அனுப்பி வைக்கிறது.

வனங்களின் மீதும், இயற்கையின் மீதும் இயல்பிலேயே நாட்டம் கொண்ட நாயகன் அக் காடுகளுக்குள் நுழைந்ததும் அதுவரை அவன் நினைத்தும் பார்த்திராத பல்வேறு உயிரினங்களை, தாவரங்களைக் காண்கிறான். அதனால் அவனுக்குள்ளே ஏற்படும் பரவசம், இயற்கையை நோக்கி மேலும் முன் நகர்த்துகிறது.

பணியின் நிமித்தம் காடுகளுக்குள் செல்லும் அவன், அந்தக் காடுகளைச் சேர்ந்த தொல்குடிகளைச் சந்திக்கிறான். அவர்களுடன் நட்பாகிறான். அந்தக் காட்டின் இயல்பு குறித்தும், இயற்கையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் அவனுக்கு அவர்கள் நிறைய செய்திகளைச் சொல்கிறார்கள்.

அந்தத் தொல்குடிகளின் நட்பு மூலம், நிலம்-இயற்கை வளம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் அவன், தான் தேர்வு செய்த பணியைக் குறித்துக் கடுமையான குற்றவுணர்வு கொள்கிறான். அந்தப் பணியை விட்டுவிட்டு ஓட நினைக்கிறான். ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலைகள் அவனைக் கட்டி போடுகின்றன.

அந்தக் காட்டில் உள்ள மரங்களை எல்லாம் அழித்துவிட்ட பிறகு, பெய்கிற மழையில் அவன் இருக்கும் இடம் வெள்ளத்தால் சூழப்படுகிறது. அப்போது நகரத்து மனிதர்களின் உண்மை முகம் குறித்து அவன் விழிப்படைகிறான். புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன.

இருவாச்சிகள், ஓராங் ஊத்தான்கள், ஆதிக்குரங்குகள், பறவை கூடு சூப், கடமான் வேட்டை என நாயகன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பங்கேற்பாளராக நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூல் ஆசிரியர் நக்கீரன். அவர் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை மலேசியாவின் போர்னியோ காடுகளில் கழித்தவர் என்பதால், நாவலின் விவரணைகளில் நம்பகத்தன்மை கூடுதலாகவே இருக்கிறது.

ஒவ்வோர் அனுபவமும் சிலிர்க்க வைக்கிறது என்றாலும், எல்லாமே ஒரு பெருங்காட்டின் அழிவைச் சொல்வதால், துயரமும் அவலமும் மனதின் ஆழத்தில் இறங்குகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பு இதுவரை கால் பதிக்காத புதிய களத்தைத் தொட்டுள்ள இந்த நாவல், இலக்கியம்-சூழலியல் எழுத்து என இரண்டு தளங்களின் எல்லைகளையும் பல தப்படி நகர்த்தியுள்ளது.

காடோடி, நக்கீரன், அடையாளம் வெளியீடு,

205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621310,

தொடர்புக்கு: 94447 72686





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x