Published : 10 Jan 2015 04:36 PM
Last Updated : 10 Jan 2015 04:36 PM

கொஞ்சம் பெட்ரோல் நிறைய லாபம்

பெட்ரோலிய சேமிப்பு வாரம்: ஜனவரி 4-10

மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்கான வாகனங்களும். இதற்காக வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.

பெட்ரோலும் டீசலும் பெட்ரோலியம் எனும் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்துபோகக்கூடியது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலைச் சார்ந்து நாம் இயங்க முடியாது.

எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலைச் சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றையும் குறைத்துப் பணத்தையும் சேமிக்க முடியும். கீழ்க்கண்ட யோசனைகள் அதற்கு உதவும்:

# வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும்.

# பெட்ரோல்-டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகரிக்கும்.

# வேகத்துக்கு ஏற்ப வாகனத்தின் கியரைத் தொடர்ந்து மாற்றி இயக்க வேண்டும். வேகம்-கியர் இடையிலான சமநிலை இல்லையென்றால் எரிபொருள் செலவு கூடும். போக்குவரத்து நெரிசல், சாலையின் தன்மையைப் பொறுத்து எப்போதும் குறிப்பிட்ட ஒரு வேகத்தில் மட்டும் வண்டியை ஓட்ட முயற்சியுங்கள்.

# இந்தியச் சாலைகளில் 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுவதன் மூலம் 40 சதவீதம் எரிபொருள் சேமிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள்.

# புறநகர்ப் பகுதிகள், நெடுஞ்சாலைகள் போன்ற வாகன நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் அதிகபட்சக் கியரில் ஓட்டலாம். மேடும் பள்ளமுமான சாலைகளுக்குப் பதிலாகச் சமமான சாலையிலேயே ஓட்ட முயற்சிக்கவும்

# போக்குவரத்து சிக்னலில் வாகனத்தை அணைத்துவிட்டு, நமக்குச் சிக்னல் கிடைப்பதற்கு 3 விநாடிகள் முன்னதாக வாகனத்தை ஸ்டார்ட் செய்தால்போதும். குறைந்தபட்சமாக 14 விநாடிகள் வாகனம் அணைக்கப்பட்டிருந்தால்கூட எரிபொருள் சேமிக்கப்படும். அணைத்துவைப்பதன் மூலம் சராசரியாக 20 சதவீத எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

# வண்டியில் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது. மீறி அதிக எடையை வாகனம் சுமந்து சென்றால், எரிபொருள் செலவு கூடும்.

# வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னதாக, எங்கே போகிறோம், அந்த இடத்தை எப்படி எளிதாகச் சென்றடையலாம் என்பதைத் திட்டமிடவும். எல்லா வெளி வேலைகளையும் திட்டமிட்டு அதற்கேற்பப் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

# பழக்கமில்லாத, புதிய பாதைகளில் செல்லும்போது, எங்கே செல்ல வேண்டும் என்பதைச் சரியாக விசாரித்துவிட்டுச் செல்ல வேண்டும். இதனால் இடத்தைத் தேடுவதற்கான நேரம், எரிபொருள் செலவு குறையும்.

# ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே நல்லது. அதிக வேகத்தில் செல்வது எரிபொருள் செலவை அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும்.

# பெட்ரோல்-டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்பாதீர்கள். பெட்ரோல்-டீசல் நிரப்பப்பட்ட பிறகு, அதன் மூடி சரியாக மூடி இருக்கிறதா என்று பாருங்கள். சரியாக மூடவில்லை என்றால், எரிபொருள் ஆவியாக நேரிடும்.

# கார்களில் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்துவது எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். குளிரூட்டும் இயந்திரத்தைத் தவிர்க்கலாம், கூடியவரை அணைத்து வைக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளைச் சேமிக்கலாம்.

# பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம்.

# தனியாகக் காரில் செல்வதைத் தவிருங்கள். அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.

# சைக்கிள், மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்த முயற்சியுங்கள்.

# எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப் படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக வைக்கலாம்.

இந்த யோசனைகளைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கடைப்பிடித்துவந்தால், எரிபொருள் செலவை நிச்சயம் குறைக்கலாம்.

- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x