Published : 24 Jan 2015 04:22 PM
Last Updated : 24 Jan 2015 04:22 PM
கடலை ஒரு சிமிழுக்குள் அடக்க முடியுமா? ஒரு காட்டை ஒரு தோட்டத்தில் அடக்கிவிட முடியுமா? முடியாதுதான். ஆனால், ஒரு காட்டில் அழிந்துவரும் தாவரங்களைக் காப்பாற்ற ஒரு தனி மனிதர் முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழிந்துவரும் அரிய தாவரங்களைக் காப்பாற்றிய அந்த மனிதர் இந்தியரல்ல, ஜெர்மானியர்.
உல்ஃப்கேங் தேவூர்காஃப் (Wolfgang Theuerkauf), இந்தியாவுக்கு 40 ஆண்டுகளுக்கு முன் வந்தார். நாராயண குருவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், தாய்நாடு திரும்பாமல் கேரளத்திலேயே தங்கிவிட்டார். ஆரம்பத்தில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்த அவர், கொஞ்சக் காலத்திலேயே அதற்கும் மூத்ததான இயற்கையின்பால் ஈர்க்கப்பட்டார்.
புதிய பூ
அன்பாகவும் மரியாதையாகவும் சுவாமி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர், கேரளத்தின் வயநாடு பகுதியில் அலத்தில் என்ற இடத்தில் ஒரு சிறிய ஆசிரமத்தைத் தொடங்கினார். ஒரு நாள், அவரது காலருகே மரத்தில் இருந்து ஒரு மலர் விழுந்தது. அழகுடன் வித்தியாசமாக இருந்த அந்த மலர், எந்த வகையைச் சேர்ந்தது என்று தேடினார். அது ஆர்கிட் (orchid) எனப்படும் தொற்றுத் தாவரம் என்று தெரிந்தது. அதைப் பற்றி மேலும் ஆராய்ந்ததில், உலகில் வேறு எங்கும் காணப்படாத, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமே உரித்தான, ஆர்கிட் தொற்றுத் தாவரம் (orchid), பெரணி அல்லது தகரை (fern) போன்ற செடிகள் வேகமாக அழிந்துவருவதை அறிந்தார். உடனடியாக அவற்றைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதை அறிந்த, ஆர்வம் கொண்ட பலர் அவரோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.
அழிந்துவரும் தாவரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இவ்வகைச் செடிகள் எங்கு இருக்கின்றன என்று காடுகளில் அலைந்து திரிந்து தேடி எடுத்துவரத் தொடங்கினார். அவற்றின் தனித்தன்மைக்கேற்ப பேணிப் பாதுகாத்து, இனப்பெருக்கமும் செய்துவந்தார். இப்படிப் பல நூறு வகைத் தாவரங்கள் அவருடைய ஆசிரமத்தில் வளர்க்கப்படுகின்றன.
புத்துயிர்
உல்ஃப்கேங் அத்துடன் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு தாவரமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை எட்டியவுடன், முக்குருத்தி தேசியப் பூங்கா போன்று முறையாகப் பாதுகாக்கப்படும் காடுகளில் அவற்றை அறிமுகப்படுத்தி, இயற்கையாக அவை வளரவும் வழிசெய்தார். இயற்கையாக வளர்வதற்கு ஏற்ற சூழலில் அறிமுகப்படுத்தியதின் விளைவாக, பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
அழியும் தறுவாயில் இருந்த, அழிந்து போனதாகக் கருதப்பட்ட பல தாவர இனங்கள் இயற்கை சூழலில் வளரத் தொடங்கின. துண்டாக்கப்பட்டுச் சிதைந்து போயிருந்த அவரது ஆசிரமம் அமைந்திருந்த காட்டுப் பகுதி, விரைவிலேயே அரிய தாவர இனங்களைக் கொண்ட ஒரு காட்டுப் பகுதியாக உயிர்பெறத் தொடங்கியது.
இயற்கையின் வகுப்பறை
1981-ல் தொடங்கிய இந்த முயற்சி இன்றைக்குக் குருகுலா தாவரவியல் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் காட்டுப் பகுதியில் 2000-க்கும் மேலான தாவரங்கள், பல வகை உயிரினங்களும் உள்ளன. ஆர்கிட் தொற்றுத் தாவரம், பெரணி அல்லது தகரை, பால்சம் போன்ற பல அரிய வகைத் தாவரங்களை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், வல்லுநர்கள் போன்றவர்களுக்கு இந்தச் சரணாலயம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது.
அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து பணிபுரிந்து, குருகுலா தாவரவியல் சரணாலயம் அமைய உறுதுணையாக இருந்தவர் சுப்ரபா சேஷன். அவரது உதவியுடன் தாவரங்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஓர் இயற்கை வகுப்பறையாக இந்தச் சரணாலயம் மாறியுள்ளது. இந்தச் சரணாலயம் மட்டும் அல்லாமல் முக்குருத்தி தேசியப் பூங்காவில் அயல்நாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பைக் குறைத்து, உள்நாட்டு தாவரங்கள் செழிக்கவும் உல்ஃப்கேங் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
அங்கீகாரங்கள்
இவருடைய இயற்கை பாதுகாப்புப் பணிக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் ((IUCN)) குருகுலா சரணாலயத்தை உலகிலேயே பல்லுயிர் செழிக்கும் 34 மையங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. இயற்கை பாதுகாப்பு முயற்சிகளுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய அங்கீகாரமான விட்லி (Whitley) விருதை, 2006-ம் ஆண்டில் உல்ஃப்கேங்கும் சுப்ரபா சேஷனும் இணைந்து பெற்றனர்.
ஒரு பக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உலக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் உல்ஃப்கேங்கை இயற்கையை நேசிப்பவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பெரிதும் நேசித்தனர். இத்தனையும் இருந்தும் எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்துவந்தார். எப்போதும் ஒரு சாதாரணச் சட்டை, ஒரு துண்டை உடுத்திக்கொண்டு நாற்றங்காலில் செடிகளை இனப்பெருக்கம் செய்து, பேணி பாதுகாப்பதிலேயே தன் வாழ்க்கையைச் செலவிட விரும்பினார். அவருடைய மனைவி லீலா, மகன் சாண்டில்யா, மகள் அன்னா ஆகியோரும் அவரது பணிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தனர்.
இறுதி மூச்சுவரை
உல்ஃப்கேங் தேவூர்காஃப் தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோதும், வழக்கமான வேலைகள் எதையும் குறைத்துக்கொள்ளவில்லை. இயற்கை மருந்துகளை மட்டுமே உட்கொண்டு தனது இறுதி நாட்கள்வரை இயற்கையைக் காப்பாற்றத் தொடர்ந்து செயல்பட்டார். 2014 நவம்பர் 8-ம் தேதி அவர் காலமானார்.
தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் பலருக்கு எடுத்துக்காட்டாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இவரது வாழ்க்கை இருக்கிறது. இனி இப்படி ஒரு மனிதரை நம் வாழ்வில் சந்திக்க முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனால், அவர் உருவாக்கிய சரணாலயம் அவரை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கட்டுரை ஆசிரியர்கள் இருவரும் காட்டுயிர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com,
arun.tree@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT