Published : 24 Jan 2015 03:33 PM
Last Updated : 24 Jan 2015 03:33 PM

பேஸ்புக்... செல்பி... தூய்மையான சென்னை... - மாநகராட்சியின் புதிய முயற்சி

சுத்தம், சுகாதாரம், விழிப்புணர்வு….இதுபோன்ற வார்தைகளைக் கேட்டாலே நம்மில் பலருக்கும் ஒவ்வாமை வந்துவிடும். சிலர் பல காததூரம் ஓட்டம் பிடிப்பார்கள். இத்தகைய பின்னணியில், மக்களிடம் நகரைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான எண்ணத்தினை, அவர்கள் போக்கிலேயே போய், ஏற்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி முடிவெடுத்ததன் விளைவாக, அதற்கென பிரத்யேக இணையதளமும் (cleanchennai.com), cleanchennai என்னும் பேஸ்புக் சமூகவலைத்தளப் பக்கமும், சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்த அம்சங்களாக இணையமும், சமூகவலைத்தளங்களும் மாறிவிட்ட தருணமிது. இதை உணர்ந்தே, பொதுமக்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக, தூய்மை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே உண்டாக்குவதற்கான பணிகளை இணையம் வழியாகவும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது மாநகராட்சி.

பொதுமக்களுக்கு தனது பல்வேறு சேவைகளையும், அவர்கள் தரும் புகார் களைப் பெறுவதற்காகவும் பிரத்யேக இணையதளத்தினை மாநகராட்சி பல ஆண்டுகளாக நிர்வகித்துவரும் நிலையில், சென்னை நகரைத் தூய்மையான தாக்கவேண்டும், குறிப்பாக திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்தை நகரவாசிகளிடம் (குப்பை போடுவோர், வணிகநிறுவனங்கள்) எடுத்துரைக்க வேண்டும், சென்னையின் நலனில் அக்கறை கொண்டு தங்களது பங்களிப்பைத் தரத்தயாராக உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

மனிதனால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடக்கழிவுகளைத் திறம்படக் கையாள்வதும், வீடுகளிலேயே குப்பையும் மட்கும் குப்பை, மட்கா குப்பை என்று தரம்பிரிப்பது எப்படி? என்பவற்றை மக்களிடம் நெருங்கிச் சென்று புரியவைத்து அவர்களையும் அதில் ஈடுபடுவைப்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கம் என்றபோதிலும், முதல்கட்டமாக, தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வினை நகரவாசிகளிடையே ஏற்படுத்துவதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அந்த இணையதளத்தில், “குப்பையைத் தெருவில் பார்த்தால் எடுங்கள். அதை குப்பைத் தொட்டியில்போடுங்கள்,” என்று பொதுமக்களிடம் மாநகராட்சி கோருகிறது. தவிரவும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஈடுபடுத்தி, தெருக்களைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. அது தொடர்பான புகைப்படங்களை இணையத்திலும், ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெளியிடுகிறது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் கிடைக்கிறது.

மேலும், சென்னையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள தகவல்களை அனைவரும் அறிந்துகொள் ளும்வகையில், நிகழ்ச்சி நடக்கும் நேரம், தொடர்பு கொள்ளப்படவேண்டியவரின் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களும் அவற்றில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுபோல், ஏற்கெனவே நடந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்களுக்கும் மேலும் ஈர்ப்பு ஏற்படும் வகையில், தெருவில் இருக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவது போன்ற புகைப்படங்களை எடுத்து selfie@cleanchennai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், அது cleanchennai இணையதளத்திலும், மாநகராட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் அப்லோடு செய்யப்படுகின்றன. இதுதவிர தூய்மையை வலியுறுத்தும் போஸ்டர்களையும் தயார் செய்து அனுப்பினால் அவற்றையும் பதிவேற்றம் செய்துவிடுகிறது மாநகராட்சி. விடியோக்களை, videos@cleanchennai.com என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். ட்விட்டரில் #tcleanchennai என்று புகைப்படங்களை பதிவுசெய்யமுடியும்.

என்ன தயாரா? உங்க பகுதியை சுத்தம் செய்யங்க. புகைப்படம், விடியோக்களை கிளிக் பண்ணுங்க, மாநகராட்சிக்கு அனுப்பி வையுங்க… அப்புறமென்ன இணையதளத்திலும், பேஸ்புக்கிலும், நீங்கள் பிரபலம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x