Published : 17 Jan 2015 04:53 PM
Last Updated : 17 Jan 2015 04:53 PM
பசுமை எழுத்து எனப்படும் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்து இடையில் சற்றே தொய்வைக் கண்டிருந்தாலும், இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் 25க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளன.
மூத்த சூழலியல் எழுத்தாளரான சு. தியடோர் பாஸ்கரனின் புதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு ‘சோலை எனும் வாழிடம்’ நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இது அவருடைய சூழலியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு.
சுற்றுச்சூழல் சார்ந்து புனைவல்லாத எழுத்தே அதிகம் வெளியாகிவரும் நிலையில், சூழலியல் எழுத்தாளர் நக்கீரனின் ‘காடோடி’ நாவல், ஒரு காடு திட்டமிட்டு அழிக்கப்படுவதன் அவலத்தையும் அந்தப் பின்னணியில் சமூகமும் சூழலியலும் எப்படிப்பட்ட மோசமான விளைவுகளைச் சந்திக்கின்றன என்பதையும் உணர்வுப்பூர்வாக விவரித்திருக்கிறது, இது அடையாளம் வெளியீடு.
21-ம் நூற்றாண்டில் நுகர்வுமயம் எப்படிப் பூமியையும் நமது உடல்நலத்தையும் நாசமாக்குகிறது என்பதைப் பற்றியும், அதை எப்படி மாற்றுவது என்றும் கூறும் புகழ்பெற்ற நூலை ஆனி லியோனார்டு எழுதியிருந்தார். தற்போது பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் அடையாளம் வெளியீடாகப் ‘பொருட்களின் கதை’ என்ற பெயரில் அது வெளிவந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சூழலியல் ஆளுமைகளைப் பற்றி எதிர் வெளியீடு இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது. முதலாவது காடுகளுக்காகப் போராட்டம், அமேசான் காடுகளைக் காக்கப் போராடிய சிகோ மெண்டிஸைப் பற்றியது. இரண்டாவது அமைதி நோபல் பரிசு பெற்ற வான்காரி மாத்தாயின் வாழ்க்கை வரலாறு. இந்த இரண்டையும் பேராசிரியர் ச. வின்சென்ட் மொழிபெயர்த்திருக்கிறார்.
தஞ்சை நெற்களஞ்சியப் பகுதியில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வரும் மீத்தேன் திட்டம் தொடர்பாக அழிவின் அறிவியல் - காவிரி டெல்டாவில் மீத்தேன் தொழில்நுட்ப விளக்கமும் பாதிப்பும் என்ற நூலை அருண்குமார் தங்கராசு எழுதியிருக்கிறார், நிமிர் வெளியிட்டிருக்கிறது.
கோவை சதாசிவத்தின் உயிர்ப்புதையல், ஊர்ப்புரத்துப் பறவைகள், பூச்சிகளின் தேசம், இறகுதிர் காலம் ஆகிய நூல்களைப் புதிய பதிப்பாக வெளிச்சம் வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய சூழலியல் நூல்களான புல்லினும் சிறியது, ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது ஆகிய இரண்டு நூல்களையும் பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். முதலாவது அமெரிக்கச் சூழலியலாளர் ஹென்றி டேவிட் தேரோவைப் பற்றியது, அடுத்தது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டைப் பற்றியது. எழுத்தாளர் நக்கீரனின் உயிரைக் குடிக்கும் புட்டிநீர், அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும் ஆகிய இரண்டு நூல்களையும் பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். புட்டிகளில் அடைத்து விற்கப்படும் நீர் சார்ந்த அரசியலைப் பற்றி முதல் நூல் பேச, அலையாத்தி... நூல் மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுப. உதயகுமாரின் பச்சைத் தமிழ்த் தேசியம் என்ற நூலைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. ஜிம் கார்பெட்டின் ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை என்ற நூலை தஞ்சாவூர்க் கவிராயர் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு கொண்டுவந்துள்ளது.
சங்கத் தமிழ் கவிதைகளையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இதை உலகறியச் செய்தவர் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள். அவர் ஆங்கிலத்தில் எழுதிய புகழ்பெற்ற Landscape and Tamil poetry என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை நில அமைப்பும் தமிழ்க் கவிதையும் என்ற பெயரில் என்.சி.பி.எச். வெளியிட்டுள்ளது. பேராசிரியர் க.பூரணச்சந்திரன் மொழிபெயர்த்துள்ளார்.
தத்துவ - அரசியல் பார்வையுடன் தொடர்ந்து சூழலியல் தொடர்பாக எழுதி வரும் எழுத்தாளர் ராஜன் குறையின் கட்டுரைகளை ‘மானுட யத்தனம் என்றால் என்ன’ என்ற பெயரில் கயல்கவின் புக்ஸ் வெளியிட்டுள்ளது.
நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறான ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ நூலை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பாரம்பரிய நெல் வகைகள் பற்றிய அரிய தகவல்கள், சமையல் முறை, மருத்துவ குணங்களைத் தமிழர் நெல் என்ற பெயரில் தொகுத்திருக்கிறார் நா.நாச்சாள். இயற்கை வீட்டுத் தோட்டம் அமைப்பது பற்றி மாடியில் மண்வாசனை என்ற சிறு நூலையும் அவரே எழுதியிருக்கிறார்.
தமிழறிஞரும் பறவை ஆர்வலருமான பேராசிரியர் க. ரத்னத்தின் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் என்ற நூலை தமிழினி வெளியிட்டுள்ளது. தாமரை மலரைப் பற்றிய விரிவான பதிவாகத் தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற நூலை சாத்தான்குளம் அ. ராகவன் எழுதியிருக்கிறார், சந்தியா பதிப்பக வெளியீடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT