Published : 24 Jan 2015 03:29 PM
Last Updated : 24 Jan 2015 03:29 PM
வீடு, குடும்பம், கோயில், குளம், என்று பெரும்பாலானோர் ஒரு வட்டத்துக்குள் சுருங்கிப்போவதைப் பார்க்கிறோம். இதுபோன்றவர்கள் மத்தியில், பணிஓய்வுக்குப் பிறகும் பொதுப்பணியில் தீவிரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, களத்தில் இறங்கி உழைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் கே.ராமதாஸ், 76. கால்நடைப் பராமரிப்புத்துறையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவரை அறியாத சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்னையில் குறைவு. வடசென்னையில், நீர்நிலைகள், பசுமைப் பணிகள், திடக்கழிவுமேலாண்மை, சுகாதாரம், மின்சாரம், சாலை பராமரிப்பு என இவர் கையிலெடுக்காத பிரச்சினைகளை இல்லை.
சென்னையில் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி எழுதும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்கு அறிமுகமான செயல்பாட்டாளர் என இவரைச் சொல்லலாம். அவர் வசிக்கும் பகுதியில் மட்டுமின்றி, பல கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள பிரச்சினை என்று குறிப்பிட்டு அழைத்தாலும் தலையில் தொப்பியுடன், விரும்பி பயணம் செய்யும் யமஹா ஆர்எக்ஸ்100, பைக்கில் சட்டென்று கிளம்பிவிடுவார் இந்த 76 வயது ‘இளைஞர்’. மரங்கள், செடி, கொடிகள் என்றால் இவருக்கு உயிர். ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மூலிகைப் பண்ணை பூத்துக் குலுங்குவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.
1996-ல் பணி ஓய்வுபெற்ற இவர், இன்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தொடர்ந்து பணிகளை மேற்கொண்டுவருகிறார். சென்னையில் மரம்வெட்டியதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் செய்து, முதன்முதலாக, 2002-ல் முதல் தகவல் அறிக்கை பதியக் காரணமாக இருந்தவர். வடசென்னையில் உள்ள ஒரு அரசு நூலக வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதை எதிர்த்து, மாவட்ட நூலகர் மீது வழக்குப் பதியக்காரணமாக இருந்தவர்.
பின்னர், இவர் கையாலேயே செடியை வாங்கி அதே இடத்தில் நூலகத்துறையினர் நட்டனர். இதுபோல், தான் பார்த்து, பார்த்து வளர்த்த செடிகளில் ஒன்று, மரமாக வளர்ந்த நிலையில் அதை ஒரு அமைச்சரின் உதவியாளர் ஏதோ காரணத்துக்காக வெட்டியபோது, அவர் மீது துணிச்சலாக காவல்நிலையத்தில் புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டேரி நல்லா, ஹெய்ன்ஸ்லி கேனால் போன்ற நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்.
இவர் கொன்னூர் நெடுஞ்சாலை, ஐசிஎப், கொளத்தூர், பனந்தோப்பு காலனி, லோகோ, பெரம்பூர் போன்ற பகுதிகளில் சுமார் 16 ஆயிரம் மரக்கன்றுகளை தனியாகவும், வனத்துறை மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளின் உதவியுடனும் நட்டு, செழிப்பாக வளர உதவியவர். சென்னையை பசுமையாக மாற்றவேண்டும் என்பதில் தீரா ஆர்வம்கொண்டவர்.
தவிரவும், ஆங்காங்கே உள்ள பகுதிகளில் நலச்சங்கங்களை அமைக்க ஊக்குவித்து, அதிகாரிகளை நேரில் சந்தித்து அப்பகுதி பிரச்சினைகளைச் சீர் செய்ய தூண்டுகோலாக இருந்துவருகிறார். ஆனால், அரசுத்துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால், தம் போன்றவர்களின் பணிகள் பாதிப்படைவதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். “நான் எக்ஸ்னோராவிலும் கவுரவ ‘ட்ரீ வார்டனாக’ இருந்துள்ளேன். அவ்வமைப்பின் சார்பாக, வனத்துறை மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளுடன் சேர்ந்து, சென்னையை அழகாக்கும் பணியில் முடிந்தஅளவு பணிகளைச் செய்துள்ளேன்.
நான் நட்ட பல செடிகள் மரங்களாக வளர்ந்தநிலையில் அதனை அரசுத்துறையினரே வெட்டியதைப் பார்த்து மனம் வெதும்பும் நிலை உள்ளது. தோட்டக்கலைத்துறையின் 50 சதவீத மானிய உதவித்திட்டத்தின் கீழும், பொதுமக்களை மாடித்தோட்டம் அமைக்க ஊக்குவித்துவருகிறேன்.
உதாரணத்துக்கு, ரிப்பன் மாளிகை அருகில் உள்ள எவரெஸ்ட் ஓட்டல் அருகில் நடப்பட்ட மரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் எல்லாம் குடிநீர்வாரியம், மின்வாரியம் ஆகிய துறைகளால், திடீர், திடீரென வெட்டப்படுகின்றன. இதற்கு மாநகராட்சி மற்றும் அரசுத்துறைகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம். பலமுறை எடுத்துரைத்தும் பலனில்லை, என்று வருந்துகிறார். இருப்பினும், தான் நட்டு வளர்த்த செடிகள் பத்திரமாக உள்ளனவா என்பதைப் பார்க்கவும், அதிகாரிகளிடம் குறைகளை முறையிடவும் தனது யமஹாவில் அன்றாடம் காலையில் புறப்படுவதைத் தவிர்ப்பதில்லை.
நடப்பட்ட மரங்கள் குடிநீர்வாரியம், மின்வாரியம் ஆகிய துறைகளால், திடீர், திடீரென வெட்டப்படுகின்றன. இதற்கு மாநகராட்சி மற்றும் அரசுத்துறைகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT