Last Updated : 06 Dec, 2014 03:41 PM

 

Published : 06 Dec 2014 03:41 PM
Last Updated : 06 Dec 2014 03:41 PM

பறவைக் காய்ச்சல்: அடுத்த எபோலா?

உடலின் சிறிய பகுதிகூட வெளியே தெரியாதவாறு உடலை மூடிக்கொண்ட மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும், பரிசோதனை செய்யும் காட்சிகள், எபோலா தாக்கியவர்கள் இறந்து கிடக்கும் காட்சிகள் வெளியாவது சாதாரணமாகிவிட்டது. எபோலா என்ற அந்தப் பயங்கர வைரஸ் தொடர்பான காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடையே அதிர்ச்சியை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

அதற்கு ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன், அடுத்த வைரஸ் அச்சுறுத்தல் வந்துவிட்டது. இது பறவைகளின் வழியாகப் பரவி, மனிதர்களை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. எபோலாவைப் போலவே உடலை மூடிக்கொண்ட மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும், இப்போது வாத்துகளையும் கோழிகளையும் பரிசோதிக்கின்றனர். ஒரு படி மேலே போய் கோழிகளும் வாத்துகளும் விரைவு நடவடிக்கைப் படைகள் மூலம் கொல்லப்படுகின்றன. நமக்கு அருகில் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் தரையிறங்கி இருக்கிறது அந்த வைரஸ்.

ஹெச்5என்1 என்ற வைரஸே பறவைக் காய்ச்சல் தாக்குதலுக்குக் காரணம். இந்த ஹெச்5என்1 வைரஸ் திரிபு வகை மனிதர்களுக்குத் தொற்றினால், இறப்பையும் ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே தினசரிப் போக்குவரத்து அதிகம் இருப்பதால், மாநில எல்லைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மத்தியக் கேரளத்தில் உள்ள குட்டநாடு பகுதி, புகழ்பெற்ற நெற்களஞ்சியம். ஆலப்புழை, கோட்டயம், பத்தனம்திட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது குட்டநாடு. இப்பகுதியில் 6 லட்சம் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு 20,000 வாத்துகள் பறவை காய்ச்சலால் தாக்கப்பட்டன, என்பது நவம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது.

இது, ஹெச்5என்1 வைரஸின் துணை வகையால் ஏற்பட்டது என்பதைப் போபாலில் உள்ள தேசிய உயிரின நோய் உயர் பாதுகாப்பு நிறுவன ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை உறுதி செய்தது.

தமிழகம் தப்புமா?

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பறவைகளைக் கொல்ல மாநில அரசு உத்தரவிட்டது. அதற்காக விரைவு நடவடிக்கைப் படையும் அமைக்கப்பட்டு, 1,85,000 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகப் பறவைகள் கொல்லப்பட்ட இடம் ஆலப்புழை மாவட்டம். நீர்நிலை வழியாகவும் வைரஸ் பரவலாம் என்பதால், அதைத் தடுப்பதற்கு வரைவு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கேரள அரசு தெரிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2006-ம் ஆண்டில் பறவைக் காய்ச்சல் தாக்கியபோது, மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டன. இதுவரை எபோலா நோயாளிகள் நம் நாட்டுக்குள் நுழையாததாலும், பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கு வராததாலும் தப்பித்தோம். அதேநேரம் சுகாதாரக் கட்டுப்பாடுகள், நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், இது போன்ற வைரஸ்களால் நமக்கு நிச்சயம் ஆபத்தில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மனிதர்களுக்கு என்ன ஆபத்து?

உலக சுகாதார நிறுவன அறிவிப்பின்படி, பறவைக் காய்ச்சல் வைரஸ்களில் நிறைய துணை வகைகள் உள்ளன. அவற்றில், சில துணை வகைகளே மனிதர்களுக்கு ஆபத்தானவை.

அவை ஹெச்5என்1, ஹெச்7என்3, ஹெச்7என்7, ஹெச்7என்9, ஹெச்9என்2. 2005-06-ல் ஹெச்5என்1 வைரஸ் ஆசியாவிலிருந்து ஐரோப்பா, ஆப்பிரிக்காவுக்குப் பரவியதை அடுத்து 400 பேர் பலியாகினர், லட்சக்கணக்கான வளர்ப்புப் பறவைகள் கொல்லப்பட்டன.

ஜெர்மனி, நெதர்லாந்து, பிரிட்டனில் கடந்த மாதம் ஹெச்5என்8 பறவைக் காய்ச்சல் பரவ ஆரம்பித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆசியா, குறிப்பாகத் தென்கொரியா பகுதிகளில் ஆயிரக் கணக்கான வளர்ப்புப் பறவைகளைப் பாதித்தது. நல்ல வேளையாக மனிதர்கள் பாதிக்கப்படவில்லை. பறவைக காய்ச்சலால் இறந்த பறவைகள், பாதிக்கப்பட்ட பறவைகளின் உடல் திரவம் வழியாகவே மனிதர்களுக்கும் பறவைக் காய்ச்சல் தொற்றுகிறது.

பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்றுவதற்கான வாய்ப்பு எளிது. அதேநேரம், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பறவைக் காய்ச்சல் தொற்றுவதற்கான வாய்ப்பு ஒப்பீட்டு அளவில் குறைவு, மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே தொற்றும்.

ஹெச்5என்1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று காட்டுப் பறவைகளிடம் மிதமான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், வளர்ப்புப் பறவைகளான வாத்துகள், கோழிகளிடம் பறவைக் காய்ச்சல் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மிக மோசமானது. இந்தப் பறவைகள் நெருக்கமாக வாழ்வதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x