Last Updated : 28 Sep, 2013 12:42 PM

 

Published : 28 Sep 2013 12:42 PM
Last Updated : 28 Sep 2013 12:42 PM

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா

500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?

"திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுத் தென்னந்தோப்புல இருந்த மரங்கள் எல்லாம் காய்ஞ்சு விழுறாப்பல கனவு கண்டேன். கனவைச் சொல்லி 'மாற்றுப் பயிரை பத்தி யோசிக்கணும்'னு நான் சொன்னத யாரும் நம்பல. எல்லாரும் சிரிச்சாங்க. ஆனா ஒருநாள், கனவு கண்டமாதிரியே என் கண்ணு முன்னாடியே எல்லா மரங்களும் கழுத்தொடிஞ்சு காய்ஞ்சு விழுந்துருச்சு. பக்கத்து தோட்டத்துலயும் அப்படித்தான்!

என்னை உதாசீனப்படுத்துனவங்க மேல கோபமும் ஆத்திரமும் வந்துச்சு. பக்கத்துல இருக்கிற மலங்காட்டுக்குள்ள போய்ட்டேன். காட்டுக்குள்ள கெடச்ச நெல்லி, புளின்னு மரவகை உணவுகளை உண்டு திரிஞ்சேன். இருபது நாள் கழிச்சு மீண்டும் ஊருக்குள்ள வந்தப்ப, பைத்தியக்காரன பாக்குறாப்புல பாத்தாங்க. அதுக்கப்புறம் ஜனங்க என்னை பரிகாசம் பண்றப்ப எல்லாம் வனவாசம் போக ஆரம்பிச்சேன். காடுகளை சுவாசித்து மரங்களோட பேசிப் பேசி நான் இன்னைக்கி இப்படி இருக்கேன்"

முற்றும் துறந்த முனிவர் போல பேசும் விவசாயி இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1997ல் இந்திய அரசின் இந்திரா பிரியதர்சினி விருஷ்சமித்ர விருது பெற்றவர். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுத்தால், அங்கேயே அவர்களது ஜீவாதாரத்துக்கான வழிவகை களைப் பெற்றுத் தந்தால், காடு வளர்ப்பில் புவி வெப்பமயமாதலை தடுத்தால் பாலைவனத்தில்கூட பலன்தரும் மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

எதற்கும் உதவாது என்று வல்லுநர்களே ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றுகிறார் சதாசிவம். திருச்சி டு தஞ்சாவூர் சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள மு.சோலகம்பட்டி கிராமத்தில், தன் நண்பர்கள் துணையோடு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப மா, பலா, தேக்கு, ஈட்டி, செஞ்சந்தனம், பேரீச்சை என விதவிதமான மரங்களை நட்டார். மூன்று இடங்களில் தலா பத்து ஏக்கரிலான குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்தார். சுயதேவைக்கு சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். தரிசாகக் கிடந்த அத்தனை ஏக்கரும் சோலைவனமானது. சதாசிவத்தின் சோலைவனத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் வந்து பாடம் படித்துக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனைகளையும் அள்ளி வழங்குகிறார் சதாசிவம்.

"எனக்கும் மரங்களுக்குமான உரையாடல் ஏழு வயசிலேயே ஆரம்பிச்சிருச்சு.எதுவும் பேசாம நிக்கிறவங்களைப் பார்த்து, 'ஏன் மரம் மாதிரி நிக்கிற?'ன்னு கேப்பாங்க. பலரும் நெனைக்கிற மாதிரி மரம் ஜடமில்லை. அவை ஏதோ ஒன்றை மனிதனுக்கு சொல்ல விரும்புது. இதை நான் சொன்னப்போ ஒருமாதிரியா பார்த்தாங்க. இது சொன்னா புரியாது. அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும். மரங்களை நேசிக்க வேண்டியது நம்ம கடமை. இது புரியாம, மத்தவங்க பரிகாசம் செஞ்சத என்னால தாங்கிக்க முடியல. காட்டுக்குள்ளே போய் மரங்களோட மரங்களா குடியிருக்க ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா காட்டுக்குள்ளே இருந்து புடிச்சுட்டு வந்து படின்னு அனுப்புவாங்க. அடிக்கடி நான் காட்டுக்குள்ள ஓடுனதால பெத்தவங்களும் ஒரு கட்டத்துல பேசாம இருந்துட்டாங்க.

காட்டுக்குள்ள சுத்தும்போதுதான் ஒவ்வொரு மரத்தோட தன்மை, குணாம்சம், அது நம் உயிர் மண்டலத்துக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்குன்னு தேடித்தேடி படிச்சேன். ஆராய்ச்சியும் பண்ண ஆரம்பிச்சேன். காய்கறிகளில் கத்திரிக்காய், முள்ளங்கி போல, காடுகள்லயும் மரக்கத்திரிக்காய், மரத்தக்காளி எல்லாம் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி மனிதனுக்கு நேரடியாக உணவளிக்கும் 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?

கோவையில் சிறுவாணி, போளுவாம்பட்டி, தடாகம், மாங்கரை, பல்லடம், சூலூர், உடுமலை, பெருந்துறை சுற்று வட்டார கிராமங்கள்ல உள்ள தரிசு நில விவசாயிகளிடம் பேசி இந்த மரப்பயிர்களை வேளாண்மை செய்ய ஆரம்பித்தேன். அதில் நான் கண்டது நிரூபணமானது. அதை ஒட்டுமொத்தமா ஒரே இடத்துல செய்து காட்டணும். நான் உருவாக்கியதை இந்த உலகுக்கு அர்ப்பணிக்கணும்ற நோக்கத்தோடுதான் இங்கே இந்த காடுகளை உருவாக்கினேன்"என்கிறார் சதாசிவம்.

தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி உள்ளிட்ட 200 வகை மரங்கள் வளர்ந்து செழித்து நிற்கும் சதாசிவத்தின் இந்த சோலைவனம் இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x