Published : 24 Sep 2013 05:38 PM
Last Updated : 24 Sep 2013 05:38 PM
இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி அலைந்தால், நினைத்தது கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது... அதுபோல நல்ல தண்ணீர் கிடைக்க எளிதான வழியான கிணறு கையில் இருக்கும்போது, உப்பு நீரைத் தரும் ஆழ்துளைக் கிணறை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டுவது வருத்தம் தருகிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த சேகர் ராகவன். மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் செயல்முறைகளையும் எளிமையாக விளக்கும் ’மழை மையம்’ என்ற அமைப்பை சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் இவர் நடத்தி வருகிறார்.
“சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு இந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பெரிதும் நம்பியிருப்பது ஆழ்துளைக் கிணறுகளைதான். ஆழ்துளைக் கிணறுகளை் அமைக்கும்போதே 150 அடி, 200 அடி ஆழத்துக்கு குழாய்களை இறக்குகிறார்கள்.
அதிக அளவு ஆழம் தோண்டினால், தங்கள் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து, இப்படி செய்கிறார்கள். ஆனால், சில ஆண்டுகளிலேயே தண்ணீர் சரிவர கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்வதற்காக, அதே வீட்டில் வேறு இடத்தில் மீண்டும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பரிதாபத்தை ரொம்பச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது,’’ என்று வேதனைப்படுகிறார் சேகர் ராகவன்.
ஆழ்துளைக் கிணறு மூலம் நல்லத் தண்ணீர் கிடைக்கிறதா என்று கேட்டால், அதுவும் இல்லை என்று அடித்துக் கூறுகிறார் இவர். ‘‘நிலத்தின் மேற்பரப்பில், அதாவது 20 அடி, 25 அடியில் எப்போதும் நல்லத் தண்ணீரே இருக்கும். அதனால்தான், கிணற்றுத் தண்ணீர் எப்போதும் குடிக்கும் அளவுக்கு ருசியாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக மெரினா கடற்கரையில் பள்ளம் தோண்டி, தண்ணீர் எடுத்து பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்து வருவதைக் கூற முடியும். கடல் மணல் பரப்பில் சுவையான நீர் கிடைக்கக் காரணம் உள்ளது. மணலுக்குள் இறங்கும் நீரை, மணலே தூய்மைப்படுத்தி விடுகிறது. அதனால்தான் சுவையான நன்னீர் கிடைக்கிறது. ஆனால், ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது 150 அடி, 200 அடி ஆழத்துக்கு நிலத்தில் துளை போடப்படுகிறது. 100 அடிக்கு மேல் செல்லும்போது, இடையில் பாறைகள் இருப்பது இயல்பான விஷயம்தான். பாறையைத் துளைத்து ஆழ்துளை போடும்போது, உப்பு நீரே கிடைக்கும். பாறைக்கு அடியில் உள்ள நீர் கடின நீர். அது உப்பு நீராக மட்டுமே இருக்க முடியும். நிலத்துக்குள் செல்லும் மழை நீர், பாறைக்குள் ஊடுருவி செல்வதில்லை. அதனால், நீண்ட நாள்களுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு இதுவே முக்கியக் காரணம்.”
அண்மையில், சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ‘மழை மையம்’ சார்பில் கிணறுகள் அமைத்து தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இவர். ‘‘சென்னை பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் 108 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடியிலும். விருகம்பாக்கத்தில் 370 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடியிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்காமல் திண்டாடிவந்தனர். எங்களை அணுகி அவர்கள் ஆலோசனை கேட்டபோது, அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த பிறகு, கிணறுகள் அமைக்க முடிவு செய்தோம். தற்போது அங்கு தண்ணீர் பிரச்சினை இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நிம்மதியாக உள்ளனர்.
காங்கிரீட் காடாக மாறிவிட்ட சென்னையில், கிணறுகளில் மட்டும் எப்படித் தண்ணீர் கிடைக்கும், நகரின் பல பகுதிகளில் கிணறுகள் வற்றிக் கிடக்கின்றனவே என்ற கேள்வி எழக்கூடும். ‘‘எல்லாக் கிணறுகளும் எப்போதும் வற்றிக் கிடக்க வாய்ப்பே இல்லை. நிலத்துக்குள் செல்லும் நீர் மிகக்குறைவாக இருந்தாலும் சரி, அது நிலத்தின் மேற்பகுதியிலேயே இருக்கும். அதனால், சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் போதுமான அளவு சேர்ந்தவுடன் கிணற்றில் நீர் ஊறி விடும். மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அதை முறையாகப் பராமரித்துவந்தால், கிணறு வற்றிப் போகாது" என்று உறுதியாகக் கூறுகிறார் சேகர் ராகவன்.
வங்கியில் பணத்தைச் சேமித்து வைத்து, தேவைப்படும் போதெல்லாம் அதை எடுத்து எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோமோ, அதுபோல நிலத்தில் நீரை சேமித்து வைத்து, கிணறுகளில் இருந்து நல்ல தண்ணீரைப் பெற நாமும் முயற்சிக்கலாமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT