Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

வீட்டில் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை- விழுப்புரம் அருகே அதிசயிக்க வைக்கும் விவசாயி

விழுப்புரம் அருகே ஒரு விவசாயி தன் வீட்டில் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை செய்கிறார் என்ற தகவலால் ஆச்சரியமடைந்து அவரை அவர் வீட்டில் 'தி இந்து' சார்பில் சந்தித்தோம்.

விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் கிராமத்தில் கரண்ட் விக்கிறவர் என்ற அடைமொழிப் பெயருடன் அழைக்கப்படும் சுப்புராயலுவை அவரது வீட்டு மொட்டைமாடியில் சென்று பார்த்தோம். சூரிய ஒளி தகடுகளைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.

அவர் நம்மிடம் பேசியது: மின்தட்டுப்பாட்டால் அவதிப்பட்ட நேரத்தில்தான் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பாக அறிந்தேன். வீட்டுக்கான மின்சாரத்தைத் தயாரிக்க சோலார் நிறுவனங்களை அணுகினேன். அப்போதுதான் “எங்கும் மின் விளையும்...எம்மனையும் மின் நிலையம்” என்ற திட்டத்தின்மூலம் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம்

1200 வாட் திறன் கொண்ட கதிர் மின்னாக்கிகளை என் வீட்டு மொட்டைமாடியில் நிறுவினேன். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதற்கு அரசு 60 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கியது.

தனியார் நிறுவனம் இத்தொகையைக் கடனாக வழங்கியது. முன்பணமாக 55 ஆயிரம் செலுத்தி மீதமுள்ள 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை 10 மாதத் தவணையாக வட்டியில்லாமல் 14 ஆயிரத்து 750 ரூபாயாகச் செலுத்த ஒப்புக்கொண்டு இதனை அமைத்தேன்.

இது செயல்படதுவங்கியதும் என் வீட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. இதன் மூலம் தினமும் 8 மணி நேரத்தில் 9 கிலோவாட் மின்சாரம் கிடைத்தது. பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து இரவில் பயன்படுத்தினேன். உபரி மின்சாரத்தை யூனிட் 2 ரூபாய்க்கு மின்வாரியத்துக்கு விற்கிறேன்.

எவ்விதப் பராமரிப்பு செலவும் இல்லை. இதனால் மின்கம்பிகள் மூலம் மின்சாரம் செல்லும்போது ஏற்படும் மின் இழப்பு இல்லை. மிகவும் லாபகரமாக உள்ளது என்றார் அவர். இத்தனைக்கும் சுப்புராயலு படிக்காதவர். வெளியே வந்த முன்னிரவு நேரத்தில் வீதியே இருளில் மூழ்கி இருக்கச் சுப்புராயலு வீடு பளிச்சென்று பிரகாசமாக இருந்தது. சூரிய மின்சாரத்தைத் தயாரிப்பதன் மூலம் மின்பற்றாக்குறையைப் போக்கலாம். அனைவரும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அழைப்புவிடுக்கிறது வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்ட விளம்பர பேனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x