Published : 17 Sep 2016 11:37 AM
Last Updated : 17 Sep 2016 11:37 AM
ஆசிரியருக்கு,
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் ஆங்கிலேய அதிகாரிகள் பற்றி ‘அவர்கள் பணி: அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் 11.8.1947 தேதி ‘தி ஹிந்து'வில் தாங்கள் எழுதியிருந்த தலையங்கத்தை ஆர்வத்துடன் படித்தேன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றிய செய்தியையும் கண்டேன். இரண்டுமே பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஒரு மகத்தான பங்களிப்பைக் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்தியக் காட்டுயிர் இனங்கள் பற்றி அவர்கள் மேற்கொண்ட பணி, திரட்டிய விவரங்கள் இவைதாம் இந்திய இயற்கை வரலாறு பற்றிய நம் அறிவுக்கு அடித்தளம்.
இந்தியர்கள் இயற்கை வரலாற்றில் ஆர்வம் காட்டுவதில்லை. அதிலும் இந்திய மொழிகளில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பற்றிய பெயர்கள் அதிகம் இல்லை என்பதைப் பார்க்கும்போது, இந்தத் தளத்தில் நமக்குச் சீரான ஈடுபாடு எப்போதுமே இருந்ததில்லை என்றே எனக்குப் படுகிறது. பாபர் போன்ற சில முந்தைய அரசர்கள் காட்டுயிரில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தாலும், பறவை, விலங்கு, தாவரம் போன்ற உயிரினங்கள் பற்றிய விவரங்கள் அறியவில்பூர்வமாக, முறையாகப் பதிவு செய்யப்பட்டது பிரிட்டிஷ் அதிகாரிகள் வந்த பிறகுதான்.
கடந்த முந்நூறு ஆண்டுகளில் நம் நாட்டு உயிரினங்கள் பற்றி அவர்கள் முழுமையானதொரு மதிப்பீட்டைக் களப்பணி மூலம் செய்திருக்கிறார்கள். இது மட்டுமின்றிப் புள்ளினங்களையும் விலங்குகளையும் கவனித்து அவற்றின் இயல்புகளை, செயல்பாடுகளைப் பதிவுசெய்தனர்; ஏதாவது உயிரினம் பற்றி நம்பகமான தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த அதிகாரிகள் யாராவது எழுதிய புத்தகத்தைத்தான் நாம் நாட வேண்டியிருக்கிறது.
இந்தியத் தேசியக் காங்கிரஸின் பிதா என்றறியப்படும் ஏ.ஓ. ஹ்யூம் ஒரு சிறந்த பறவையியலாளர். அந்தத் தளத்தில் அவர் ஒரு முன்னோடி. இந்தியப் பறவைகளைப் பற்றி அறிய விரும்புவோர் (டக்ளஸ்) திவார், இஹா, ஃபின், விஸ்லர், ஃபிளட்சர், இங்லிஸ் (Dewar, Eha, Finn, Whistler, Fletcher, Inglis) போன்ற அதிகாரிகளைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது. இதில் பலர் ஐ.சி.எஸ். போன்ற உயர்பதவிகளில் இருந்தவர்கள். அவர்களுடைய அலுவலகப் பணிக்கும் பறவைகளிடம் அவர்கள் காட்டிய ஆர்வத்துக்கும் சம்பந்தமேயில்லை. என்றாலும் இதில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
காட்டு விலங்குகளைப் பற்றி அறிய வேண்டுமென்றாலும் இதேவழிதான். அவற்றின் வாழிடங்கள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் கவனித்துத் துல்லியமாகப் பதிவுசெய்ததும் உயர் பதவிகளிலிருந்த ஆங்கிலேயர்கள்தாம். பிரிட்டிஷ் அரசின் பணியில் இல்லாமல், காட்டுயிர் பற்றி பல அரிய குறிப்புகளை எழுதியவர் ஜி.பி. சாண்டர்சன் ( G.P. Sanderson). இவர் மைசூர் சமஸ்தானத்தில் வேலையிலிருந்தார். இந்தியாவில் வேலை பார்த்த ஷேக்ஸ்பியர், டன்பர்-பிராண்டர், சேம்பியன், வார்டிரா (Shakspeare, Dunbar-Brander, Champion, Wardrop) போன்றவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் காட்டுயிர்களைப் பற்றி எழுதி வைத்திருக்காவிட்டால், வேட்டைக்காரர்கள் திரித்த கட்டுக்கதைகளும் அவர்களது சுயபுராணங்களும்தான் நமக்கு எஞ்சியிருக்கும்.
ஐ.சி.எஸ். அதிகாரிகள் தங்களைப் பற்றி பெரிதாக நினைத்துக்கொண்டு மக்களுடன் பழகவில்லை என்று தலையங்கத்தில் கூறியிருக்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் நாமும் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்க விருப்பம் இல்லாதிருந்திருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும், அவர்களில் பலர் தங்களைச் சுற்றியிருந்த உயிரினங்களை நேசித்து, அவற்றைக் கரிசனத்துடன் கவனித்து, ஆராய்ந்து எழுதி வைத்தார்கள். அந்த நோக்கில் இந்தியாவை நாம் நேசித்ததைவிடவும், அவர்கள் பெரிதும் நேசித்தார்கள்.
- சு. தியடோர் பாஸ்கரன்
நாடு விடுதலை பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் ‘தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் ஆங்கிலேய அதிகாரிகள் பற்றி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது. அதற்கு எதிர்வினையாக அன்று சண்டூர் சமஸ்தானத்தில் திவானாகப் பணியாற்றிக்கொண்டிருந்த மா. கிருஷ்ணன் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை மொழியாக்கம் செய்து இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கிருஷ்ணன் பட்டியலிடும் அதிகாரிகள் ஏறக்குறைய ஒரு நூறாண்டுகளுக்கு முன் காட்டுயிர் பற்றி எழுதிய நூல்களில் பல அண்மையில் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. சில நாட்களுக்கு முன் இந்தக் கடிதத்தை என் கவனத்துக்குக் கொண்டுவந்த நண்பர் அஷிஷ் சண்டோலாவுக்கு நன்றி. |
சண்டூர், மா.கிருஷ்ணன்
தமிழில்: சு. தியடோர் பாஸ்கரன்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT