Published : 17 Sep 2013 12:26 PM
Last Updated : 17 Sep 2013 12:26 PM
"இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது", "தோட்டம் வளர்க்க வேண்டும் என்று எனக்குக் கொள்ளை ஆசை", "பூச்சிக்கொல்லி இல்லாத கீரை, காய்கறிகளை நானே வீட்டில் பயிரிட முடியாதா?":..
இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கும் இருக்கிறதா? ஆனால், எப்படி இதைச் செய்வது? நான் இருப்பது மாடி வீடாயிற்றே, அதிலே எங்கே தோட்டம் வளர்க்க இடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள், இயற்கையைப் பாதுகாப்பதற்கு சங்கம் அமைத்துக் குரல் கொடுக்கவோ, கொடிபிடித்துக் கூட்டம் சேர்க்கவோ தேவையில்லை. நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பசுமையாக வைத்துக்கொண்டாலே போதும். அதுவே இயற்கைக்கு நாம் செய்யும் பெரும்பணியாக இருக்கும்.
சரி, அதை எப்படிச் செய்வது?
'தூய்மையான காற்று, தண்ணீர், உணவு இந்த மூன்றும்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை' என்றும் சொல்லும் ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் இந்திரகுமார், வீட்டிலேயே தோட்டம் அமைப்பதற்கு வழிகாட்டுகிறார்.
'மண் தரையைக் காண்பதே அரிதாக இருக்கிற நகரத்து அபார்ட்மெண்ட் வீடுகளில்கூட மரம் வளர்க்கலாம், நல்ல பலனையும் பெறலாம். சின்னச்சின்ன தொட்டிகளில் சுத்தமான மண்ணை நிரப்பி, அதில் தரமான விதைகளில் இருந்து முளைத்த செடிகளைப் பயிரிடலாம். கத்தரி, வெண்டை, தக்காளி, பீர்க்கங்காய், புதினா, மணத்தக்காளி, ஓமவல்லி, ரோஜா, சம்பங்கி, மல்லிகை இப்படி நம் வீட்டுக்குப் பயன்தரும் செடிகளையே திறந்தவெளி மாடிகளில் பயிரிடலாம்.
காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள் மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் மட்கக்கூடிய குப்பைகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.
நோய்கள் நிரம்பிய தற்போதைய உலகில் செயற்கை உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ சேர்க்கப்படாத சுத்தமான காய்கறிகளும் பழங்களும் நம் ஆரோக்கியத்துக்கான வாசலை விசாலமாகத் திறந்து வைக்கும். கொஞ்சம் உழைக்கத் தயாராக இருந்தால், வீட்டு மாடியிலேயே மரங்களைக்கூட வளர்க்கலாம்.
இருக்கிற கடுமையான தண்ணீர் பிரச்சினையில் செடி, கொடிகள் வளர்த் தண்ணீருக்கு எங்கே போவது என்ற கேள்வி எழுவது இயல்புதான். வீட்டின் அன்றாட வேலைகளுக்குப் பயன்படும் நீரைச் சரியான முறையில் முறைப்படுத்தி, அந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றலாம்.
மேலும், பாத்திரங்கள் கழுவிய மற்றும் துணிகள் துவைத்த சோப்பு நீரில் உள்ள அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலம் மண் வளம் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கலாம். கழிவு நீர் வெளியேறும் இடத்தில் சிறுசிறு கூழாங்கற்களைப் பதித்து, அருகில் கல்வாழை, சேம்புச் செடிகளை வளர்த்தால், மண்ணில் அமிலத்தன்மை மட்டுப்படும்' என்று முடிக்கிறார் இந்திரகுமார்.
இயற்கையைப் பாதுகாக்க நம்மால் காடுகளை உருவாக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, கிடைக்கும் இடத்தில் செடிகொடிகளையாவது வளர்க்கலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT