Published : 27 Aug 2016 02:27 PM
Last Updated : 27 Aug 2016 02:27 PM
இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி எங்குத் தொடங்கப்பட்டது?
விடை: 1. டெல்லி 2. பம்பாய் 3. கல்கத்தா 4. இதில் எதுவுமில்லை.
இந்தக் கேள்விக்கான விடை 4 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது பழைய மதராஸில்!
அடையாறு கரையில்
கால்நடைகள், வீட்டு விலங்குகள், பறவைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் படிப்பு சென்னையில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டதில் பல சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான முதல் விதையாக அமைந்தது, சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்திருந்த வேளாண் கல்லூரிதான்.
1876-ல் இந்தக் கல்லூரியில் முதன்முதலாக இரண்டு ஆண்டு கால்நடை அறிவியல் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து இதுபோன்ற மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகள் லாகூர், பம்பாய், கல்கத்தா, அஜ்மீர் போன்ற நகரங்களிலும் தொடங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 1902-ல் அரசு கால்நடைத் துறையின் கண்காணிப்பாளராக இருந்த மேஜர் டபுள்யூ.டி. கன், அன்றைய மதராஸ் மாகாணத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான முன்வரைவை அரசிடம் சமர்ப்பித்தார். அவருடைய முன்வரைவுக்கு 1903-ல் பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்தது.
வாடகைக் கட்டிடத்தில்
தொடக்கக் காலத்தில் வேப்பேரியிலிருந்த டாபின் ஹால் என்ற பங்களாவை மாதம் 60 ரூபாய் வாடகைக்கு எடுத்துக் கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டது. விலங்குகளை வதைக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைக் காப்பாற்றும் சொசைட்டி ஃபார் பிரிவென்ஷன் ஆஃப் குரூயல்டி டு அனிமல்ஸ் (SPCA) என்னும் அமைப்பின் மருத்துவமனை அந்தப் பங்களாவுக்கு அருகில்தான் செயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையின் பெயரே ‘டாக்ஸ் ஹோம்’தான்! ஒரு கட்டத்தில் விலங்கு வதைத் தடுப்பு அமைப்பினர், தாங்கள் நடத்திவந்த மருத்துவமனையை, விலங்கியல் மருத்துவக் கல்லூரிக்கான பயிற்சிக்கூடமாகச் செயல்படுவதற்கு அனுமதி தந்தனர்.
1903-ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் டாபின் ஹாலில் கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கியது. அதற்குப் பகுதி நேர முதல்வராக மேஜர் கன் செயல்பட்டார். தொடக்கத்தில் 20 பேர் மட்டுமே கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். பட்டயப் படிப்பின் இறுதியில் அவர்களுக்கு ‘கிராஜுவேட் ஆஃப் மெட்ராஸ் வெட்டினரி காலேஜ்’ என்னும் பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட்டபோதே, மேஜர் கன்னின் கோரிக்கைக்கு ஏற்ப மருத்துவமனை விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை ஒதுக்கவும் அரசு ஒப்புக்கொண்டிருந்தது.
கல்லூரியானது 1930-ல் இந்தியாவுக்கு வந்த ராயல் கமிஷன், கால்நடை மருத்துவக் கல்லூரியின் பட்டயப் படிப்புகளை, பட்டப் படிப்பாக மாற்றப் பரிந்துரைத்தது. இந்திய அரசின் கால்நடை மருத்துவக் குழு நாட்டில் செயல்பட்டுவந்த கால்நடை மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டை நேரடியாகப் பரிசோதித்தது. கடைசியாக, 1933-ல் மதராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியைச் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பரிந்துரைத்தது.
இதையடுத்து, 1936-ல் 50 பேர் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரியாக அது பரிணமித்தது. 1929-ல் கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக வி. கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றார். அவருக்குப் பின்னர் இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் மாறி மாறி முதல்வர் பதவியை வகித்துவந்தனர். 1939-க்குப் பிறகு இந்தியர்களே முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.
படிப்படியான வளர்ச்சி
ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்ததாலும் போர்கள் அதிகம் நடந்ததாலும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் குதிரைகளைப் பற்றி படிப்பதற்கும் குதிரைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் அதிக முக்கியத்துவமும் தரப்பட்டுவந்தது. ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றவுடன், கால்நடை மருத்துவக் குழு சார்பில் அரசுக்கு இரண்டாவது பரிந்துரை அனுப்பப்பட்டது. அதில் குதிரைகளைவிட விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளான மாடுகளைப் பராமரிப்பதற்கும் அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்துக் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை படிப்படியான முன்னேற்றத்தைக் கண்டது. இன்றைக்குக் கால்நடை, வீட்டு விலங்குகள், பறவைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக உயர்ந்து நிற்கிறது.
மதராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியே, 1989-ல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாக (TANUVAS) நாட்டின் முதல் கால்நடை பல்கலைக்கழகமாகவும் வளர்ந்திருக்கிறது.
வரலாற்று அடையாளம்
இன்றைக்கு மதராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி என்றவுடன் பழைய சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, இந்தோ சாரசெனிக் பாணியில் சிவப்பு வண்ணத்தில் நிமிர்ந்து நிற்கும் கட்டிடமே நம் மனதில் முதலில் உதிக்கும். அது முதலில் செயல்பட்ட டாபின் ஹாலின் முகப்பில் 1904-ல் இந்தக் கட்டிடத்தை எழுப்பியவர் மாசிலாமணி. மதராஸ் வரலாற்றை ஊன்றிப் படிக்கும் ஆர்வலர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்தக் கட்டிடம் என்றைக்கும் ஒரு வரலாற்று பொக்கிஷம்தான்.
ஆதாரம்: சென்னை வரலாற்று ஆய்வாளர் எஸ். முத்தையாவின் குறிப்புகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT