Published : 14 Feb 2014 07:30 PM
Last Updated : 14 Feb 2014 07:30 PM
இந்தியாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ விபத்துகள் மூலம், ரூ. 440 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொடைக்கானல் காடுகள், வறட்சியால் இந்த ஆண்டு சருகாகி நிற்பதால், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர், இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை வளம் கொண்ட இயற்கைக் காடுகள், மூங்கில் காடுகள் அதிகளவில் உள்ளன. மாவட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த கொடைக்கானல் வனப்பகுதி, சிறந்த சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியில் அழகிய தாவரங்கள், மரங்கள் மட்டுமின்றி, யானைகள், சிறுத்தைப் புலி, புள்ளி மான், காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட அரியவகை விலங்குகள் அதிகளவில் உள்ளன.
கொடைக்கானல் வனப்பகுதியின் ஒரு பகுதி தமிழக எல்லையாகவும், மறு பகுதி கேரள எல்லையாகவும் உள்ளதால், ஆண்டு முழுவதும் இரு வனப்பகுதிகளிலும் வனவிலங்குகள் இடம் பெயர்வு அதிகளவு உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக மழையில்லாமல் கொடைக்கானல் வனப்பகுதியில் மரங்கள், செடி கள் காய்ந்து சருகாகி நிற்பதால் இந்த ஆண்டு வனப்பகுதியில் காட்டுத் தீ அதிகளவு பரவி வருகிறது.
கொடைக்கானலில் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனால், முன்கூட்டியே தற்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் கொடைக்கானல் சாலைகளில் சுற்றுலா பயணிகள் சிகரெட், தீக்குச்சிகளை அணைக்காமல் கீழே போட்டுச் செல்வதால் மரங்கள், செடி கொடிகளில் காட்டுத் தீ பற்றி அதிகளவு வன வளம், விலங்குகள் அழியும் நிலை ஏற்படுகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே வனப்பகுதி சருகாகி நிற்பதால் தீ விபத்தை தடுக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைக்கவும் கொடைக்கானல் பெருமாள் மலை, சோத்துப்பாறை, டம்டம் பாறையில் காட்டுத் தீ கண்காணிப்பு கோபுரங்களை நிறுவி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், தீ தடுப்புக் கோடு அமைத்து, தீ பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT