Last Updated : 14 Oct, 2014 12:38 PM

 

Published : 14 Oct 2014 12:38 PM
Last Updated : 14 Oct 2014 12:38 PM

பட்டாசு வெடிக்கலாமா?

தீபாவளி அன்றைக்குக் காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் ஊரைப் புகைமூட்டம் எப்படிச் சூழ்ந்திருக்கிறது என்று சற்று பாருங்கள். எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு, அந்தப் புகைமூட்டம் இருக்கும். நாம் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளைத் தூண்டிவிடக்கூடும்.

சந்தையில் கிடைக்கும் பட்டாசு, மத்தாப்புகளில் பலவும் காற்று, ஒலி மாசுபாட்டு விதிமுறைகளை மீறுபவையாக இருக்கின்றன என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் நிறைய வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. பட்டாசுப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடு போன்றவை இருக்கின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன.

"தில்லி போன்ற நகரங்களில் புகைமூட்டம் அதிகமாக இல்லை என்றாலும், காற்று மாசுபாடு குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் பலரும் பட்டாசு வெடிக்கிறார்கள். பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு அதிகரித்தே இருக்கிறது" என்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) அனுமிதா ராய்சவுத்ரி.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்

மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு

சோடியம்: ஈரப்பதமான காற்றுடன் வினைபுரிந்து தோலைப் பாதிக்கலாம்

துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்

நைட்ரேட்: மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்

நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

உச்ச நீதிமன்ற ஆணைப்படி பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால், அப்படிச் செய்யப்படுவதில்லை.

காதுகள் ஜாக்கிரதை

பட்டாசு வெடிப்பதில் நிலவும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இது நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு, தடையை மீறும் வகையில் இருக்கிறது.

ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்

இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சத்தத்தால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்குக் காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். சிறிய அளவிலான மாசுபாட்டைகூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x