Published : 21 Oct 2014 06:55 PM
Last Updated : 21 Oct 2014 06:55 PM
‘பட்', ‘டமார்' துப்பாக்கி ரவை பாயும் ஒலியோ, வேட்டுச் சத்தமோ. சத்தம் காதில் விழுந்த அடுத்த நொடி அப்பகுதியில் இருக்கும் எந்த உயிரினம் என்றாலும், கூட்டமாக உயிர் பிழைக்கத் தப்பியோடிவிடும்.
ஒரு வேட்டுச் சத்தத்துக்கே இப்படியென்றால், நாள் முழுக்கப் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளும், வவ்வால்களும் எங்கே போய் ஒளிந்துகொள்ளும்? தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இதை யோசித்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தீபாவளி உண்டு. ஆனால், பட்டாசு இல்லை.
தங்கள் கிராமங்களைத் தேடி வந்து வசிக்கும் பறவைகளையும், பழந்தின்னி வவ்வால்களையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற சக உயிரினத்தை மதிக்கும் ஊர் மக்களின் குணமே இதற்குக் காரணம்.
பறவைக் குழந்தைகள்
தமிழகத்தில் 13க்கும் மேற்பட்ட பறவை சரணாலயங்கள் இருந்தாலும், எந்த விஷயத்தையும் தொந்தரவாகக் கருதாமல் மக்களும் பறவைகளும் மிகவும் இணக்கமாக வாழும் ஊர் திருநெல்வேலி அருகேயுள்ள கூந்தங்குளம். தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பறவை சரணாலயமான இந்த ஊரில், மையக் குளத்தைத் தாண்டி ஊரெங்கும் கூழைக்கடாக்கள், மஞ்சள்மூக்கு நாரைகள், கொக்குகள் கூடு கட்டி குஞ்சு பொரிக்கின்றன.
தங்கள் வீட்டிலும் சாலையிலும் உள்ள மரங்கள், குளங்கள், நீர்நிலைகளைப் பறவைகள் பங்கு போட்டுக்கொள்வதை இந்த ஊர் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். பறவைகளைத் தங்கள் குழந்தைகளைப் போலக் கருதுகிறார்கள். அதனால் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை.
இந்த ஊரில் பறவைகளைப் பாதுகாப்பதற்காகப் புகழ்பெற்ற ‘பறவை மனிதர்' பால்பாண்டி, ஊர் மக்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காததைப் போகும் இடமெல்லாம் பதிவு செய்துவருகிறார். தீபாவளியை ஒட்டித்தான் உள்நாட்டு, வெளிநாட்டு வலசை பறவைகள் கூந்தங்குளத்துக்கு வரத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப ஆண்டுகளாக இந்த ஊரில் தமிழக அரசே ‘பசுமைத் தீபாவளி'யைக் கொண்டாடி வருகிறது.
மத்தாப்பு மட்டும்
பறவைகளுக்கான புகலிடங்களில் மிகவும் பிரபலமான இடம் சென்னைக்கு அருகேயுள்ள வேடந்தாங்கல். வேடந்தாங்கலைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் கரிக்கிளி என்ற ஊரைத் தெரிந்திருக்காது. இந்த ஊரில் இருக்கும் குளத்துக்கும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வலசை வருகின்றன. இந்த ஊர் மக்களும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை.
ஈரோடு மாவட்டத்தில் சென்னி மலையை அடுத்துள்ள வெள்ளோடு கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம் பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி ஆகிய கிராமங்களிலும் தீபாவளிக்குப் பட்டாசு கிடையாது.
1996-ல் இந்தப் பகுதியில் வெள்ளோடு பறவைகள் காப்பகம் உருவாக்கப்பட்டதே இதற்குக் காரணம். பட்டாசு, அதிர்வேட்டுகள் வெடிப்பதை மேற்கண்ட கிராம மக்கள் தவிர்க்கின்றனர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக மத்தாப்புகளைக் கொளுத்துவது உண்டு.
நாங்களும்தான்
“கோவை அருகேயுள்ள கிட்டாம்பாளையும், விழுப்புரம் மாவட்டம் கழுப்பெரும்பாக்கம் ஆகிய ஊர்களில் பழந்தின்னி வவ்வால்களைப் பாதுகாப்பதற்காக, ஊர் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை” என்கிறார் கோவை ஸூ அவுட்ரீச் நிறுவனத்தைச் சேர்ந்த காட்டுயிர் ஆராய்ச்சி மாணவர் ஆர்.
பிரவிண்குமார். வவ்வால்களைப் பாதுகாக்கத் தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட ஊர்களில் ‘வவ்வால் பாதுகாப்பு விழிப்புணர்வு' நிகழ்ச்சிகளை இவர் நடத்தி வருகிறார்.
கோவை அருகே கிட்டாம்பாளையத்தில் உள்ள ஆலமரத்தில் 2000க்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. இங்குக் கடந்த 4 வருடங்களாகப் பட்டாசு வெடிப்பதில்லை. “அந்த வவ்வால்கள் எங்களைத் தொந்தரவு செய்வதில்லை. நாங்களும் அவற்றைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைக்கிறோம்” என்கிறார் பஞ்சாயத்துத் தலைவி ஜோதிமணி ராமசாமி.
அதேபோல விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசமரம் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்களின் வாழ்விடமாக உள்ளது.
இரண்டு, மூன்று தலைமுறைகளாக இந்த ஊரில் தீபாவளி அன்று யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.
இரவில் உணவு தேடிவிட்டு, பகலில் மரக்கிளைகளில் தொங்கி வவ்வால்கள் ஓய்வெடுக்கும் வேளையில் பட்டாசு வெடித்தால் அவை கலைந்து செல்லலாம், அடிபட்டு இறந்து போகவும் வாய்ப்பு உண்டு என்பதால் இந்தக் கிராம மக்கள் பட்டாசைத் தவிர்க்கின்றனர். குழந்தைகள் ஆசைப்பட்டால் ஊரைவிட்டுத் தள்ளி அழைத்துச் சென்று வெடிக்க வைக்கிறார்கள்.
தலைமுறைகள் தாண்டி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தில் உள்ள மருத மரம், மூங்கில் மரங்களில் 30 வருடங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. அருகில் உள்ள சின்னக் கல்வராயன் மலைக்கு இரவில் சென்று இரை தேடும் இவை, பகலில் ஊனத்தூருக்கு வந்துவிடுகின்றன. இந்தக் கிராம மக்களும் பட்டாசைத் தவிர்க்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகேயுள்ள ராயண்டபுரம் கிராமத்தில் 2 அரச மரங்கள், ஒரு ஆல மரத்தில் பழந்தின்னி வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. வவ்வால்கள் வசிப்பது தங்கள் கிராமத்துக்கு நன்மை என்று இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த சிலர், வவ்வால்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, ஒட்டு மொத்தமாக வவ்வால்கள் வெளியேறிவிட்டன. சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அவை வந்திருக்கின்றன. அப்போது முதல் வவ்வால்களுக்கு எந்தத் தொந்தரவும் நேராமல் ஊர் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்கின்றனர்.
ஒன்றுக்கொன்று இணக்கமாக வாழ்வதும், ஓரிடத்தையும் அங்கிருக்கும் இயற்கை வளத்தையும் பகிர்ந்துகொள்வதும் உயிரினங்களின் இயற்கைப் பண்பு. அந்த இயல்பான பண்புகளைத் தொலைக்காத இந்தக் கிராம மக்கள், இயற்கையைப் போற்றுவதற்கு வாழும் உதாரணங்களாகத் திகழ்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT