Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அரசின் தவறான வரைபடம்!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள கடலோரப் பகுதிகள் நிர்வாகத் திட்ட வரைபடங்கள் தவறாக இருப்பதால், தமிழக கடலோரப் பகுதி சுற்றுச்சூழலும் மீனவர் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், அவற்றை நிர்வகிக்கவும் 1991ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை உருவாக்கப்பட்டது. இந்த ஆணையில் 2011ஆம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு ஐந்தாண்டும் கடலோரப் பகுதிகளில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பது பற்றிய 'கடலோரப் பகுதி நிர்வாகத் திட்ட'ங்களையும், திட்டங் கள் அமையவிருக்கும் இடங்கள் பற்றிய வரைபடமும் வெளியிடப்பட வேண்டும். இந்த வரைபடம், திட்டங்களைக் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அப்போது கடலோரப் பகுதி களில் வரவிருக்கும் வளர்ச்சித் திட்டங் களை மக்கள் எதிர்த்தால், அதைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

இந்நிலையில், இந்த அறிவிப்பாணை யின் அடிப்படையில் தமிழக அரசு கடலோரப் பகுதி நிர்வாகத் திட்டம் தொடர்பான மாவட்டவாரியான வரைபடங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைபடங்களில் பல தவறுகள் இருக்கின்றன, எனவே, இவற்றின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டால், அது கடல்சார் சுற்றுச்சூழலையும் மீனவர்களின் வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கும் என்று கூறி, மாநிலம் முழுவதும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த மீனவர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை கடலோரப் பகுதிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. முதல் பிரிவில் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பாக இருக்கும் அலையாத்திக் காடுகள், பவளத் திட்டுகள், மீன் இனப்பெருக்கத்துக்குத் தேவையான முகத்துவாரங்கள் போன்ற பகுதிகள் அடங்கும். மேலும், உயர் அலைக் கோடு, தாழ் அலைக் கோடு ஆகிய இரண்டுக்கு இடையில் உள்ள நிலமும் இப்பிரிவில் அடங்கும். உயர் அலைக் கோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எந்த வளர்ச்சிப் பணியோ அல்லது கட்டடப் பணியோ மேற்கொள்ளக் கூடாது. இரண்டாவது, மூன்றாவது பிரிவுகளில் குறிப்பிட்ட அளவு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறியதாவது: "தமிழக அரசு வெளியிட்டிருக்கும் சென்னைக் கடலோர வரைபடத்தில் இந்தப் பிரிவுகள் தவறாகச் சுட்டிக்காட்டப்பட் டுள்ளன. உதாரணத்துக்கு, கஸ்தூரிபாய் நகர், அடையார் பகுதிகள், அடையார் ஆறு இருக்கும் பகுதியில் காட்டப்பட்டுள்ளன. பெசன்ட் நகர் கடற்கரையின் வடக்கில் இருக்கும் ஊரூர் ஆல்காட் குப்பம் எனும் மீனவர் கிராமம் எம்.ஆர்.சி. நகரில் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் மீனவர்களுக்கான வீட்டு வசதி, மீன்பிடிப் பகுதிகள் பற்றிய வரையறைகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் புயல், மழை போன்றவற்றில் இருந்து தப்பிக்க சமூகக் கூடங்கள் போன்ற அவசரகாலத் தேவைகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை.

வரைபடமே தவறாக இருப்பதுடன், திட்டங்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறு" என்றார்.

கடல்சார் சுற்றுச்சூழலை மீனவர்களைக் கொண்டுதான் காப்பாற்ற முடியும் என்பதால், கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும்போது மீனவ மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் பாரதி கூறுகையில், "இந்த வரைபடம் மீனவர்களைப் பாது காப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மாறாக, மீனவர்களை வெளியேற்றிவிட்டுக் கடலோரப் பகுதிகளில் அந்நியரைக் கொண்டுவரும் முயற்சியாக உள்ளது. தூத்துக்குடி, நாகை போன்ற மாவட்டங்களில் தவறான வரைபடங்களால் அங்கு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன" என்றார்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வரைபடம் இறுதியானது அல்ல. மீனவர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் விரைவில் தீட்டப்படும். வேறு ஒரு நாளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x