Last Updated : 08 Oct, 2013 03:50 PM

 

Published : 08 Oct 2013 03:50 PM
Last Updated : 08 Oct 2013 03:50 PM

கும்கி கொடூரங்கள்

ஆன்மிகத் திருத்தலமாக அறியப்பட்டிருந்த திருவண்ணாமலை, சமீபத்தில் ‘ஆபரேஷன் மலை" என்ற மற்றொரு மலையைச் சந்தித்திருக்கிறது. 200 வனத்துறை அதிரடிப்படை வீரர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள், ஐந்து கும்கி யானைகள், 22 யானைப்பாகன்கள், எட்டு மயக்க ஊசிபோடும் மருத்துவர்கள் புடைசூழ திருவண்ணாமலை வனப்பகுதியை விட்டு ஊருக்குள் புகுந்த ஆறு யானைகளை அடக்கி ஒடுக்கிய "வீரதீர"த்துக்குப் பிறகு திருவண்ணாமலையைவிட "ஆபரேஷன்மலை" பிரபலமாகி விட்டது. பதற்றத்தையும், பரபரப்பையும் காட்சி ஊடகங்கள் நேரலை செய்ததும் இதற்கு முக்கிய காரணம்.

"வந்த வழியை மறக்காதே" என்பது பழமொழி, "வரும் வழியை மறிக்காதே" என்கின்றன யானைகள். ஆந்திராவிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு யானைகள் இடம்பெயர்ந்து செல்வது நெடுங்கால வழக்கம், 1980இல் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ‘என்.எச்.46" சாலை அமைக்கப்பட்டபோது யானை வழித்தடம் (Elephant corridor) அழிக்கப்பட்டது. ஆந்திர வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழையும் யானைகள் திரும்பவும் ஆந்திர வனப்பகுதிக்கோ அல்லது கர்நாடக வனப்பகுதிக்கோ போக முடியாதவாறு வழித்தடங்கள் மறிக்கப்பட்டுவிட்டன. எந்நேரமும் நெரிசலும், வாகன இரைச்சலும் யானைகளை அலைக்கழிக்க, அவை திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் புகலிடம் தேடின.

கல் உடைக்கும் குவாரிகளும், கள்ளச்சாராயப் பேர்வழிகளும் இந்த ஐந்து மாவட்டங்களிலுள்ள கிழக்கு மலைத்தொடர் வனப்பகுதியில் ஆட்சி நடத்திவரும் சூழ்நிலையில், குறுகிய காப்புக்காடுகளுக்குள் போதுமான உணவும் தண்ணீரும் இல்லாமல் போனதால், இரண்டாண்டுகளுக்கு முன்பு 22 வயதுள்ள பெண்யானையின் வழிநடத்தலில் ஐந்து யானைகள் உயிர் வாழ இடம் தேடின. அப்போது கரும்பு, வாழை, கேழ்வரகு, நெல் போன்ற விளைபயிர்களைச் சாப்பிட்டும், சேதப்படுத்தவும் ஆரம்பித்ததால் வேளாண் மக்கள் மன வேதனைக்கு ஆளானார்கள். வனத்துறையினர் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுவதும், யானைகள் திரும்பவும் ஊருக்குள் வருவதுமாய் இருந்தன. தொடர்ந்து இரண்டாண்டுகள் வனத்தில் நிலவிய வறட்சி, யானை வழித்தடங்கள் அழிப்பு போன்ற நெருக்கடிகள் நேர்ந்ததால் யானைகளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

இந்த பின்னணியில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த ஆறு காட்டு யானைகளைப் பிடித்து கும்கி (அடிமை யானை) பயிற்சி அளிப்பதற்காக ‘ஆபரேஷன்மலை" திட்டத்துக்கு மத்திய அரசின் இசைவும் தமிழக அரசின் சிறப்பு அரசாணையும் வழங்கப்பட்டன. இதையடுத்து சிறப்பு மயக்க மருந்து கொண்ட ஊசியை துப்பாக்கி மூலம் யானைகளின் உடலில் செலுத்தி, ஆறு காட்டு யானைகளையும் பிடிக்கும் முயற்சியில் களமிறங்கியது திட்டக்குழு.

தண்டராம்பட்டு தானிப்பாடி சாலை ஓரத்தில் யானைகளைக் கவர வாழைமரம், பலாப்பழம், மாவிலைகள், அரச இலைகள், வெல்லம், உப்பு, அரிசி மூட்டைகளைப் பரப்பி வைத்து குழு காத்திருக்க, வழக்கம்போல் உணவு தேடி யானைகள் காட்டிலிருந்து வெளியே வந்தன. மயக்க மருந்து நிரப்பப்பட்ட ஊசி ஒற்றைத் தந்தம் கொண்ட, இருபது வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடலிலும், கூட்டத்தை வழிநடத்தும் பெண் யானையின் உடலிலும் பாய, அச்சமுற்ற இரண்டு யானைகளும் கூட்டத்துடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடின. மருந்து செலுத்தப்பட்டு மயங்கிய நிலையில் தாறுமாறாக ஓடும் யானைகள், பல நேரங்களில் பள்ளத்தாக்குகளில் விழுந்து பலியாவதும் உண்டு. நல்லவேளை, அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லை!

மயக்கத்தில் கிறுகிறுத்துத் தள்ளாடி விழுந்த பெண்யானையைச் சுற்றி மற்ற யானைகள் பிளிறிய சத்தம் காட்டின் கடைசிக் குரல் போல எதிரொலித்தது. கதறக் கதறப் பிடிக்கப்பட்டு, அடிமை முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் யானைகளின் கண்ணீரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், இங்கே அதுதான் நடந்துள்ளது. ஆறு யானைகள் கொண்ட குடும்பத்தை இரண்டாக உடைத்து, முதுமலை, ஆனைமலை முகாம்களில் கற்பூர மரங்களால் செய்யப்பட்ட ‘காரல், கிரால், கரல்’ என்ற பகுதிக்குள் யானைகள் அடைக்கப்பட்டுள்ளன. யானைகள் அதை உயிர்வதைக் கூடமாகவே உணர்கின்றன. ‘பட்டினிகிடக்க வேண்டும், பணிந்துபோக வேண்டும், கட்டளைக்குக் கீழ்ழ்படிந்து காலமெல்லாமல் அடிமையாக வாழ வேண்டும், மரக் கட்டைகளைத் தூக்க வேண்டும், அம்பாரம் சுமக்க வேண்டும், ஆந்தராக்ஸ் வந்தால் சாக வேண்டும்" என்பது யானைகளுக்கும் தெரியும். ஊருக்கு வந்த இந்த யானைகளைப் பிடிக்க அரசு செய்த செலவு மட்டும் ரூ. 73 லட்சம்.

தேசியப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட யானைகள் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலையில் பிடிக்கப்பட்ட ஆறு யானைகளையும் வளர்ப்பு முகாம்களுக்கு அனுப்ப வகை செய்யும் அரசாணை, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானது என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்த கானுயிர் ஒளிப்படக் கலைஞரும், யானைஆர்வலருருமான சேஷன். பிடித்த ஆறு யானைகளையும், அவை வாழத் தகுந்த காட்டில் விடவேண்டும். கூண்டுக்குள் வைப்பது அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உணவு, தண்ணீர் கிடைக்காததாலும், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதாலும் யானைகள் ஊருக்குள் வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காட்டுப் பகுதி அருகேயுள்ள விவசாய நிலங்களில் பயிர்களை யானைகள் நாசம் செய்கின்றன என்றும், அவை மீண்டும் காட்டுப் பகுதிக்குத் திரும்புவதில்லை என்றும் பதில் மனுவில் குறீப்பிடப்பட்டுள்ளது. மனித உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவிக்கின்றன. சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் யானைகளை விட்டுவிட திட்டம் இருந்தது என்று சொல்லும் பதில் மனு, அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்த யானைகளை இரண்டு சரணாலயங்களிலும் வைத்திருப்பதுதான் சரி என்கிறது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இப்படிச் சொல்கிறது: வரம்பு மீறிப் பெருகும் மக்களின் தேவைகளுக்காக வனத்தின் பசுமைப் பரப்பு அழிக்கப்பட்டு சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதன் பொருட்டு யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது தடுக்கப்படுகிறது. திருவாண்ணாமலையில் பிடிக்கப்பட்ட ஆறு யானைகள் சரணாலயங்களில் பழக்கப்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. பொதுவான ஆராய்ச்சியாளார்கள் தரும் அறிக்கை குறித்து நீதிமன்றம் கருத்துத் தெரிவிப்பது இல்லை. எனவே, யானைகள் பழக்கப்பட்டுவிட்டன என்பதையும், இனி காட்டுக்குள் செல்ல அவை தகுதியடைந்துவிட்டன என்பதையும் உறுதிசெய்த பிறகு வனத்துறை அதிகாரிகள் காலதாமதம் இல்லாமல் அவற்றை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு.

யானைகள் வாழும் காட்டின் மையப்பகுதி உல்லாச விடுதிகளாகவும், தேயிலை, காபி, காய்கனித் தோட்டங்களாகவும் மாறிவருவதால் யானைகளின் ஓய்வு, அமைதி, இனச்சேர்க்கை போன்ற இன்றியமையாத தேவைகள் நிறைவடைவதில்லை. துண்டு துண்டாக்கப்பட்ட வனப்பகுதியைப் போலவே யானைகளின் கூட்டங்களும் சிதறிவிட்டன. இதன் காரணமாக வயது முதிர்ந்த பாட்டி யானைகள் வழிநடத்தல் குறைந்து, இளம் வயதுப் பெண் யானைகள் வழிநடத்தலில் நான்கைந்து யானைகள் குடும்பமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. உணவுத் தேவைகளுக்காக அவை விளைநிலத்தையும் நாடி வர ஆரம்பித்தன.

காலங்காலமாக காடுகளில் சுதந்திரமாக வாழ்ந்த யானைகளின் உரிமை, இந்த ஒரே சம்பவம் மூலம் பறிக்கப்பட்டு விட்டது. வலிமையுடன் வனங்களில் திரிந்த யானைகளை அகதிகளைப் போல் முகாம்களுக்கு கொண்டு சென்று பழகு யானைகளாக மாற்றி, அவற்றின் இயல்பைக் குலைப்பது இயற்கை ஆர்வலர்களைத் துயரமடையச் செய்திருக்கிறது.

இந்த விஷயத்தில் யானைகளின் இயற்கையான வாழிடத்தை மீட்டு, அவற்றின் அமைதியான வாழ்க்கைக்கு வகை செய்யாமல், யானைகளை அடக்கி ஒடுக்கி அடிமை யானைகளாக்குவது இந்தப் பிரச்சினைக்கு எந்த வகையிலும் தீர்வாகாது. ஊருக்குள் பிடிபடும் சிறுத்தைகளை வேறொரு காட்டில் அறிமுகப்படுத்துவதில், பல்வேறு சிக்கல்களை அவை சந்தித்துவருவதாகக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இயற்கையின் ஒரு பகுதியாய்த் தான் வாழ்ந்த காட்டை விட்டு யானைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சோகம் நம் காலகட்டத்தின் அவலங்களில் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x