Published : 19 Nov 2013 09:24 PM
Last Updated : 19 Nov 2013 09:24 PM
மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உலகமோ மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களைச் செய்வது, பூமி சீர்கெடும் விகிதத்தை குறைக்க உதவும்.
அப்படிப்பட்ட ஒரு செயலை தன் வீட்டிலேயே செய்துவருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த பாலமூர்த்தி. இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரிடம் இயற்கை வேளாண்மை பயிற்சி எடுத்த இவர், அதைச் செயல்படுத்தி வருகிறார்.
வீட்டின் முன்னும் பின்னும் பசுமை நிறைந்த செடி, கொடிகளை வளர்த்து வருகிறார். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகளை இவற்றில் இருந்தே அறுவடையும் செய்கிறார். தான் கற்றுக்கொண்ட இயற்கை வேளாண் நுட்பங்கள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் பயிலரங்குகளும் நடத்துகிறார். வீடுகளில் இயற்கைத் தோட்டம் அமைக்க வழிகாட்டி, அவற்றை அமைத்தும் தருகிறார்.
நாடும் வீடும் நலம் பெறும்
‘‘வருங்கால சந்ததிக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து, இயற்கையைப் பாதுகாப்பதுதான். நாம் அனுபவிப்பதை அவர்களுக்கும் விட்டுச்செல்ல ஏதாவது செய்ய வேண்டும் தானே? நானும் என் பங்கைச் செலுத்த முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் புத்தகங்கள் எனக்குப் புதிய பாதையைக் காட்டின.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது என்ற தெளிவு பிறந்தது. அதன்பிறகு அவருடைய வழிகாட்டுதலில் என் வீட்டிலும் தோட்டம் அமைத்துவிட்டேன். விதைகளையும், இலை, தழைகளை மக்கவைத்து இயற்கை உரங்களையும் நாங்களே உற்பத்தி செய்கிறோம்,’’ என்கிறார் பாலமூர்த்தி.
வீட்டில் தோட்டம் அமைத்த பிறகு வெங்காயத்தை மட்டும்தான் வெளியே வாங்குகிறார்களாம். விரைவில் வெங்காயத்தைப் பயிரிடும் திட்டமும் இருக்கிறதாம். இயற்கை ஆர்வமுள்ள பலருக்கு, பாலமூர்த்தி நல்ல முன்னுதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT