Last Updated : 21 Oct, 2014 06:55 PM

 

Published : 21 Oct 2014 06:55 PM
Last Updated : 21 Oct 2014 06:55 PM

பசுமை இதழியலுக்குப் புது வரவு

பொதுவாகவே சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தும் இதழியலும் 'ட்ரை சப்ஜெக்ட்' என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய வரவேற்பு இருக்காது என்று தவறாகக் கற்பிதம் செய்துகொள்ளப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று!

இயற்கை, காட்டுயிர், சூழலியல் போன்றவை தொடர்பான விஷயங்களை வெறுமனே அறிவியல் தகவல்களாக இல்லாமல், சிறுகதையைப் போலச் சுவாரசியமாகக் கொடுத்தால், வாசகர்கள் விரும்பி படிப்பார்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

நேஷனல் ஜியாகிரஃபிக், டவுன் டு எர்த், சாங்சுவரி ஏசியா, ஹார்ன்பில் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அவற்றில் வெளியாகும் கருத்து கள் வாசகனைக் காடுகள், இயற்கையை நோக்கி ஈர்க்கும் வல்லமை படைத்தவை.

பசுமைத் தமிழ்

அப்படிப்பட்ட இதழ்களை முன்பு தமிழில் காண்பது அரிது. ஆனால் சமீபகாலமாகப் பூவுலகு, காட்டுயிர், மின்மினி போன்ற சுற்றுச்சூழல் இதழ்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது ‘காடு' இதழ். கவனிக்கத்தக்க சுற்றுச்சூழல் புத்தகங்களை வெளியிட்டுவரும் தடாகம் பதிப்பகம், இந்த இரு மாத இதழைக் கொண்டுவருகிறது. இதழ் ஆசிரியர் ஏ. சண்முகானந்தம்.

முழு வண்ணத்தில் ஆர்ட் தாளில் அச்சிடப்பட்ட கண்கவர் ஒளிப்படங்களுடன் இயற்கை, காட்டுயிர், காடு சார்ந்த விஷயங்களை ஏந்தி வந்திருக்கிறது முதல் இதழ். பக்கங்களுடன் ஒப்பிட்டால் விலை மிகக் குறைவு.

வெவ்வேறு வண்ணங்கள்

சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் நக்கீரன், கோவை சதாசிவம், சு. பாரதிதாசன், பேராசிரியர் த. முருகவேள் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். தமிழகத்தின் முன்னணி காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் பங்களித்துள்ளனர்.

எறும்புகள், வல்லூறுகள், அலையாத்திக் காடுகள், பழங்குடிகள் எனப் பல தளங்களில் அறிவியல் தரவுகளுடனும், வாசிக்கும் சுவாரசியத்துடன் கட்டுரைகள் மிளிர்கின்றன. தமிழகத்தில் முன்பு இருந்து தற்போது அழிந்துவிட்ட கானமயிலைப் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது.

இதழின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்ணீரும் காட்டுயிர்களும்' ஒளிப்படத் தொகுப்பும், முடிவில் வெளியிடப்பட்டுள்ள கலைச்சொல் தொகுப்பும் துறை சார்ந்த அறிவை வளர்த்தெடுப்பவை.

கவனம் தேவை

இப்படிப்பட்ட துறை சார்ந்த இதழ்களை வெளியிடும்போது கலைச்சொற்களை அதிகளவில் பயன்படுத்த நேரிடும். அவற்றில் பல ஆங்கிலச் சொற்களாக இருக்கும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து மட்டுமே தரும்போது, தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உண்டு. அடைப்புக் குறிகளுக்குள் ஆங்கிலச் சொற்களையும் தருவது, சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்க்கும்.

ஆங்காங்கே தென்படும் சில பிழைகளுடன், மேற்சொன்ன பிரச்சினையும் தென்படுகிறது. இவற்றைக் களைவதுடன், இயற்கை சார்ந்து எழுதுகிற இளம் படைப்பாளிகள், ஆய்வாளர்களை எழுத ஊக்குவித்தால் இதழ் கூடுதல் மெருகைப் பெறும். இயற்கை மீது வாசகர்களுக்கு உள்ள ஆர்வத்தை இந்த இதழ் தூண்டும். ஆனால், வணிகச் சமரசமற்று அடுத்தடுத்த இதழ்களைக் கொண்டு வருவதில்தான் உள்ளது உண்மையான சவால்!

தொடர்புக்கு: 8939967179
Thadagam.comkaadu

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x