Last Updated : 25 Feb, 2017 11:19 AM

 

Published : 25 Feb 2017 11:19 AM
Last Updated : 25 Feb 2017 11:19 AM

மீனவர் வாழ்வில் புகுந்தது ஆமையா? அமீனாவா?

“ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்பார்கள். அமீனா புகுந்தால் என்ன நடக்கும் என்ற அனுபவம் மக்களுக்கு உண்டு. இப்போது தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் ஆமை புகுந்துவிட்டது. உண்மையில் ஆமையின் பெயரைச் சொல்லி அரசு என்கிற ‘அமீனா’, சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் தலையிட்டிருக்கிறது.

கடல் ஆமைகள் அழிவதாக நாளிதழில் வந்த செய்தியைப் பார்த்தவுடன், மனம் பதறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு அவசரக் கதியில் ஒரு அரசாணையை (எண். 230, செப்டம்பர்-27, 2016 தேதியிட்டது) வெளியிட்டுள்ளது.

அழிந்துவரும் கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான அந்த ஆணையின்படி, தமிழகத்தின் எட்டு கடற்கரை மாவட்டங்களில் கடற்கரையில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவுக்கு (9.26 கி.மீ.) ஜனவரி ஒன்று முதல் ஏப்ரல் 30 வரை நான்கு மாதங்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது. அதன்படி விசைப்படகு, மோட்டார் பொருத்தப்பட்ட கட்டுமரம் எதையும் பயன்படுத்தி ஐந்து கடல் மைல் எல்லைக்குள் மீன் பிடிக்கக் கூடாது.

ஆமைகளின் முக்கியத்துவம்

ஆதித் தமிழர்கள் அயல் நிலப்பரப்புகளுக்குக் கடல் கடந்து செல்ல வழிகாட்டியவை கடல் ஆமைகள் என்று நம்பப்படுகிறது. கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்திப் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை மிக எளிதாகக் கடக்கும் ஆமைகளின் பாதையைப் பின்தொடர்ந்தே, மீனவர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர். தமிழரின் பண்பாட்டு வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆமைகள், கடல் உயிரினப் பன்மையின் சமநிலைக்கு முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாகக் கடலில் மீன் இன உற்பத்திக்குத் தடையாக இருக்கும் கடற்புல், சொறி (Jelly) போன்றவற்றை ஆமைகள் உணவாகக் கொள்கின்றன. இதனால் அவற்றின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு மீன்களின் இனப்பெருக்கமும் கடல் சூழலும் சமநிலைப்படுத்தப்படுகின்றன.

மீனவர்கள் ஆமைகளைக் கொல்லாமல் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளதற்கு முக்கியக் காரணம் சடங்கு சார்ந்த நம்பிக்கை மட்டுமல்ல. அதன் சூழல் பங்களிப்பை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளதும்தான். எனவேதான் பொதுவாக வலையிலோ கரையிலோ ஆமைகள் தென்படும்போது, அவற்றை மீனவர்கள் பாதுகாக்கின்றனர். நமது கடற்பகுதியில் பல வகை கடல் ஆமைகள் காணப்படுகின்றன. அவை பேராமை, அழுங்கு ஆமை, பெருந்தலை ஆமை, ஏழுவரி ஆமை, பங்குனி ஆமை முதலானவை. இவற்றில் பங்குனி ஆமையே (Olive Ridley) தமிழகக் கடற்கரைக்கு அதிக அளவில் முட்டையிட வருகிறது.

அழிவுக்கு முதன்மைக் காரணம்

தமிழகக் கடல் பகுதி ஆமைகளின் இனப்பெருக்கத்துக்கும் முட்டையிடுவதற்கும் வசதியாக உள்ளதால் ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் அவை இங்கு வருகின்றன. பங்குனி ஆமைகள் பெரும்பாலும் கிழக்குக் கடற்கரை ஓரமாக முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. ஆமைகள் பொதுவாக ஒரே கடற்கரைப் பகுதிக்கே தன் வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் வந்து முட்டையிடும் பண்பைக் கொண்டுள்ளன. இப்படிக் கடற்கரைக்கு வருகை தரும் ஆமைகள் பல வகை பாதிப்புக்குள்ளாவதுடன், சில நேரங்களில் இறக்கவும் செய்கின்றன.

இயந்திரப் படகுகளின் மடிவலை (Trawling), இயந்திர கில்நெட் (Gill-net) வலைகளில் சிக்குவதாலும், கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகளை உண்பதாலும் ஆமைகள் இறக்கின்றன. மேலும் கடற்கரையில் முட்டையிட ஒதுங்கும் ஆமைகள், குஞ்சுகளுக்கு அச்சுறுத்தலாக நரி, நாய், பூனை ஆகியவை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆழிப்பேரலையிலிருந்து பாதுகாப்பதற்காகத் தமிழகக் கடற்கரை எங்கும் நடப்பட்ட சவுக்கு மரங்களின் வேர்களும் ஆமைகள் முட்டையிடக் குழி தோண்டுவதற்கு இடையூறாக உள்ளன. தெருவிளக்கு, வாகன வெளிச்சத்தால் ஆமைக் குஞ்சுகள் திசைமாறிச் சென்று இறப்பது, அதிகப்படியான வாகன இரைச்சல், வாகனங்களில் அடிபட்டு இறப்பது எனப் பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.

மாற்று வழிகள்?

கடற்கரையில் முட்டையிட வரும் கடலாமைகளின் அழிவுக்கும் இனப்பெருக்கத்துக்கும் இடையூறாக இருக்கும் காரணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மூன்று முக்கியக் காரணிகளுக்கும் சிறுதொழில் மீனவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய அச்சுறுத்தலாக இருப்பவை நரி, நாய், மற்ற உயிரினங்கள்தான். மாறாக ஆமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றின் முட்டையைச் சேகரித்துக் குஞ்சு பொரிப்பகங்களுக்குக் கொண்டுசேர்ப்பதிலும் மீனவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

சூழலியல் புரிதலற்று அரசு விதித்துள்ள இந்தத் தடை மீனவர்களுக்கும் ஆமைகளைப் பாதுகாக்கும் சூழலியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. மாறாக, ஆமைகளைப் பாதுகாக்க இந்தத் தடை பயன்படாது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் வலையில் சிக்கும் ஆமைகளைப் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்ட வலைகளை மீனவர்களுக்கு மானிய விலையில் அரசு வழங்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்து கின்றனர்.

மீனவ மக்களிடையே தொடர்ந்து செயல்பட்டுவரும் நித்தியானந்த் ஜெயராமனின் அறிவுறுத்தல், இங்கு முக்கியமாகப் படுகிறது. இயந்திர டிராலிங் படகுகள், இயந்திரக் கில் நெட் வகைகள், திருக்கை மீன்வலை ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும். கடற்கரை எங்கும் இரவு 10 மணிக்கு ஹைமாஸ் விளக்குகளை அணைப்பது போன்ற செயல்திட்டங்களை உள்ளடக்கி, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

பாரபட்சம்

கடல் ஆமை பாதுகாப்புக்கு என இப்படிப் பல மாற்று வழிகள் இருக்கும் நிலையில், அவை எவற்றையும் சீண்டாமல், வெறுமனே மீன் பிடிக்க அரசு தடை விதித்து அரசாணை வெளியிடுவது முரணாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு முதல் குமரியின் நீரோடிவரை கடற்கரை எங்கும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், உல்லாச விடுதிகள் எனச் சுற்றுசூழல் முழுமையாக அழிக்கப்பட்டுவருகிறது.

கடல் வளத்தை அழிக்கும் இந்நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டுகொள்ளாத அரசு சிறுதொழில் மீனவர்களின் தொழிலை ஆமைகளின் வளர்ச்சிக்கு எதிரானதாகப் பாவித்து மீன்பிடிக்கத் தடை விதிப்பது தலைகீழ் முரண். அத்துடன் கடற்கரைக்கு இனப்பெருக்கத்துக்காக வரும் ஆமைகள் மட்டுமல்லாது, கடல் வளம் அனைத்துக்குமே கேடு விளைவிக்கும் டிராலிங் மீன்பிடி முறை மீது அரசு என்ன விதமான கட்டுப்பாட்டை விதித்துள்ளது/விதிக்க உள்ளது என்ற கேள்வி தவிர்க்க முடியாது.

தடைகளும் மீனவர் வாழ்வாதாரமும்

கடலில் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே மாதம் முடியக் கிழக்கு கடற்கரையிலும் ஜூன் 15 முதல் ஜூலைவரை மேற்கு தமிழகக் கடற்கரையிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. இக்காலத்தில் இயந்திரப் படகுகள், மோட்டார் படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு ஆண்டுதோறும் 45 நாட்கள் தடைக்காலம் உள்ளது. இதைத் தவிர்த்து அக்டோபர் மத்தியில் இருந்து டிசம்பர்வரை வடமேற்குப் பருவமழையின் காரணமாகக் கடல் சீற்றத்துடன் காணப்படும்; கட்டுமரத்தைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் சிறுதொழில் மீனவர்களுக்கு இக்காலம் முழுக்க இயற்கை விதித்துள்ள மீன்பிடி தடைக்காலம்தான்.

கடலின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து விசைப்படகுகளும் பெரும்பாலும் கடலுக்குச் செல்வதில்லை. விசைப்படகு உரிமையாளர்களுக்கு இது நஷ்டம் என்றால், கூலித் தொழிலாளர்களுக்கு இது பொருளாதார ரீதியாக நெருக்கடி காலம். இதைத் தவிர்த்து ஆடி மாதத்திலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு, கடற்கரையில் மணல்அரிப்பு ஏற்படுவதால் (மடை உடைதல்) கட்டுமர மீனவர்கள் படகைக் கடலில் இறக்க அஞ்சுவார்கள். மொத்தத்தில் இயற்கை விதிக்கும் தடைக்காலம் சுமார் 2 முதல் 3 மாதங்கள். எனவே, ஆண்டுதோறும் சுமார் நான்கு மாதங்கள் மீன்பிடி தடையால் மீனவர்கள் ஏழ்மையில் வாடிவருகின்றனர்.

இப்போது ‘ஆமைகளைப் பாதுகாக்க’ என்ற பெயரில் விதிக்கப்படும் தடைக்காலம் 4 மாதங்கள். ஒட்டுமொத்தத்தில் ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் மீனவர்கள் தடைக்காலத்தில்தான் இருக்க வேண்டியிருக்கும். மீன்பிடிப்பதைத் தவிர வேறு தொழில் தெரியாத மீனவர்களுக்கு, மாற்று வாழ்வாதாரத்தைப் பற்றி அரசு சிறிய அளவில்கூடச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

எதற்கு இந்த வேகம்?

அது மட்டுமல்லாமல் அரசின் செயல்பாடுகள் மீனவர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்துவந்துள்ளன. ஏற்கெனவே, 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கக் கூடாது. சூரை முதலிய விலை அதிகம் போகும் மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று பாரம்பரிய மீனவர்களுக்கு எதிராக அரசின் மீன்பிடி கொள்கை உள்ளது. இப்போது ஆமையைக் காரணம் காட்டி ஐந்து கடல் மைல்களுக்குள் தொழில் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் இந்த முயற்சி வெறும் ஆமைகளைப் பாதுகாக்கவா அல்லது ஆமையைக் காரணம் காட்டி மீனவர்களைக் கடல் தொழிலிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையா என்று தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், ஆழிப்பேரலை என்ற பேரிடரைக்கூட மீனவர்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு கருவியாகத்தான் அரசு முன்பு முயற்சித்தது. இதையெல்லாம் மீறிச் சூழலியல் பாதுகாப்பு குறித்து அரசின் அறிவும் அக்கறையும் என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். காட்டைப் பாதுகாப்பது என்ற பெயரால் பழங்குடிகள் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதைப் போல், கடல் வளத்தைப் பாதுகாக்க என்ற பெயரில் மீனவர்களைக் கடலிலிருந்து அந்நியப்படுத்துகிறார்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பூர்வ குடிகளை அவர்களுடைய சூழலியலிலிருந்து அந்நியப்படுத்துவதன் உள்நோக்கம் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதாகவே இதுவரை முடிந்துள்ளது.

களம் காண்பார்களா?

பொதுவாகச் சமூக அரசியல் விழிப்புணர்வு, சமூக இயக்கச் செயல்பாடுகள் அதிகம் இல்லாத மீனவச் சமூகம், இப்போது தனது உரிமையைக் காப்பதற்குக் களம் காணத் தொடங்கியுள்ளனர். ஆமைகளைப் பாதுகாக்க விதிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்துக் கடந்த நவம்பர் மாதம் நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

முன்பு மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாகக் கூறிக் கடற்கரையில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்த எம்.ஜி.ஆர். அரசு முயற்சித்தது. அப்போது வாழ்விட உரிமையைப் பாதுகாக்கத் தங்கள் மானசீகத் தலைவரான எம்.ஜி.ஆரையே எதிர்த்த போராட்ட வரலாறு மீனவர்களுக்கு உண்டு என்பதை யாரும் முழுதாக மறந்திருக்க மாட்டார்கள்.

கட்டுரையாளர், மானிடவியல் ஆராய்ச்சி மாணவர்
தொடர்புக்கு: bhagath.red@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x