Last Updated : 30 Sep, 2018 04:07 PM

 

Published : 30 Sep 2018 04:07 PM
Last Updated : 30 Sep 2018 04:07 PM

சேவல் கொடி 01: கதைகளில் சீறும் சேவல்கள்

தமிழகத்தின் தனித்துவமான கோழி இனங்களை வரையறை செய்தால் அதில் சண்டைக்கோழி இனங்களுக்கான இடம் காலியாக இருப்பதைக் காணலாம். அதற்கான காரணங்களைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். தமிழில் சண்டைச் சேவல்கள் பற்றி செறிவான குறிப்புகள் இல்லை.

மிகக் குறைவான மக்களால் ஒரு சில வட்டாரங்களில் மட்டுமே பேணப்படுவது, இங்கும் அங்கும் விரவிக் கிடக்கும் தரவுகள்கூட முறையாகத் தொகுக்கப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால்  சண்டைக்கோழி இனங்கள் பற்றிய பகுப்பாய்விலும் பெரிய அளவில் ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை வெறும் தரவுகளைக் கொண்டு நிரப்புவது நிச்சயம் முழுமையானதாக இருக்காது.

காரணம் உலக அளவில் தொன்மையான நாகரிகப் புலன்கொண்ட பெரும்பான்மையான நாடுகளில் சேவல் சண்டை நெடுங்காலமாக நடந்து வருகிறது. வெறும் கேளிக்கைக்கான ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி இந்தச் சேவல் சண்டை பண்பாடுசார் கூறுகளைக் கொண்டது.

பண்டைய தமிழர்கள் வாணிபம் செய்த இடங்களிலும் சரி, புலம்பெயர்ந்த இடங்களிலும் சரி, சேவல் சண்டை இன்றும் நடைபெறுகிறது. வியட்நாம், பர்மா, கம்போடியா, சுமத்திரா, பாலித் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளை இதற்குச் சான்றாக முன்னிறுத்தலாம்.

உலக அளவில் பரவி விரிந்து உள்ள சேவல் சண்டையின் தாக்கத்தை இலக்கியங்களிலும் காணமுடியும். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் கதைகளில் சேவல் சண்டை பற்றிய சம்பவங்கள் காத்திரமாகச் சொல்லப்பட்டுள்ளன.

பாமரர்களின் விளையாட்டு என்பதைத் தாண்டி இது பல்வேறு தரப்பு மக்களின் ஆர்வத்தை ஈர்த்து உள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தான் பார்த்து, ரசித்து, வியந்த சேவல்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் ம.தவசி, சேவல் சண்டை பின்னனியில் ‘சேவல் கட்டு’ என்ற நாவல் எழுதியுள்ளார். 2011-ல் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் சண்டைச் சேவல் பற்றிய பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது.

 இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சேவல் சண்டை பாரம்பரியத்துடன் ஒப்பிடத்தக்கது தமிழகச் சேவல் சண்டைகள். இந்த அடிப்படையில் நமது சேவல் சண்டைகளை ஒரு பெரிய பரப்பில்வைத்துப் பார்ப்பது, முன்னர் குறிப்பிட்டதுபோல அது குறித்தான ஆய்வு வெற்றிடத்தை நிரப்புவதற்கான வழியும்கூட.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x