Published : 29 Sep 2018 11:40 AM
Last Updated : 29 Sep 2018 11:40 AM
பனைசார் உணவில் அனைவரும் அறிந்திருப்பது நுங்குதான். இந்தியாவில் பெரும்பாலும் கோடைக் காலத்தில் நுங்கு கிடைக்கும். மும்பையில் இதை ‘ஐஸ் ஆப்பிள்’ என்கிறார்கள். ஆந்திராவில் நுங்கு ஏழைகளின் உணவு. 2016-ல் மும்பையிலிருந்து
இரு சக்கர வாகனத்தில் குமரி மாவட்டம்வரை பயணித்தேன். அப்போது 10 நுங்குகள் கொண்ட பை 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பயணத்தில் ஒருநாள் காலை உணவே அதுதான்.
நுங்கு கோடை காலத்துக்கு ஏற்ற உணவு. சிறு பிராயத்தில் நுங்கு குலைகுலையாக வீட்டுக்கு வரும். வெட்டித் தந்துகொண்டே இருப்பார்கள். சாப்பிட வேண்டியதுதான் நமது கடமை. குமரி மாவட்டதைப் பொறுத்த அளவில் நொங்கை வெட்டித் தனிக் கண்ணாகக் கொடுக்க மாட்டார்கள். மூன்று கண்களும் திறந்திருக்கும்படியாக பாளையருவாளால் சீவிக் கொடுப்பார்கள். வெண் முகத்தில் மூன்று கண்கள் நம்மைப் பார்த்து சிரித்தபடி இருக்கும்.
நுங்கின் மூன்று கண்களையும் சாப்பிட்டு முடிக்குமுன் கை களைத்துப்போகும். வலது கையின் பெருவிரல் நுங்கினைத் தோண்டி எடுத்து சாப்பிட உதவும். பழக்கமின்மையால் நகக்கண்களின் வெகு அருகிலிருக்கும் மென்மையான் தோல் தனது பிடிமானத்தைத் தளர்த்தும், நகம் வலிக்க ஆரம்பிக்கும்.
ஒருபுறம் கை உளைச்சல் மற்றொரு புறம் வலி என இயற்கையே நுங்கு சாப்பிடுவதற்கான வரைமுறையை வகுத்துக்கொடுத்திருக்கிறது. மேலும் நுங்கு பெருமளவில் விற்பனைப் பொருளாக இருக்கவில்லை. வீட்டில் யாரேனும் அம்மை போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பனையேறியைக் கண்டு விஷயத்தைச் சொல்லி நுங்கு வாங்குவார்கள்.
நுங்கைச் சுற்றி இருக்கும் பாடை (மேல் தோல்) வயிற்றுக்கடுப்புக்கு நல்லது. ஆகவே அந்தப் பாடையுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, இது ஒரு அருமருந்து. கண்ணீல் தூசி விழுந்தாலோ சூட்டால் கண் எரிச்சலடைந்தாலோ நுங்கின் நீரை நேரடியாகக் கண்களில் உடைத்து ஊற்றுவது வழக்கம்.
நுங்கின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க பனை சார்ந்த வேறு பயன்பாடுகள் குறைந்திருக்கின்றன என்பதே எனது அனுபவம். ஏனென்றால், வருடத்தில் நுங்கிற்காக ஒருமுறை ஏறும் பனையேறிக்குக் கிடைக்கும் லாபம் வருடம் முழுவது பனைத்தொழில் செய்பவருக்குக் கிடைப்பதில்லை.
ஆனால், நுங்கு மீது உள்ள நமது மோகம் பனை மரத்தின் அடுத்த சந்ததிகளையே கருவறுக்கும் ஆற்றல் உள்ளது. ‘நோகாமல் நுங்கு தின்கிறவன்’ என்றொரு வழக்குச் சொல் தென் மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது. அது ஒரு வசை; உழைப்பின்றி உண்பவர்களைக் குறிப்பது. இன்று பலரும் நோகாமல் நுங்கு தின்கிறார்கள்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT