Last Updated : 01 Jun, 2019 11:41 AM

 

Published : 01 Jun 2019 11:41 AM
Last Updated : 01 Jun 2019 11:41 AM

தேர்தலில் ஒலித்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

மத்தியில் பா.ஜ.க. வென்று மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரேயொரு இடத்தில் மட்டும் வென்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்யாமல் இருந்ததற்குக் கூறப்பட்ட காரணங்கள் என்னவென்று பார்த்தால், சில விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்.

உழவர்கள் தற்கொலை, கஜா புயல்-ஒக்கி புயல் நிவாரணப் பணிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, காவிரிப் பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல் போன்ற காரணங்களே பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்படாததற்கு முதன்மைக் காரணங்கள் என்று ‘தி இந்து-சி.எஸ்.டி.எஸ்.-லோக்நிதி' நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாமே சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பானவை. சுற்றுச்சூழல் சாராத காரணங்களில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் உரிமை பறிபோனதும் பொள்ளாச்சி பாலியல் சித்திரவதை வழக்கும் வருகின்றன.

கேள்விக்கு உள்ளாகும் வாழ்வாதாரம்

மேற்கண்ட காரணங்களில் உழவர்கள் தற்கொலை, கஜா புயல் நிவாரணப் பணி, ஹைட்ரோகார்பன் எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் காவிரிப் பாசன மாவட்டங்கள், அவற்றைச் சார்ந்து வாழும் உழவர்கள். ‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்று போற்றப்படும் காவிரிப் பாசன மாவட்டங்கள் மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளால் சமீபகாலமாகக் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றன.

அதேபோல சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலிலும் பேரளவு பாதிக்கப்பட்டது சிறு, குறு உழவர்களின் நிலங்களே. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பதைத் தாண்டி நாட்டுக்கே உணவளிக்கும் உழவர்களின் பிரச்சினைகளாக, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாக இவை பார்க்கப்பட்டன. சுற்றுச்சூழல்-வேளாண்மை சார்ந்த பிரச்சினைகளில் அரசு அணுகுமுறை மாற வேண்டும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேநேரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க.வின் மத்திய ஆட்சி தேசிய அளவில் சுற்றுச்சூழல், வேளாண் துறையை எப்படிக் கையாண்டது என்ற கேள்வியும் வருகிறது. பா.ஜ.க. ஆட்சியின்கீழ் சுற்றுச்சூழல் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்படாமலேயே சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. காடுகள், காட்டுயிர்கள், கடற்கரைகள் என இயற்கை வளத்தை கார்பரேட் நிறுவனங்கள் எளிதாகச் சுரண்ட வழி ஏற்படுத்தப்பட்டது, பாதுகாக்கப்பட்ட காடுகள் கார்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன என்ற விமர்சனமும் துறை சார்ந்த அறிஞர்கள் மூலமாக எழுந்துகொண்டே இருந்தது.

காரணங்கள் என்னென்ன?

இதுபோன்ற விமர்சனம் எழுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அம்சங்கள்:

# மத்திய அரசிடம் சி.ஐ.ஐ. (இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு) சமர்ப்பித்த அறிக்கையின்படி, தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்குத் தடையாக இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்கள்-விதிமுறைகள் 2014-லேயே நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

# 2018-ல் வெளியிடப்பட்ட 'தேசிய காடுகள் கொள்கை வரைவு' கார்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

# அதே ஆண்டில் வெளியிடப்பட்ட 'கடலோர ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை' தொடர்பான வரைவும் நாட்டின் மிக நீண்ட-வளம் மிகுந்த கடற்கரைகளை கார்பரேட் நிறுவனங்களுக்கும் சாகர்மாலா திட்டத்துக்கும் திறந்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை எழுந்தது.

# ‘புதிய பிளாஸ்டிக் கழிவு நிர்வாக திருத்தப்பட்ட விதி'களில் பிளாஸ்டிக் உற்பத்தி, பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்தன.

# புதிய கட்டுமானங்களுக்கான தடையில்லாச் சான்றுகளை அதற்கு முன்புவரை வழங்கிவந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குப் பதிலாக, சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்து எந்தத் தெளிவும் இல்லாத உள்ளூர் நகராட்சிகளுக்கு அந்த அதிகாரம் தாரை வார்க்கப்பட்டது. இதன்மூலம் ரியல் எஸ்டேட் துறை சார்பான செயல்பாடுகள் அதிகரித்தன.

# காற்று மாசுபாட்டைக் குறைப்பது குறித்து 2018-ல் 'தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம்' என்ற திட்டம் வெளியிடப்பட்டது. அந்தத் திட்டத்தில் மாசுபாட்டைக் குறைப்பதற்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

பல கணக்கீடுகளின்படி காற்று மாசுபாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமாக இருந்திருக்கிறது, திடக் கழிவு உருவாக்கமும் கட்டுப்பாடு இன்றி அதிகரித்திருக்கிறது.

# பழங்குடிகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் ‘வன உரிமைச் சட்ட'த்தை நடைமுறைப்படுத்தும் முகமையாகப் பழங்குடி நலத் துறைக்கு முன்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

‘வன உரிமைச் சட்டம்' ஏற்கெனவே முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பழங்குடி நலத் துறைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம், சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகத்தால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய ஆட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாடுகள் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் இவை.

உயிர் பிழைக்கத் திணறும் நகரங்கள்

இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான உலக அளவிலான சில கணக்கீடுகளும் நம் நாட்டின் மோசமான நிலைமையை எடுத்துரைக்கின்றன. 2013-ல் உலகில் காற்று மாசுபட்ட முதன்மை 10 நகரங்களில் 6 இந்தியாவில் இருந்தன. அதுவே 2019-ல் 30-ல் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

முதல் பத்து இடங்களுக்குள் வருபவை: குருகிராம் (குர்காவோன், ஹரியாணா), காஸியாபாத் (ஹரியாணா), ஃபரிதாபாத் (ஹரியாணா), பிவாதி (ராஜஸ்தான்), நொய்டா (உத்தரப்பிரதேசம்), பாட்னா (பிஹார்), லக்னோ (உத்தரப்பிரதேசம்).

2016-க்கான சுற்றுச்சூழல் செயல்பாட்டுத் தரவரிசையில் 180 நாடுகளிடையே 141-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால், அதுவே 2018-ல் 177-வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிலும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டை மதிப்பிடும் பட்டியலே சுற்றுச்சூழல் செயல்பாட்டுத் தரவரிசை.

மேற்கண்ட விமர்சனங்கள், கணக்கீடுகள் எல்லாமே அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய அரசு எப்படிப்பட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அது நடக்குமா, மக்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயருமா என்பதைப் பொறுத்தே மக்களின் வருங்கால எதிர்வினை அமையும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு:

valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x