Last Updated : 22 Jun, 2019 10:53 AM

 

Published : 22 Jun 2019 10:53 AM
Last Updated : 22 Jun 2019 10:53 AM

எது இயற்கை உணவு 08: பசியைத் தீர்க்குமா இயற்கை வேளாண்மை?

இயற்கை வேளாண்மையால் ஒட்டுமொத்த உலகுக்கும் உணவளிக்க முடியுமா?

1989-ல் சோவியத் ரஷ்யா தகர்வதுவரை தனது சந்தைக்கும் இடுபொருட்களுக்கும் அந்நாட்டையே நம்பியிருந்தது ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா. சோவியத் ஒன்றியம் தகர்ந்ததும் வேறு வழி இல்லாமல், இயற்கை வேளாண் முறைகளை அந்நாடு கையிலெடுத்தது. பல பயிர் முறை, அந்தந்தப் பகுதிகளின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற பயிர்கள், ஊட்டச்சத்துள்ள உணவுத் தானிய உற்பத்தி, மரபுசாரா எரிசக்தியைக் கொண்டு வேளாண்மை என அறிவியல் புரிதலோடு வெளுத்துக்கட்டிய‌து கியூபா.

இன்று உலக அளவில் ஆரோக்கியத்திலும் சுகாதார அளவீடுகளிலும் கியூபா தலைசிறந்து விளங்குகிறது. ஒரு நாட்டின் உணவுத் தேவையை இயற்கை வேளாண்மை மூலம் மட்டுமே உற்பத்தி செய்து, உணவுப் பாதுகாப்பு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் நிலைநாட்ட முடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு கியூபா.

பல ஆண்டுகளாகவே உலகிலும் சரி, நமது நாட்டிலும் சரி, தேவையைவிட இரு மடங்கு உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தும் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பசியுடன் தினசரி உறங்கச் செல்வது ஏன்? இது உணவு விநியோகத்திலும் அரசின் திட்டமிடலிலும் ஏற்பட்ட தோல்வியே ஒழிய, உழவர்களின் உற்பத்திக் குறைவால் அல்ல.

உண்மை இப்படியிருக்க, உலக மக்களுக்குத் தேவையான உணவை விளைவிப்பதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தங்களால் மட்டுமே முடியும் எனும் மூடநம்பிக்கையைப் பன்னாட்டு நிறுவனங்களும் சில அமைப்புகளும், உலகெங்கும் உள்ள அரசுகளிடமும் மக்களிடமும் பரப்பிவருகின்றன.

இந்த உண்மையற்ற பிரச்சாரத்தை மீறி, உற்பத்தியைப் பற்றிக் கவலைப்படாமல் இயற்கை உழவர்கள் செயல்பட வேண்டும். இயற்கை வேளாண்மையால் மட்டுமே உலகுக்கு முழுமையாக உணவளிக்க முடியும் என்பதற்குப் பல ஆய்வுகள், ஆவணங்கள் இருக்கின்றன.

நமது நாட்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian council of agricultural research) பல்வேறு பயிர்களை ‘பல்வேறு இடங்களில் விளைவித்து நடத்திய' மோதிபுரம் ஆய்'வில், பல ஆண்டுகளின் முடிவில் வேதி முறையில் விளைவித்தவற்றைவிட இயற்கை முறையில் விளைவித்த எல்லா பயிர்களும் (ஆம்! எல்லாப் பயிர்களும்) அதிக விளைச்சலைக் கொடுத்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

1981 முதல் அமெரிக்காவில் ரோடேல் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடந்துவரும் ஆய்வுகளில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பயிர்களின் அறுவடை வேதி வழியில் விளைவித்ததைவிட அதிகம் - இன்றுவரை எல்லா ஆண்டுகளிலும் இது தொடர்கிறது!

இயற்கை வேளாண்மையால், அதுவும் சிறு குறு வேளாண் நிலங்கள் மூலமாகவே உலகத்துக்கான உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்ட முடியும் என்று கனடா நாட்டின் தலைசிறந்த அறிவியல் ஆய்வறிக்கைகளை வெளியிடும் ETC என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் உலக அளவில் (இந்தியாவிலும்) வீணாக்கப்படும் உணவு 40%! இதையும் சரியாகக் கையாண்டால், உணவு உற்பத்தி என்பது நாம் நாள்தோறும் யோசித்துக்கொண்டிருக்கும் அளவுக்குப் கவலைக்கிடமான பெரிய பிரச்சினையே இல்லை என்பது புரியும்.

கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்

தொடர்புக்கு: organicananthoo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x