Published : 16 Sep 2014 01:12 PM
Last Updated : 16 Sep 2014 01:12 PM

சி.எஃப்.எல். விளக்கு சுற்றுச்சூழல் நண்பனா?

அச்சம் என்ற இருளில் இருந்து மனிதனை விடுபடச் செய்தது, நெருப்பு தந்த வெளிச்சம். எடிசன் மூலமாக மின்விளக்காக மாறிய அந்த நெருப்பு இன்று பல்வேறு வடிவங்களில் உலகுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நெருப்பை ஆதி வடிவத்துடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு அதிகமான வெளிச்சத்தை விளக்குகள் உமிழ்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் அவை காரணமாக இருக்கின்றன.

குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதும், புவி வெப்பமடைதல் (global warming) பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பதும் நாம் அறிந்ததுதான்.

அதற்கு மாற்றாக சி.எஃப்.எல். (Compact Fluorescent Lamps) விளக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அரசே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததால், மக்கள் மத்தியில் இந்த வகை மின்விளக்குகள் பிரபலமடைந்துள்ளன.

அரசு ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி ஒரு படி மேலே போய், வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சி.எஃப்.எல். மின்விளக்குகளைக் கொடுப்பதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 1.2 கோடி விளக்குகளை விநியோகமும் செய்தது.

இதுபோன்ற முயற்சிகளால் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருந்த குண்டு பல்புகள், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுங்கிக் கொண்டிருக்கின்றன.

புவி வெப்பமடைதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உலகம் முழுவதும் முனைப்பு காட்டப்படும் இந்த வேளையில், சுற்றுச்சூழலுக்கு நட்பான இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். அதேநேரம் சி.எஃப்.எல்.

பல்புகள் மின்சாரச் சிக்கனம் செய்வதைத் தாண்டி, சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

மினமாட்டா விபத்து

சி.எஃப்.எல். பல்புகளில் பாதரசம் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது பலருக்கும் தெரியாது. இந்த வகை பல்புகளில் 4 மில்லிகிராம் வரை பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. பாதரசம் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் நண்பனல்ல.

ஜப்பானின் மினமாட்டா (Minnamata) நகரில் பாதரச மாசு கடலில் கலந்ததன் காரணமாக, மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டது. மீன்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மிதந்தன.

கடல் உணவைச் சாப்பிட்டவர்களுக்கு இன்னதென்று அறிய முடியாத நோய்கள் ஏற்பட்டன. குறிப்பாக நுரையீரல், சிறுநீரகம், மைய நரம்பு மண்டலப் பாதிப்பால் பல்வேறு நோய்களால் மக்கள் பீடிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம்தான் பாதரசம் என்ற வேதிப்பொருளின் நச்சுத்தன்மை குறித்து உலகில் விழிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு உலகம் முழுவதும் பாதரசக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கின.

அப்புறப்படுத்துதல்

இத்தகைய பின்னணியில்தான் சி.எஃப்.எல். விளக்குகள் தொடர்பான பிரச்சினையைப் பார்க்க வேண்டும். எரிந்து கொண்டிருக்கும்வரை இந்த விளக்குகளில் இருந்து பாதரசம் வெளியேறுவதில்லை.

பழுதான பின்னர்தான் பிரச்சினையே. பழுதடையும் விளக்குகள் பெரும்பாலும் உடைக்கப்படுவதால், அதில் உள்ள பாதரச நஞ்சு வெளியேறி, சுற்றுப்புறத்தில் கலக்கிறது.

இதில் நேரடியாகப் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் குப்பைக் கூளங்களில் குப்பை சேகரிக்கும் துப்புரவாளர்களே. இந்த மின்விளக்குகளை மறுசுழற்சி (Recycling) செய்ய முடியும் என்றாலும், அது தொடர்பாகப் போதுமான விழிப்புணர்வு இல்லை.

சாதாரணமாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள். இதனால் பத்தோடு பதினொன்றாகச் சுற்றுச்சூழலை அவை நாசம் செய்துகொண்டிருக்கின்றன.

மறுசுழற்சி

சி.எஃப்.எல். பல்புகளில் கலந்திருக்கும் பாதரசம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான வேதிப்பொருள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் தேவை. அப்போது அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஓரளவாவது ஏற்பட்டுவிடும்.

இதை அரசு முன்னின்று நடத்த வேண்டும். உதாரணமாக, புகையிலையால் ஏற்படும் தீங்குகளை விளக்க சிகரெட் அட்டைகளிலேயே எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் புகையிலையின் நுகர்வு குறையவில்லை என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், புகையிலையின் தீங்குகள் குறித்துச் சாதாரண மக்களும் அறிந்துகொண்டிருப்பதை மறுக்க முடியாது. இந்தப் பல்புகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த, அவற்றின் அட்டைகளில் பாதரசம் குறித்த எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்.

அதேபோல், பல்பு தயாரிப்பு நிறுவனங்கள் மறுசுழற்சி மையங்கள் அமைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பயன்படுத்தி முடிந்த பல்புகளை இந்த மையங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு அதிகம் என்பதால், இந்தச் செயலைச் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும்போது சி.எஃப்.எல். மின்விளக்குகள் சுற்றுச்சூழலின் இணைபிரியாத தோழனாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x