Published : 22 Apr 2014 10:42 AM
Last Updated : 22 Apr 2014 10:42 AM

சூழலியல் மாசு: வேதி நச்சுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியுமா?

நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாய்மார்களின் உடல்கள், ஏற்கெனவே வேதிக் குப்பைக்கூடைகளாகிவிட்டன. தாயின் உடலை அடைந்த வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாய் சுமக்கும் கருவையும் சென்று சேர்கின்றன. இந்த நிலையில் நம் தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போதே உடலில் தங்கிய நஞ்சுடனே அவர்கள் பிறக்கிறார்கள். தாயின் தொப்புள்கொடி, தாய் வயிற்றில் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடம் போன்றவை வேதி நஞ்சுகளால் நிறைந்துள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

தொழில்மயமாக்கத்தாலும் நுகர்வு கலாச்சாரத்தாலும் சூழல் சீர்கேடு அடைந்துள்ள நகர்ப்புறங்களில் பிறக்கும் குழந்தைகள் கிராமப்புறக் குழந்தைகளைவிட அதிகமான வேதித் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இன்று நகர்ப்புறக் குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிப்பு, ஆட்டிசம், பலவகைக் கற்றல் குறைபாடுகள் போன்றவை பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழலில் இருந்தும் தாயின் உடலில் இருந்தும் இக்குழந்தைகளை அடையும் தொழிற்சாலை மாசுகள், இப்பிரச்சினைகளுக்குக் கூடுதல் காரணமாக இருக்குமா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

வாழ்க்கைக்கு ஓர் அன்பளிப்பு

நெதர்லாந்தில் கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பும், உலகளாவிய இயற்கை நிதியம் (டபிள்யு.டபிள்யு.எஃப்.) பிரிட்டன் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் கடுமையானது என்பது தெரியவந்துள்ளது. ‘வாழ்க்கைக்கு ஓர் அன்பளிப்பு’ என்ற பெயரில் 2005-ல் வெளிவந்த அந்த அறிக்கை, இப்படிப்பட்ட வேதிப்பொருட்களின் உற்பத்தியையும் விற்பனையையும் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேற்கண்ட ஆய்வில் 35 வேதிப் பொருட்கள் பட்டியலிடப்பட்டு, இதில் எத்தனை வேதிப்பொருட்கள் தொப்புள்கொடி ரத்தத்தில் உள்ளன என்று பரிசோதிக்கப்பட்டது. அனைத்துத் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளிலும் குறைந்தபட்சம் 5 முதல் 14 வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவற்றில் டெஃப்லான் போன்ற ஒட்டாத வேதிப்பொருட்கள், தீ தடுப்பான்கள், நறுமண வேதிப்பொருள்கள், பால்நிலையை பிறழ்த்தும் வேதிப்பொருட்கள். அழகுசாதனப் பொருட்களில் பயன்படும் வேதிப்பொருட்கள், நெகிழி வேதிகள், நீர்புகாப் பூச்சுக்குப் பயன்படும் வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும்.

அச்சுறுத்தும் வேதிமாசுகள்

மேற்கண்ட வேதிப்பொருட்களில் நச்சுத்தன்மை உடைய ஆல்கைல் ஃபீனால்கள், டிரைகுளோசான், செயற்கை கஸ்தூரிகள், பெர்ஃபுளோரினேற்ற சேர்மங்கள், தாலேட்டுகள், டி.டி.ட்டி போன்ற சேர்மங்களும் அடங்கும். நாம் பயன்படுத்தும் நெகிழிகள், டிடர்ஜென்டுகள், தூய்மைப்படுத்தும் பொருட்கள், வேளாண் களைக்கொல்லிகள், பற்பசை, குளியல் சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், துணிகள், பொம்மைகள், வினைல் தரை, மின் கேபிள்கள் போன்றவற்றின் தயாரிப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றை நாம் பயன்படுத்துவதன் மூலம், அவற்றிலுள்ள நச்சுகள் நம்மை வந்தடைகின்றன.

இவற்றில் ஆல்கைல் ஃபீனால்கள் பாலியல் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும். டிரைகுளோசான், ‘சூடோமோனஸ் எருஜினோசா’ என்னும் மருந்து, எதிர்ப்புத்தன்மையை உருவாக்கி நோயாளிக்கு மருத்துவமனைத் தொற்றுகளை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கக்கூடியது. செயற்கை கஸ்தூரிகள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. பெர்ஃபுளோரினேற்ற சேர்மங்கள் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தைப் பாதிக்கக்கூடியவை. தாலேட்டுகள் ஆண் குழந்தைகளில் விந்து பாதிப்பையும், பெண் குழந்தைகளில் முன்கூட்டியே மார்பக வளர்ச்சிப் பிரச்சினையையும் உண்டுபண்ணுகின்றன. டி.டி.ட்டி. புற்று நோயையும், இனப்பெருக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.

ஆய்வில்லை, தடையுமில்லை

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் செயற்கை வேதிப்பொருட்களால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகள் ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உரத்த குரலுக்குக் கட்டுப் பட்டு, அங்குள்ள அரசுகள் சில ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கின்றன.

ஆனால், நம் நாட்டில் முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. சுற்றுச்சூழல் இயக்கங்களும் இன்னும் வலுப்பெறவில்லை. பாதிப்புகள் இங்கு மேலும் ஆழமானதாக இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் என ஊகிக்கலாம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் வாழ்வு கவலைக்குரியது தான்.

‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளை இதற்கும் பொருத்திப் பார்த்து எதிர்காலச் சந்ததியினரை வேதிக் குப்பைத்தொட்டிகளாக உருவாக்கும் மாசடைந்த சுற்றுச்சூழல் அமைப்பை மாற்ற, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

- தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் ஆர்வலர்

தொடர்புக்கு: devikapuramsiva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x