Published : 02 Feb 2019 12:10 PM
Last Updated : 02 Feb 2019 12:10 PM
பனைமரம் குழந்தைப் பருவத்தின் விளையாட்டுத் தோழன் என்பதைத் தமிழகக் குழந்தைகள் அறிவார்கள். பனை ஓலையில் செய்யப்படும் பல்வேறு பொருட்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களோடு இணைந்து வருவது சிலிர்ப்பான ஒன்று. முதல் உலக நாடுகளைப் போல் பொம்மை விற்கின்ற உலகில் நாம் வாழாமல் நமக்குத் தேவையான பொம்மைகளை நாமே தயாரித்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பது நமது தனிச்சிறப்பு. பனை மரம் அவ்விதத்தில் நமது மூதாதையர்கள் தொட்டுணர்ந்த ஒரு விளையாட்டுத் தோழன் எனலாம்.
குழந்தைகள் தங்களுக்கான விளையாட்டுப் பொருட்களைச் செய்துகொள்ளும்போது அவர்கள் அறிவுக்கூர்மை அதிகரிக்கிறது. சூலியலுடன் உள்ள தொடர்பு நெருக்கமடைகிறது. அவதானிக்கும் தன்மை மேலோங்குகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் துளிர்க்கிறது. பல்வேறு பின்னல்களை அவர்கள் செய்கையில் ஒருங்கிணைக்கும் திறன் கூடுகிறது. பல்வேறு புதிர்களுக்கான விடைகளை அவர்களே கண்டடையும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இன்றைய சூழலில் இவை அனைத்துமே நமது குழந்தைகளுக்குக் குறைவாக உள்ளது. பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் பென்சில்கள், பேனாக்கள், வர்ணங்கள் அனைத்துமே எங்கிருந்தோ வந்து குழந்தைகளின் வாழ்வில் படைப்பாற்றலை ஊக்குவிப்பதாக நாம் நம்பத் தொடங்கி இருக்கிறோம்.
ஆனால், ஒரு முப்பரிமாண வடிவமைப்பு என்று வருகையில் ஓலையின் சாத்தியங்கள் அளப்பரியவை, எளிதானவை, மலிவானவையும்கூட. நமது சூழலிலிருந்து பெறப்படும் ஓலை போன்ற பொருட்களால் செய்யப்படும் விளையாட்டுப்பொருட்கள்தாம் நமது குழந்தைகளை இன்னும் சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகின்றன.
இவ்விதச் செயல்பாடுகளே அவர்களுக்குச் சூழலியல் களச் செயல்பாட்டை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறு தனித்தன்மைகளைப் பெறும் குழந்தைகள் அனைவருமே சர்வதேச அளவில் நமது பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
இன்று நாம் சந்திக்கும் முக்கிய சவாலாக இருப்பது, பனையோடு தொடர்புடையவர்கள் நம்மிடம் அருகியிருப்பது. பனை சார்ந்த எந்த ஒரு விளையாட்டுப் பொருளையும் செய்யும் திறன் கொண்ட பெற்றோர்களையோ ஆசிரியர்களையோ காண்பதரிது. இச்சூழலில் பனை ஓலைகளில், நமது குழந்தைகளுக்கு முப்பரிமாண கலை வடிவங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
பனை ஓலையின் ஒரு சிறு இணுக்கை எடுத்து, பின்னி, முடைந்து, கத்தரித்து, ஐந்தே நிமிடத்தில் அழகிய எறும்பு ஒன்றைச் செய்கிறார், பனையோலைகளில் பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் செய்யும் வாணி. ஓலையும் கத்திரிகோலும் சிறிது பயிற்சியும் இருந்தால் 15 நிமிடத்தில் ஒரு அழகிய பலையோலை எறும்பை குழந்தைகளுக்காக உருவாக்க அவர் கற்றுத் தருகிறார். குழந்தைகளுக்குப் பனை ஓலையில் பொம்மைகளைச் செய்து கொடுப்பதில் வல்லவர் இவர்.
குழந்தைகளுக்குப் பனையோலையில் பல்வேறு பொம்மைகளைச் செய்வது எப்படி என்று தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறார். ஜவ்வாது மலை அடிவாரத்திலுள்ள குக்கூ காட்டுபள்ளியைத் தனது களமாகக் கொண்டு இயங்கும் இவர், பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் குழந்தைகளுக்குச் செயல்முறைப் பயிற்சிகளைக் கொடுத்துவருகிறார். குழந்தைகளின் மகிழ்ச்சியையே சிறந்த பரிசாக கருதும் இவர், குழந்தைகளால் சூழப்பட்டே எப்போதும் இருக்கிறார்.
வாணியின் திறமைகளைப் பயன்படுத்துவது பனை மரங்களின் எதிர்காலத்துக்கும் குழந்தைகளின் படைப்பாற்றலுக்கும் உறுதுணையாக இருக்கும். இத்திறமைகளை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் 7418892043 என்ற எண்ணில் அவரைத் தொடர்புகொள்ளலாம்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT